விவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க கூடாது

தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி எஸ் ஹமீது வெளியிடும் அறிக்கை

ஒரே அமர்வில் மூன்று முறை விவாகரத்து செய்கிறேன் என்று சொல்லும் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வோர் குறித்து புதியதொரு சட்ட முன்வடிவை மத்திய அரசு தயாரித்து அதனை மாநிலங்களின் கருத்திற்காக அனுப்பியுள்ளது.

ஒரே அமர்வில் மூன்று முறை விவாகரத்துச் செய்கிறேன் என்று சொல்லும் முத்தலாக் முறை திருக்குர்ஆன் வகுக்கும் நெறிமுறைகளுக்கு முரணானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த முறைக்கு எதிராக மக்களிடையே பெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யவும் அந்த முறையில் விவாகரத்துச் செய்வோரை சமூக புறக்கணிப்பு செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் உறுதி எடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்சூழலில் முத்தலாக் முறையில் விவாகரத்துச் செய்வோருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை உட்பட பல குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு புதிய சட்டத்தை வரும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வர உத்தேசித்துள்ளது தேவையில்லாத முயற்சியாகும். இந்த புதிய சட்டம் முஸ்லிம்களை பழிவாங்க பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மத்திய அரசு இச்சட்ட முன்வடிவை தயாரிப்பதற்கு முன்பு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அறிஞர்களிடம் கலந்தாலேசித்திருக்க வேண்டும். இது தான் இதுவரை நடைமுறையில் இருந்த முறைமையாகும். 1937ல் இயற்றப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் ஷரியத் (நடைமுறைச் சட்டம்), 1939ல் இயற்றப்பட்ட முஸ்லிம் திருமணம் கலைப்புச் சட்டம்  மற்றும் 1986ல் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் (விவாகரத்தின் போது ) உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை முஸ்லிம் அறிஞர்களை கல்நதாலோசித்த பின்னரே இயற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ள இந்த மரபை மோடி அரசு மதிக்காமல் தன்னிச்சையாக இந்த சட்ட முன்வடிவை தயாரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மோடி அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள இந்த முத்தலாக் குறித்தான புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு வலிமையாக எதிர்த்து தனது கருத்தை மத்திய அரசிடம் பதிவுச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இச்சட்டம் வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் போது காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.