தமிழகத்துக்குப் புதிய புரோகிதர்

தமிழகம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியன்று தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநரை ஜனாதிபதி நியமனம் செய்தார். மராட்டிய மண்ணில் கொலுவிருக்கும் அவர், தன் "எஜமானர்கள்" உத்தரவுக்கு ஏற்ப அவ்வப்போது சென்னைக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். கடந்த ஓராண்டில் ஆளுநரின் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உரியவை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு வழங்கப்படும் ஆணைகள் அப்படி. அவற்றை மீறிச் செயல்படுவதற்கு அவர் என்ன சுர்ஜித்சிங் பர்னாலாவா?

பன்வாரிலால் புரோஹித் புதிய ஆளுநராக தமிழகத்துக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். வடநாட்டின் ‘புரோஹித்’ என்ற பதத்தைத் தென்னவர்கள் புரிதலும் பொருளும் கொண்டு ‘புரோகிதர்’ என்று குறிப்பிடுவது தான் வழக்கம். அந்த வகையில் தமிழகத்துக்குப் புதிய புரோகிதர் கிடைத்து இருக்கிறார்.


புரோகிதர் யார்?


இந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் கருதப்படும் அரசியல் சாசன அந்தஸ்துமிக்க ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புரோகிதர் யார்? அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!
"முக்கால் நூற்றாண்டை முடித்தவர்களை ஆட்சிக் கட்டிலின் அமைப்புக்குள் கொண்டு வரக்கூடாது" என்று மோடி வகுத்த விதிகளில் சிக்கி ஒதுக்கப்பட்டவர்களில் புரோகிதரும் ஒருவர். வயோதிகர்களை ஆளுநர்களாக்கும் பாணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. பாஜக அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. 77 வயது கொண்ட புரோகிதர் தன் பொது வாழ்வுப் பணியை அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் தொடங்கினார். மராட்டிய மண்டலத்தில் இக்கட்சியை வைத்து உயரமுடியாது அல்லவா? அந்த காலகட்டத்தில் ‘பசை’யுள்ள கட்சி காங்கிரஸ் தான். எனவே அதில் நுழைந்தார். 1978ல் நாக்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனார். 1980ல் மறுதேர்தல். மீண்டும் வென்றார். மகாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் பெற்றார். "மாநில ஆட்சியை ருசி பார்த்தாகி விட்டது. இனி டில்லி அரசவையின் கதவைத் தட்டலாமே" என்று எண்ணினார். விளைவு... 1984ல் காங்கிரஸ் எம்.பி. ஆனார். 1989ல் மீண்டும் நின்றார், வென்றார். அடுத்த ஓராண்டுக்குப் பிறகு ராமர் கோவில் விவகாரம் தேசிய அளவில் சூடு பிடித்தது. "அடடே...! அடுத்த வெற்றிக்கு இதுதான் உதவும்" என்று கணித்தார் புரோகிதர். ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார். இதனால் காங்கிரஸ் கட்சி கல்தா கொடுத்தது. உடனே அவர் ‘தியாகி’ என்ற உற்சாக உணர்வோடு பாஜகவில் புகுந்தார். 1991ம் ஆண்டு பாஜக வேட்பாளரானார். காங்கிரஸ் வேட்பாளரோ அவரை மண் கவ்வ வைத்தார். 1996ல் தான் அவர் மீண்டும் போட்டியிட்டு பாஜக எம்.பி. ஆனார்.


சடுகுடு புரோகிதர்


மஹாராஷ்ட்ரா மாநிலத்துக்கான கோட்டா குறித்து பாஜகவின் பிரமோத் மகாஜன் தான் முடிவு செய்து வந்தார். அவரின் அதிகார எல்லைக்குள் புரோகிதர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அவரை பிரமோத் மகாஜன் லாவகமாகக் கழற்றிவிட்டு புஸ்வானப் பட்டாசு ஆக்கி விட்டார். இதனால் 1999ல் அவர் பிரமோத் மகாஜனால் துரத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியமானார். எப்படியோ மீண்டும் டிக்கட் பெற்று 1999ல் எம்.பி. தேர்தலில் நின்றார். ஆனால் தோற்றுப் போனார்.


புரோகிதரின் கட்சி தாவும் சடுகுடு ஆட்டத்தைப் பற்றி மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலும் பகைத்தலும் கிளம்பின. எனவே காங்கிரஸ் மேலிடம், புரோகிதரை புரட்டிப் போட்டு முடக்கி வைத்துவிட்டது. "இனியும் இங்கு பருப்பு வேகாது" என்று எண்ணிய புரோகிதர், பாஜகவில் தூண்டில் வீசினார். இந்த முறை மீன் சிக்கவில்லை. தூண்டிலே உடைந்து போனது. வேறு வழி இன்றி "விதர்பா ராஜ்ய கட்சி" என சொந்த கம்பெனியை ஆரம்பித்தார். 2004ல் மீண்டும் தன் சொந்த கட்சி சார்பில் களமிறங்கினார். காசு கரைந்து போனதுதான் மிச்சம். சீண்டுவார் இன்றிச் சுருண்டு போனார்.
இதனால் பாஜகவுடன் சிறுகச் சிறுக உறவைப் பெருக்கிக் கொண்டவர் ஒரு காலகட்டத்திற்குப் பின் தன் சொந்த கம்பெனியைக் கலைத்து விட்டு பாஜகவில் மீண்டும் அடைக்கலமானார். 2009ல் பாஜக டிக்கட் பெற்று எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டேம்வாரிடம் பரிதாபகரமாகத் தோற்றுப் போனார். மோடியின் விசுவரூபத்தின் போது எம்.பி. டிக்கெட் பெற முயன்றார். ஆனால் வயதைக் காரணம் காட்டி அவருக்கு பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்டு விட்டது. "இனி தேர்தல் அரசியல் சரிப்பட்டு வராது" என்று கருதிய புரோகிதர், அரசியலை விட்டு புறமுதுகு காட்டி ஓடி விடவில்லை. எறும்பூரக் கல்லும் தேயுமே. 2016ல் அஸ்ஸாம் கவர்னர் ஆனார். ஆனால் அந்த சிறிய மாநிலம் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் முயன்றார். தமிழக ஆளுநர் மாளிகையில் நாட்டாமை செய்யும் வாய்ப்பு கிடைத்து விட்டது.


பத்திரிகை உரிமையாளர்


இவரின் சளைக்காத தொடர் முயற்சிகளுக்கு இவருக்குப் பெரும் உதவிகரமாக விளங்கியது இவரின் நாளிதழான ‘ஹிதவாதா’ என்ற ஹிந்தி பத்திரிகை தான். நம்மூரின் நம்பர் ஒன் நாளிதழ் போன்ற நற்பெயர் கொண்ட அந்தப் பத்திரிகையின் உரிமையாளரான அவரின் தயவு அரசியல் தலைவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனைத் தான் புரோகிதர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தன் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள அவர் மேலிடத்தின் அதிகார பீடத்துடன் புழங்கிக் கொண்டே இருப்பவர் என்பதைத் தான் அவரின் அரசியல் வாழ்வு அடையாளம் காட்டுகிறது. எனவே பதவியைத் தந்தவர்களிடம் அவர் நல்ல பிள்ளையாகவே நடந்து கொள்வார்.


"புது ஆளுநர் வந்தாலும் தற்போது இருக்கும் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது" என்று தமிழிசை பாடி இருக்கிறார். உண்மைதான். ஆணையிடுபவர் ஒருவர்தான். அதைத் தலைமேல் எடுத்து நிறைவேற்றுபவர் மட்டும் தானே மாறி இருக்கிறார். "புதிய ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநாட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்" என்று ஒரு சம்பிரதாயமாக மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாலும் அவரும் இதை நன்கு அறிவார்.சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்திட முதல் அமைச்சருக்கு ஆணையிட வேண்டும். ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் மவுனம் காத்திட உதவும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பாக அவரின் மாளிகையில் உள்ள கோப்புகளில் உறங்கும் மனுக்களுக்குத் தாலாட்டுப் பாடப்படும். ஏன் எனில் இதுவும் நீதிமன்றத்தின் பிடியில்தானே இருக்கிறது. கட்சி சார்பானவர்கள் தான் ஆளுநர் ஆகிறார்கள் எனும்போது பர்னாலாக்களின் உதயத்துக்கு வழியேது?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.