கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் காட்டிய பண்பாட்டை பின்பற்றுவோமாக

தமுமுக

தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முஸ்லிம்களின் இரண்டு திருவிழாக்களில் தியாகத் திருநாள் ஒன்று. மற்றொன்று ஈகைத்திருநாள் ஆகும்.


இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் மாபெரும் தியாகங்களை நினைவு கொள்ளும் வகையில் தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்த பெருநாள் கொண்டாடப்படும் தருணத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை புரிந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.


40 நூற்றாண்டுகளாக போற்றப்படும் ஆளுமைகள்


40 நூற்றாண்டுகள் சென்ற பிறகும் கூட இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களது ஆளுமையும் கொள்கையும் பல்லாயிரம் கோடி மக்களால் இன்றும் போற்றப்படுகின்றது. இறைவனின் நண்பர் என்று போற்றப்பட்ட இறைத்தூதர் இப்ராஹீம் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்ட அரும்பெரும் தியாகங்களை புரிந்தார்கள். ஈராக்கில் கொடுங்கோலன் நம்ரூத்துக்கு எதிராக துணிச்சலாக நெஞ்சு நிமிர்த்தி தனது ஏகத்துவக் கொள்கையை பறைச்சாற்றினார்கள். பல்வேறு சோதனைகளை அவர்கள் எதிர்கொண்டாலும் கொண்ட கொள்கையில் சமரசம் இல்லாமல் உறுதியாக இருந்தவர் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள்.


பாலைவனத்தில் சோதனையை வென்ற இப்ராஹீம் குடும்பம் 95வது வயதில் இறைத்தூதர் இப்ராஹீம் - ஹாஜரா ஆகியோருக்கு பிறந்த இறைத்தூதர் இஸ்மாயீலும் பிறந்தது முதல் சோதனைகளை எதிர்கொண்டவர்கள். ஹிஜாசில் பாலைவனத்தில் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அவர்களது தாயார் ஹாஜராவும் சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி அடைந்தார்கள்.

சோதனைகள் இத்துடன் முடிவடையவில்லை.

இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களுக்கு மகன் இஸ்மாயீல் அவர்களை அறுத்து பலியிட வேண்டும் என்று இறைக் கட்டளை வருகின்றது. அன்புடன் வளர்த்த மகனை இறைக்கட்டளையை நிறைவேற்றும் வகையில் அறுத்து பலியிட இப்ராஹீம் தயாராகிவிட்டார். மகனிடமும் இந்த செய்தியை சொல்லி அவரது விருப்பத்தை கேட்கிறார். மகனும் இறைக்கட்டளையின் அடிப்படையில் தன்னை தியாகம் செய்ய முன்வருகிறார். இறைவன் வைத்த சோதனையில் தந்தையும் மகனும் வெற்றிப் பெற்ற பிறகு இறைவன் இறுதியில் இஸ்மாயீலுக்கு பதிலாக ஆட்டை பலியிட கட்டளையிடுகிறான். இதனை நினைவுக் கொள்ளும் வகையில் கொண்டாடப்படுவதே தியாகத் திருநாள் ஆகும்.


இறைத்தூதர் இஸ்மாயீலும் அவர்களது தாயார் ஹாஜராவும் ஹிஜாஸில் அந்த பாலைவனத்தில் அனுபவித்த பல்வேறு சோதனைகளை நினைவுப்படுத்தும் வகையில் தான் இன்று மக்கா நகரில் உலகமெங்கிலிருந்தும் வரும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுகின்றனர்.

நவீன நம்ரூத்களின் கொடுங்கோன்மை

இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறது. கொடுங்கோலன் நம்ரூத் போன்ற நவீன நம்ரூத்திய ஆட்சியாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தமது கொடுங்கோன்மையை கட்டவிழ்த்து வருகின்றார்கள். இத்தனை கொடுங்கோலர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம்,இஸ்மாயீல் மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோர் காட்டிய பண்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது எத்தனை சோதனைகள் வந்த போதினும் அவர்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கையும், இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் மன வலிமையையும் சோதனைகளை எதிர்கொள்ளும் வியக்கத்தக்க பொறுமையையும் கொண்டிருந்தார்கள். இறுதியில் நம்ரூத்கள் மண்ணை கவ்வினார்கள். இந்த மாபெரும் இறைத்தூதர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக கோடான கோடி மக்களால் நிளைவுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இறைத்தூதர்களுக்கு இருந்த கொள்கை உறுதியையும் சோதனைகளை எதிர்கொள்ளும் மனவலிமையையும், அநீதியை எதிர்கொள்ளும் துணிச்சலையும் நம் அனைவருக்கும் வல்ல இறைவன் தர பிரார்த்திப்போமாக.

நமது நாட்டு மக்களிடையே ஒற்றுமையுணர்வும், சகோதரத்துவமும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலையும் ஏற்பட எல்லா தியாகங்களையும் செய்வதற்கு இந்த தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
உங்கள் தொண்டன்
எம்.எச். ஜவாஹிருல்லா