மன்னார்குடி: பீஃப் பிரியாணி கடை நடத்தியவர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்

தமிழகம்

மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சி அமைந்த்திலிருந்தே சிறுபான்மையினர் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்துக்கொண்டே வருகிறது.

குறிப்பாக மாட்டின் பெயரால் கொலைகளும் கொடூர தாக்குதல்களும் நடந்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக உத்திரபிரதேச மாநிலத்தில் அஹ்லாக் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்த்தற்காக தலித் இளைஞர்கள் 4 பேரை பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படும் கும்பல் அடித்து காயப்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாடுகளை வாங்கிய பெஹ்லுகான் என்ற வியாபாரியை பசுவின் பெயரால் செயல்படும் பயங்கரவாத கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.


உத்திரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப் பேற்றவுடன் அம்மாநிலத்தின் பெரும்பாண்மை இறைச்சிக் கூடங்களை மூடி மக்களின் உணவுப் பழக்கம், உணவுகலாச்சாரத்திற்கு ஊறு விளைவித்துள்ளார்.


முஸ்லிம்கள் வழிபாடு செய்யமட்டுமல்ல எதை உண்ண வேண்டும், எதை பருக வேண்டும் என்பதை கூட இந்துத்துவா சக்திகள் தான் முடிவு செய்வார்கள் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் இத்தகைய அராஜகங்கள் நடந்த நிலையில் தமிழகத்தில் கம்யூனிச பூமியான மன்னார்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் நிகழ்ந்த சம்பவம் டெல்டா பகுதி முஸ்லிம்கள் மட்டுமின்றி பல சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் அருகே உள்ள மேலராஜவீதி மற்றும் கீழராஜவீதி ஆகிய பகுதிகள் மன்னை நகரத்தின் வணிக மையமாக திகழ்கின்றன. இப்பகுதியில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ள இடங்கள் நகர மக்களால் பிரியாணி பஜார் என்றழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர் தள்ளுவண்டிகளில் சிக்கன்பிரியாணி, மட்டன் பிரியாணி, பீஃப் பிரியாணி கடை வைத்து பிழைத்து வருகின்றனர்.


இங்கு ராஜாமுஹம்மது, நூர் முஹம்மது ஆகியோர் தங்கள் தகப்பனார் காலத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலமாக எவ்வித இடையூறின்றி பீஃப் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். கடந்த 7ம் தேதி இக்கடைகளுக்கு வந்த போலீசார் ராஜகோபால்சாமி கோவிலில் திருவிழா துவங்க உள்ளதால் ஒருவார காலத்திற்கு பீஃப் பிரியாணி கடை நடத்தக்கூடாது எனக் கூறியுள்ளார்கள்.


இதுவரை எந்த ஆண்டும் காவல்துறையினர் தடைவிதிக்காத நிலையில் இதை ராஜாமுஹம்மது, நூர் முஹம்மது ஆகியோர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து கடை நடத்தி வந்துள்ளனர்.


கடந்த 11ம் தேதி கடைத்தெருவிற்கு ஜீப்பில் வந்த மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் பீஃப் பிரியாணி கடை வியாபாரிகளான ராஜாமுஹம்மது, நூர் முஹம்மது ஆகியோரை கன்னங்களில் அறைந்து பலவந்தமாக ஜீப்பில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து சென் றுள்ளார். அங்கும் தொடைகளின் பின் புறங்களில் லத்திகளால் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். மறு நாள் அவர்கள் மீது அற்ப வழக்கு(பெட்டி கேஸ்) பதிந்துள்ளதாக கூறி விடுவிக்கப் பட் டுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறிந்த மன்னை நகர முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுந்து ஐக் கிய ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது தலை மையில் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண துணைக் கண்காணிப்பாளர் பஸ்லுல்லாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.


இன்ஸ்பெக்டர் கழனியப்பனால் தாக்கப்பட்ட ராஜாமுஹம்மது, நூர் முஹம்மது ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அணுகிய காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் அடித்ததாக கூறவேண்டாம், நீங்கள் கீழே விழுந்த்தில் காயமடைந்ததாக பதிவு செய்யுமாறு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.


இதுகுறித்து மன்னை நகர முஸ்லிம் மக்கள் கூறும்போது:


அந்த பகுதியில் தள்ளுவண்டி சிக்கன்பிரியாணி, மட்டன்பிரியாணி கடைகள், அசைவ உணவகங்கள்,கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள்,டாஸ்மாக் மதுபான கடை,பார் என அனைத்தும் உள்ளன. கோவில் திருவிழாவுக்காக மூட வேண்டுமானால் இந்த கடைகளை அல்லவா மூட வேண்டும், இதை விடுத்து மாட்டு இறைச்சிக்கடையை மூடச்சொல்வது மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் இந்துத்துவா சக்திகளின் தூண்டுதலே காரணம் என்கின்றனர். காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது மாவட்ட இந்து முன்னணி செயலாளர் இராம. ராஜசேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை திருப்திபடுத்த கலணியப்பன் இத்தகைய அராஜக செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.


இதனைத்தொடர்ந்து கழனியப்பனை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை மன்னார்குடியில் தடையை மீறி காவல்நிலையம் முற்றுகை போராட்டம் மன்னை ஜக்கிய ஜமாத், தமுமுக, மமக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக நடைபெற்றது. இதில் ஊடக பிரிவு மாநில துணைச் செயலாளர் மதுக்கூர் பவாஸ், தமுமுக மாவட்ட செயலாளர் பஜிலுல் ஹக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள ஆகியோரும் பங்கேற்ற இம்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை சகோதர சமுதாய அமைப்பு சார்பிலும் கழனியப்பனை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது.


தமுமுக மாவட்ட நிர்வாகம் சார்பாக கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக காவல் ஆய்வாளர் கழனியப்பன் மன்னார்குடியில் பணி வழங்காமல் காவல் கண்காணிப்பாளர் அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவர் மீது வழக்கு பதிய ஜக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.


இன்ஸ்பெக்டர் கழனியப் பனுக்கு முரட்டுதனம் புதிதல்ல இதற்கு முன் மன்னார்குடி வளையல்காரத் தெருவில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மக்கள் தாங்களே தெரு சாலை அமைக்க முயன்றபோது வெறித்தனமாக தாக்கியுள்ளார்.


இதுகுறித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இவரைக்கண்டித்து இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன், விவசாய அணியின் மாநிலச் செயலாளர் முசாவத்தீன். திருவாரூர் மாவட்டச் செயலாளர் தீன் உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலன் விசாரித்தனர்.