காஜிகளின் திருமண பதிவுகளை கணிணிப்படுத்த வேண்டும் புதுச்சேரி மாநில வக்ப் வாரியத்திற்கு தமுமுக கோரிக்கை

தமுமுக

புதுச்சேரி மாநில வக்ப் வாரிய செயலர் சுல்தான் அப்துல் காதர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் இஸ்லாமிய திருமணங்களை இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி புதுச்சேரி மாநில வக்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட டவுன் காஜியார்கள்,ரீஜினல் காஜியார்கள், நாய்ப் காஜியார்கள் மற்றும் முத்தவல்லிகளால் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அந்த திருமணம் முறைப்படி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்று, திருமணம் பதிவு செய்யப்பட்டு வரும் நிகழ்வு சுமார் 150 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது, பதிவு செய்யப்பட திருமண பதிவு ஆவணங்கள் சம்பந்தப்பட்ட டவுன் காஜியார்கள்,ரீஜினல் காஜியார்கள், நாய்ப் காஜியார்கள் மற்றும் முத்தவல்லிகளின் பராமரிப்புகளிலேயே இருந்து வருகிறது.


தற்பொழுது அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளும் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பட்டா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் ஸ்கேன்னிங் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல், பதிவு செய்யப்பட்ட திருமண பதிவேடுகளை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் வக்ப் அலுவலகத்தில் தனியாக ஒரு அலுவலகம் அமைத்து, அதற்கென தனியாக ஒரு ஊழியரையும் நியமித்து, அந்த அலுவலகத்தில் அம்மாவட்டத்தில் உள்ள டவுன் காஜியார்கள்,ரீஜினல் காஜியார்கள், நாய்ப் காஜியார்கள் மற்றும் முத்தவல்லிகளால் நடத்தி வைக்கப்பட்ட திருமண பதிவேடுகள் அனைத்தையும் முறையாக பாதுகாத்தும், மேலும் அந்த திருமண பதிவேடுகளை ஸ்கேன்னிங் செய்யுமாறு தொடர்ச்சியாக தமுமுக சார்பாக கோரிக்கை வைத்து வருகிறோம்.


இந்நிலையில் வக்ப் வாரியத்தின் திருமண பதிவேடுகளை ஸ்கேன்னிங் செய்ய சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.


ஆகவே, வக்ப் வாரியத்தின் அறிவிப்பினை காலதாமதமின்றி செயல்படுத்தும் விதமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள வக்ப் அலுவலகத்தில் தனியாக ஒரு அலுவலகம் அமைத்து, அதற்கென தனியாக வக்ப் வாரியம் மூலம் ஒரு ஊழியரையும் நியமித்து, அந்த அலுவலகத்தில் அம்மாவட்டத்தில் உள்ள டவுன் காஜியார்கள்,ரீஜினல் காஜியார்கள், நாய்ப் காஜியார்கள் மற்றும் முத்தவல்லிகளால் நடத்தி வைக்கப்பட்ட திருமண பதிவேடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் முறையாக பாதுகாத்தும், பராமரித்தும், மேலும் அந்த திருமண பதிவேடுகளை ஸ்கேனிங் செய்து திருமண ஆவணம் தேவைப்படுபவர்களுக்கு ஸ்கேனிங் செய்யப்பட்ட பதிவிலிருந்து நகல் எடுத்து கொடுக்க ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.