சத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம் (சமுதாயக் கண்மணிகளே)

தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த மடல் உங்களை வளமான இஸ்லாமிய உணர்வு களுடன் சந்திக்க பிரார்த்தித்துத் தொடங்குகிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனும் நம் சமுதாய இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து அல்லாஹ்வின் பேரருளால் சாதனைகளை செய்து வருகின்றது. சோதனைகள் நமது தாய் கழகத்தை புடம் போட்ட தங்கங்களின் உறைவிடமாவே மாற்றி வருகின்றது. எந்தவொரு துரோகமும் நமது கழகத்தின் வீரியமிக்க செயல்வீரர்களை தளர்ந்து போக வைத்ததில்லை. தங்கத்தை புடம் போடும் போது சில கழிவுகள் உதிரத்தான் செய்யும். ஆனால் தங்கம் மென்மேலும் தூய்மை அடைந்து ஒளிரும். இதுவே தமுமுக வரலாற்றில் ஒவ்வொரு சோதனைக்கு பிறகு ஏற்பட்ட வரலாற்று நிகழ்வாகும்.

1998ல் கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றது. கழகத்தின் அனைத்து மட்ட தலைவர்களெல்லாம் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமுமுக தடைச் செய்யப்படும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. ஆனால் கருப்பு வெள்ளை பட்டாளம் சளைக்காமல் களத்தில் நின்றது. தமிழ் நாட்டில் வேறு யாரும் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கோவை கலவரம் மற்றும் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினோம்.

பிற சமய மக்களுடன் நல்லுறவும் அவர்களுக்கான சேவையில் தமுமுக தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்டது இந்த சோதனைக்கு பிறகு தான்.

1999ல் சென்னையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற போது வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கைது படலம் தொடங்கியது. இந்த சோதனையையும் இறைவனின் அருளால் சாதுரியமாக கையாண்டு ஜீலை 4 1999ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாநாடு தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது.

2004ல் ஒரு சிலர் நம்மை விட்டு விலகிச் சென்றார்கள். தமுமுகவை அழித்துவிடுவோம் என்று சவால் விட்டுச் சென்றார்கள். ஆனால் அந்த ஆண்டு தான் டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசலுக்கு நீதி கோரும் போராட்டம் தலைநகர் டெல்லியிலும் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்திவிட்டு அறைக்கு திரும்பும் தருவாயில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திலிருந்து நமக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பிரதமரை அவரது இல்லத்தில் அன்று மாலை சந்தித்தோம். பள்ளிவாசலையும் இழந்தோம், பள்ளிவாசலை இடித்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடும் வகையில் முந்தைய வாஜபாய் அரசு வழக்கை நீர்த்து போக வைத்துள்ளது. இது நியாயமா என்று கேட்டோம். பாபர் பள்ளிவாசல் இடிப்பு இந்திய வரலாற்றில் ஒரு வேதனைக்குரிய நிகழ்வு என்று சொன்ன பிரதமர் நமது கோரிக்கை பரிசீலிப்பதாக குறிப்பிட்டார். டெல்லி போராட்டம் முடிந்து சென்னை ரயில் திரும்பி வந்து சேரும் நிலையில் அன்றைய காலை நாளிதழ்கள் பாபர் பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்ற செய்தி வந்தது. இதன் காரணமாக இன்று வரை அவர்கள் பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். அதே டிசம்பர் 2004ல் சுனாமி தாக்குதலின் போது நமது தொண்டர்கள் அனைத்து மக்களும் பாராட்டத்தக்க சேவைகளை ஆற்றினர். தமுமுகவிலிருந்து அந்த சிலர் ஏப்ரல் 2004ல் வெளியேறிய பிறகு பரந்து விரிந்து மிகவும் பலம் பெற்ற அமைப்பாக இறையருளால் பரிணமித்தது. அழிப்போம் என்று சொன்னவர்களின் எண்ணம் கருகியது. 2015ல் சில சுயநலமிகள் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து வெளியேறினார்கள். சொந்த அடையாளத்தை இழந்து இன்று வாடகை அடையாளத்துடன் அவமானப்பட்டு நிற்கிறார்கள். போட்டோ சாப் கலையில் மட்டுமே விற்பன்னர்களாக திகழ்ந்து தங்களை தாங்களே இழிவுப்படுத்திக் கொண்டு நிற்கின்றனர்.

அமைப்பின நலன், சமுதாய நலன் இவற்றைவிட தன் நலனே பிரதானமாக கொண்டு மந்தையை விட்டு வெளியேறியவர்களால் தாய் கழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. கடந்த ஒரு மாதத்திற்குள் 25 மாவட்டங்களில் எழுச்சியுடன் பொதுக் குழுக்கள் நடைபெற்று முடிந்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு தினமாக நாம் அறிவித்துள்ள டிசம்பர் 6 அன்று நடைபெறும் போராட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எழுச்சியுடன் தயாரிப்பு பணிகள் தமிழகத்தின் மூலை மூடுக்குகளிலெல்லாம் நடைபெற்று வருகின்றன.

இந்த ஒரு மாதத்திற்குள் தாய் கழகத்திற்கு தங்களை சாரை சாரையாக மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள். தங்கள் நிழலை தவிர வேறு யாரையும் சுயநலப் புதிய பாதையில் பயணம் மேற்கொண்டவர்களால் அழைத்துச் செல்ல இயலவில்லை.

தமுமுக காரன் தன்னையே தியாகம் செய்துக் கொண்டு சமுதாய பணி ஆற்றுபவன். கிளுகிளுப்புக்காரனுக்கு மயங்கி தாயின் இடுப்பிலிருந்து துள்ளிக் குதித்து ஒடுபவன் அல்ல கருப்பு வெள்ளைக்கு சொந்தக்காரன். ஒரு சிலர் அப்படி கடந்த காலங்களில் சென்றவர்கள் தாயின் மகிமையை இறங்கிச் சென்ற பிறகு உணர்ந்து மீண்டும் தாயிடம் திரும்ப தாய் உச்சி முகர்ந்து வாரி அரவணைத்துக் கொண்டு வருகிறாள்.

எத்தனை சோதனை வந்தாலும் அதனை உறுதியுடன் எதிர்கொண்டு முன்பை விட வலிமையாக தொண்டாற்ற தமுமுகவை இறைவன் பலப்படுத்தி வருகிறான். இதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் இரண்டு பண்புகள் 1. தக்வா என்ற இறையச்சம் 2. இத்ஆத் என்னும் தலைமைக்கு கட்டுப்படுதல். இந்த இரண்டு பண்புகளை தான் இறைத்தூதர்கள் தம் மக்களுக்கு போதித்தார்கள். இந்த இரண்டு பண்புகள் தான் வெற்றிப் பாதையின் அடிப்படையாகும்.

செவிசாய்த்தோம் கட்டுப்பட்டோம் என்று கோட்பாட்டை லட்சியமாக கொண்டு நாம் செயல்படும் போது நிச்சயம் அல்லாஹ் நமக்கு உறுதுணையாக இருப்பான். இறைவன் திருக்குர்ஆனில் நான்கு இடங்களில் (2:285) (4:46) (5:7) (24:51) “ஸமிஃனா வஅதஃனா - செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம்” என்ற சொற்பிரயோகங்களைப் பயன் படுத்துகின்றான். இவ்வாறு கூறியவர்களைப் புகழ்ந்துரைக்கின்றான். ..இந்த வசனங்களில் ஒன்றில் “ஸமிஃனா வஅஸைய்னா - செவிமடுத்தோம் மாறுசெய்தோம்” என்று கூறிய யூதர்களை அல்லாஹ் கண்டித்தும் அவர்களை சபித்தும்உள்ளான்.
மாபெரும் ஆட்சியாளர் உமர் (ரலி) சொன்னார்கள்:

வெற்றியின் இரு பண்புகளில் ஒன்று செவிமடுத்தல், மற்றையது கட்டுப்படுதல். “கட்டுப்பாடு இல்லாத இடத்தில் கூட்டமைப்பு இல்லை, கூட்டமைப்பு இல்லாத இடத்தில் இஸ்லாம் இல்லை”
எனவே இந்த பண்புகளை மேலும் வளர்த்துக் கொள்ள நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக. நீங்கள் அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் நீங்களே மேலோங்கியிருப்பீர்கள் என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு இலக்கணமாக தொடர்ந்து ஒரே சத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம்.

அன்புடன்
உங்கள் தொண்டன்
எம்.எச்.ஜவாஹிருல்லா.