முஸப்பர் நகர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக வீடுகள் அர்ப்பணிப்பு

உத்தரபிரதேசத்தில் முஸஃப்பர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட் 2013-ல் ஏற்பட்ட முஸ்லிம் விரோத கலவரத்தை யாரும் மறக்க முடியாது. குஜராத்திற்கு பிறகு சங்பரிவார் வெறியர்கள் உபியிலும் தங்கள் வெறியாட்டத்தை நடத்தினர். இதில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டதுடன் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் தாம் வாழுமிடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களில் பலர் தாம் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை இழந்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகத்தை தாண்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உதவி கரம் நீட்டியுள்ளது.

  • 1999லில் ஒரிஸ்ஸாவில் புயல் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழகம் முழுக்க துணிமணிகள் சேகரிக்கப்பட்டு ரயில் மூலம் அவை ஒரிஸ்ஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • 2001லில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க 18 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டு பூகம்ப நிவாரண நிதிக்கு அது வழங்கப்பட்டது.
  • 2002லில் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் சுமார் 3500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு அன்ஜுமனே இம்தாதுல் முஸ்லிமீன் அமைப்பு மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • 2014ல் காஷ்மீர் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமுமுக சார்பாக ரூ50 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண நிதி அம்மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதே அடிப்படையில் முஸஃப்பர் நகரில் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவுவதற்கு தமுமுக முன்வந்தது. முஸஃப்பர் நகர் மாவட்டத்திற்கு முதலில் தமுமுக தலைமை நிர்வாகிகள் அடங்கிய ஆய்வு குழு கடந்த பிப்ரவரி 2014ல் முஸஃப்பர் நகர் சென்றிருந்தது. இந்த குழுவில் தமுமுக மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ். ஹைதர் அலி மற்றும் பொருளார் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

பூர்வாங்க ஆய்வு


தமுமுக குழு 2014 பிப்ரவரி 18 தொடங்கி 6 நாட்கள் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நேரில் சந்தித்து பூர்வாங்க ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட ஊர்களையும் பார்வையிட்டது. தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகள் போல் வாழும் மக்களுக்கு வீடுகள் மிக அவசியத் தேவை என்பதை தமுமுக குழு உணர்ந்தது. இந்த தேவையை முடிந்த அளவு பூர்த்திச் செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க தமுமுக முடிவுச் செய்தது. தமுமுக மூத்த தலைவர் சகோதரர் எஸ். ஹைதர் அலி அவர்கள் மேற்பார்வையில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. மீராட்டில் இயங்கி வரும் பலாஹே ஆம் தர்ம மருத்துவமனையின் இயக்குனரும் அப்பகுதி ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான சகோதரர் அலாவுதீன் தலைமையில் ஷாநவாஸ் மற்றும் சாஜித் அக்தர் உள்ளடங்கிய அவரது குழுவினரும் தமுமுகவிற்கு இப்பணிகளில் பெரிதும் உதவினார்கள். சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அவ்வப்போது அங்குச் சென்று இப்பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார்.


டிஎம்எம்கே காலனி (tmmk-colony)


முஸஃப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டி தமுமுக நிவாரண நிதி திரட்டியது. திரட்டப்பட்ட நிவாரண நிதியிலிருந்து அம்மக்களுக்கு முஸஃப்பர் நகரிலிருந்து 39 கிமீ தூரத்தில் (கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அருகில்) பள்ளிவாசலுடன் கூடிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக புடானா - காந்த்லா நெடுஞ்சாலையிலேயே பதேபூர் கேடி என்ற ஊரில் 27225 சதுர அடி மனை வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தமுமுக குடியிருப்பு (ஜிவிவிரி சிஷீறீஷீஸீஹ்) என்ற பெயரில் தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டு 43 வீடுகளும் 8 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டன. ஒவ்வொரு வீடு 380 சதுர அடி கொண்டதாகும். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு தாழ்வாரம் அத்துடன் கழிப்பிடம் மற்றும் குளியல் அறை கொண்டதாகும். குடியிருப்பில் வாழும் மக்கள் பயன்பாட்டிற்காக 2 ஆழ்துளை தண்ணீர் இறைப்பான்களும் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள் அனைத்தும் சீராக வரிசையாக அமைந்துள்ளன. சுற்றிலும் மதிர் சுவர் அமைத்து குடிநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் அமைந்துள்ள வீடுகள் தலா 360 சதுர அடி அளவில் அமைந்துள்ளன. நுழைவு வாயிலின் இடதுபுறம் பள்ளிவாசலுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தமுமுக காலனி அமைந்துள்ள இடம் தற்போது ஜிவிவிரி சிஷீறீஷீஸீஹ் என்ற பெயரில் பேரூந்து நிறுத்தமாகவும் ஆகியுள்ளது.


ஈ.டி. பஷீர் எம்.பி. பங்கேற்பு


பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 24 அன்று தமுமுக குடியிருப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, துணைத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, பொதுச் செயலாளர் பி.எஸ். ஹமீது, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர். எம். அனிபா, மீரட் அலாவுதீன் உள்ளிட்டோர் பங்குக் கொண்டு பயனாளிகளுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் திறவுக்கோல்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து பொன்னானி நாடாளுமன்ற உறுப்பினரும் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஈ.டி. முஹம்மது பஷீர் நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில் தமுமுக மைல்கள் கடந்து இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான வீடுகளை கட்டித் தந்திருப்பது பாராட்டிற்குரியது என்று குறிப்பிட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆய்வுச் செய்து அவர்களில் பெரும்பாலும் அரசு உதவிகளை பெறாத மக்களை தேர்வுச் செய்து அவர்களுக்கே இந்த வீடுகள் இந்த வீடுகளை அவர்கள் எந்த காரணம் கொண்டு விற்பனைச் செய்ய கூடாது என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டன.


தமுமுக எங்களை ஒன்றினைத்துள்ளது


பயனாளிகளில் ஒருவரான அப்துல் சத்தார் ‘மக்கள் உரிமை’யிடம் பேசுகையில், ‘யார் என்றே எங்களுக்கு தெரியாத தமுமுகவினர் செய்த உதவியால் என்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சமாஜ்வாதி அரசு அளித்த ஐந்து லட்சம் உதவிதொகை ஆட்சியாளர்கள் கைகாட்டியவர்களுக்கு மட்டும் கிடைத்தது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டப் பலருக்கும் இந்த தொகை கிடைக்கவில்லை. இம்மாவட்டத்தின் பல்வேறு மூலைகளிலே இருந்த எங்களை தமுமுக ஒன்றாக இணைத்துள்ளது. இவர்கள் உதவியால் நம் குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்போம். இதுபோன்ற இறைபணி தமுமுக தொடர்ந்து செய்ய வேண்டும்.’ எனக் கேட்டுக் கொண்டார். மற்றொரு பயனாளியான பதேஹ் முஹம்மது மக்கள் உரிமை’யிடம் கூறுகையில், ‘கலவரம் நடைபெற்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும் அதன் பாதிப்பு இன்னும் விலகவில்லை. நாங்கள் வாழ்ந்த பகுதிகளில் எங்கள் வீடுகளை நேரில் சென்று பார்க்கவும் முடியாத நிலை உள்ளது. இதனால், உள்ளூரில் நாம் பணி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி விட்டோம் பிழைப்பிற்காக வெளியூர் செல்லும் போது எங்கள் குடும்பத்தாரை எங்கே விட்டு செல்வது என்பது கேள்விக்குறியாக இருந்தது. எங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமுமுகவினர் எங்களுக்கு கட்டி கொடுத்துள்ள வீடுகள் மிகவும் பலன் தரும்.’ எனப் பெருமூச்சு விடுகின்றனர்.


வீடு கட்டும் பணிகளில் உதவி புரிந்த ஷாநவாஸ் மக்கள் உரிமையிடம் பேசுகையில் "தமிழக அளவில் தமுமுக இயங்கினாலும் முஸ்லிம் உம்மத் ஒரு உடலைப் போன்றது. அதன் ஒரு பகுதியில் நோவினை ஏற்பட்டாலும் உடல் முழுவதும் அதனை அனுபவிக்கின்றன என்ற நபிமொழியை இங்கே நடைமுறைப்படுத்தியுள்ளது. முஸஃப்பர் நகர் மற்றும் ஷாமிலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அமைப்புகள் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் அனைத்திந்திய அளவில் இயங்க கூடியவை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இயங்கும் தமுமுக தரமான 43 வீடுகள் மற்றும் 8 கடைகள் அடங்கிய ஒரு குடியிருப்பிற்குள் உருவாக்கிக் கொடுத்திருப்பது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது." என்று சிலாகித்துப் பேசினார். வீடுகளின் திறவுக்கோலைப் பெற்றுக் கொண்டு அதில் குடியேறிய மக்களின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. அந்த மலர்ச்சியின் பயனாக அவர்கள் உள்ளத்தில் உதிக்கும் பிரார்த்தனை இந்த பணியை செய்து முடிக்க தமது பணம் பொருள் உழைப்பைத் தந்த அனைத்து சொந்தங்களுக்கும் இம்மை மறுமை நற்பேறுகளை நிச்சயம் உயர்த்தி தரும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.