புதுச்சேரியில் உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு

தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


புதுச்சேரி மாநிலத்தில் ஓய்வு பெற்ற உலமாக்கள் மற்றும் மோதினார்களுக்கு வழங்கப்பட்டு வந்த கௌர ஊதிய தொகையை ரூ.1000 த்திலிருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.


தமுமுக மற்றும் உலமாக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கௌர ஊதிய தொகையை உயர்த்தி கொடுக்க அறிவிப்பு செய்த புதுச்சேரி அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும் தமுமுக சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.


அதுபோல், சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்துள்ள 2 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி 4 சதவிகிதமாக அதிகரித்து தரவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 2 சதவிகித இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், குரூப் A மற்றும் B யில் உள்ள வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரவும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.


எனவே, வக்பு சொத்துக்களை மீட்கவும், காலியாக உள்ள காஜியார் பதவிகளையும், முத்தவல்லி பதவிகளையும் தகுதியானவர்களை கொண்டு நிரப்பவும், காலியாக உள்ள வக்பு இடங்களில் வீடில்லா ஏழை எளிய சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், வக்புபோர்டை இந்து அறநிலைய துறையிலிருந்து பிரித்து தனி துறையாக அமைக்க இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டுமெனவும் தமுமுக சார்பாக கேட்டு கொள்கிறோம்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.