தொண்டியில் கடல்சார் கல்லூரி செயல்படாவிட்டால் போராட்டம் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அறிவிப்பு

தமுமுக

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்பா பல்கலை.யின் கடல்சார் கல்லூரி செயல் படாவிட்டால் போராட்டம் நடத்தப் படும் என தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தெரிவித் துள்ளார்.


த.மு.மு.க. ராமநாதபுரம் மாவட்டட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது,


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்பா பல்கலையின் சார்பில் கடல்சார் கல்லூரி செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிக்கு அக்கிராம ஊராட்சி நிர்வாகத்தால் இடம் பெறப்பட்டும்,அப்பகுதி நடாளுமன்ற மேலவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20லட்சமும், தொண்டி ஐக்கிய ஜமாத்திடமிருந்து ரூ. 5 லட்சமும் பெறப்பட்டு கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டு அதில் செயல்பட்டு வந்தது.ஆனால் தற்போது இந்தக்கல்லூரியை காரைக்குடிக்கு அழகப்பா பல்கலையின் துணைவேந்தர் மாற்றம் செய்து விட்டார்.கல்லூரி செயல்பட்ட இடம் சமையல் கூடமாக ஆகியிருக்கிறது. தொண்டியிலேயே இந்த கல்லூரி தொடர்ந்து செயல்படாவிட்டால் தமுமுக சார்பில் போராட்டத்தை நடத்துவோம்.


தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் அரசு கணினியில் பாடங்கள் நடத்துமாறு உத்தரவிட்டு அதை செயல்படுத்தியும் வருகிறது.ஆனால் கணினிக்கல்வியை பயின்ற ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவே இல்லை. தமிழகத்தில் 60 ஆயிரம் கணினி பொறியாளர்கள் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு வேலை கொடுக்கும் விதத்திலும்,காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாநில மாநாட்டினை நடத்தவுள்ளது.இதில் தமிழக மக்களின் நலன் கருதி முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்ற இருக்கிறோம். சோபியா என்ற பாசிஜ பா.ஜ.க. ஒழிக என சொன்னதால் அவருக்கு பின்னால் ஒரு சக்தி இருப்பதாக பா.ஜ.க.தலைவர் தமிழிசை குற்றம் சுமத்தி இருக்கிறார்.சோபியாவுக்கு பின்புலமாக தமிழக மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதை பா.ஜ.க.புரிந்து கொள்ள வேண்டும்.


10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் ஆட்சேபணையில்லை என்று பாதிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லியும் அவர்களை மத்திய அரசு தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய மத்திய அரசு மறுக்கிறது.


ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு இந்திய கலாச்சாத்துக்கு ஏற்ற கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.இத்தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடத்திட முன்வர வேண்டும்.நீதிமன்றத்தில் ஏதேனும் காரணங்களைச் சொல்லி தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிக்கொண்டே போவது கவலையளிக்கிறது எனவும் எஸ்.ஹைதர் அலி தெரிவித்தார்.


செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் கீழக்கரை.பாதுஷா,கீழக்கரை ஹசன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் வாணி.சித்திக்,புதுமடம் இப்ராஹிம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.