திராவிட இயக்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரித்துவிட முடியாது!   பேரா.ஜவாஹிருல்லா பேச்சு

தமிழகம்

கோவையில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர்.பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் எப்பொழுதும் பதட்டத்தில் இருக்கும் கோவையையும் ஏன் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.


இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், குற்றவாளிகளை உடனடி யாகக் கைது செய்து தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, கொலை செய்யப்பட்ட பாரூக்கின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆறுதலும் கூறினார். கோவையில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இந்த வன் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தியது.


கோவை ஜமாத்தே இஸ்லாமிய அமைப்பு, கொல்லப்பட்ட பாரூக்கின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் திராவிட இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ளாத சிலர் பாரூக் படுகொலையைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் இஸ்லாம் குறித்து மிக மோசமாக விமர்சனங்களை வைத்தனர்.


முஸ்லிம்கள் சிலரும் இதற்கு எதிர்வினை என்ற பெயரில் பதிலடி கொடுக்க, தேவையற்ற மனக் கசப்புகள் உருவானது. இந்நிலையில் ‘துவக்கு இலக்கிய அமைப்பு’ கடந்த 4ம் தேதி சென்னை கவிக்கோ அரங்கில் ‘தோழர் பாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்’ என்கிற தலைப்பில் கண்டனக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இக்கருத்தரங்கில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா, திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், விசிக து.பொ.செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் பேசிய தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, ‘‘இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனங்களும், ஆறுதல்களும் பாரூக் படுகொலை ஏற்படுத்திய ரணத்துக்கு மருந்தாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து இந்துத்துவ பாசிச சக்திகளை வீழ்த்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்தார்.


பேரா. ஜவாஹிருல்லா அவர்கள் பேசும் போது ‘‘இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இஸ்லாத்தின் எந்த நெறிமுறைகளும் இதுபோன்ற கொடூரத்தை அனுமதிக்கவில்லை. இந்த மார்க்கத்தை விமர்சிப்பவர்களைக் கொலை செய்ய வேண்டும் என எங்கு சொல்லப்பட்டிருக்கிறது. பாரூக்கை விட அதிகமான விமர்சனம் வைத்தவர்களை இந்த மார்க்கம் கடந்து வந்திருக்கிறது என்பதோடு பாரூக் போன்ற இஸ்லாத்தைத் துறந்து நாத்திகரான பல பேர் இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முஸ்லிம்களால் எவ்வித இடைஞ்சல்களும் ஏற்பட்டதில்லை.


புகழ் பெற்ற சென்னை புதுக்கல்லூரி, தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தால் நடத்தப்படுவது. அங்குதான் சமீபத்தில் இறந்த கவிஞர் இன்குலாப் பேராசிரியாகப் பணியாற்றினர். அவரும் ஒரு நாத்திகர்தான். சென்னையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹலீம் ஹாஜியார் அவர்களின் சகோதரர் ஜக்கரியா, திராவிட கழகத்தைச் சேர்ந்தவர் தான். இதுபோல பலர் சமூகத்தில் இருக்கின்றனர்.


இந்தப் படுகொலையை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்திப் பேசுவது கண்டிக்கதக்கது. இந்தக் கொலையை செய்தவர்கள் மட்டுமல்ல அவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.


சமூக வலைதளங்களில் கூறப்படுபவை அனைத்தும் உண்மையல்ல. நான் கோவையில் பாரூக் வீட்டிற்கு ஆறுதல் கூறச் சென்ற போது, அவரது மகன் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் சென்றிருந்தார். அவரது மகள் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் பயின்று வருபவர் என்பதையும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


இந்தப் படுகொலைக்குப் பிறகு பெரியாருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான நேச உணர்வைப் புரிந்து கொள்ளாத சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர்.


தி.வி.க. தலைவரின் அறிக்கை அந்தவகையில் பாரூக் படுகொலை தொடர்பான கடும் விமர்சனங்கள் ஏற்படுத்திய இரணத்துக்கு மருந்தாக அமைந்தது. இஸ்லாம் குறித்து பெரியார் அவர்கள் மறைந்த அப்துல் சமது சாஹிபின் தந்தை மௌலவி அப்துல் ஹமீது பாகவி அவர்களிடம் அவ்வப்போது கலந்துரையாடுவார்.


திருச்சியிலிருந்து பெரியார் இந்தி எதிர்ப்பு பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்புகளை முறியடித்து பெரியாருக்கு உறுதுணையாக இருந்து பேரணிக்கு ஏற்பாடு செய்தவர் பி.எம். கலிபுல்லா.


அதுமட்டுமல்ல... நாத்திகரான பெரியார், அறிஞர் அண்ணா அவர்களும் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களும் முஸ்லிம்களின் ஏற்பாட்டில், பாதுகாப்பில் நடக்கும் மீலாது விழாக்களில் பேச அழைக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.


திராவிட இயக்கங்களுக்கு கூட்டம் நடத்த கடும் எதிர்ப்பு இருந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் மேடையில் தான் அவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வைத்தனர். முஸ்லிம்களுக்கும் திராவிட இயக்கத்தினருக்கும் பகை மூட்டி அதில் குளிர் காயலாம் என பாசிச சக்திகள் திட்டமிட்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இன்று இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் தங்கள் சதிகளைக் கொண்டு செல்வதற்கான வேலைகளைத் துவங்கி விட்டனர். எனவே நாம் இரு சமூகங்களுக்கு மத்தியில் இருக்கும் நேசத்தையும், புரிந்துணர்வையும் அதிகரிப்பதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.


நாம் கடக்க வேண்டிய பாதை மிக கடினமானது. தூரமானது. நமது உறவுகளை பலப்படுத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பினரின் செயல்திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும். திராவிட இயக்கத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரித்துவிட முடியாது. இத்தகைய பிரிவினை சக்திகளை புறந்தள்ளி நமது பணிகளை முன்னெடுப்போம்’’ என்றார்.


இறுதியாக பேரா.ஹாஜாகனி நன்றி கூறினார். துவக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இஷாக், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி திராவிட இயக்கத் தோழர்கள் மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வையும், இணக்கத்தையும் ஏற்படுத்தியது என்றால் அதில் மிகையல்ல.