தருண் விஜய்: - தமிழுணர்வு நாடகப் பாசாங்கு அம்பலமான கதை

தமிழகம்

அம்பலமான கதைமுக்கிய நிகழ்வுகளில் முந்திரிக் கொட்டையாய் நுழைவது... மூக்குடைபட்டுத் திரும்புவது என அரசியல் அலங்கோலங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார் ஒரு காவிப் பிரமுகர். அவர் தான் தருண் விஜய்.

‘பஞ்ச கன்யா' என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர், காவித் தலைவர்களிடையே நல்ல பரிச்சயம் கொண்டவர். எனவே உத்கர்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.

பதவிக் காலம் முடிகிற காலகட்டத்தில் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்த்திட முனைந்தார். இதற்காக இவர் எடுத்துக்கொண்ட வேடம்... பூசிக்கொண்ட அரிதாரம் தான் ‘தமிழ் நேசன்’ என்பது.

பெரியார் பூமியான தமிழகத்தில் பாஜகவின் வியூகங்கள் அனைத்துமே முறித்துப் போடப்பட்டன. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் படித்தார் தருண் விஜய். இதில் திராவிட இயக்க வரலாறு அவரின் கவனத்தைக் கவர்ந்தது. இதே பாணியில் தமிழகப் பண்பாட்டு நிகழ்வுகளில் நுழைந்து பிரபலம் ஆகத் திட்டமிட்டார்.

திருவள்ளுவர்

திருவள்ளுவரைப் பற்றிய பாடத்தை தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் சேர்த்திட அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வேண்டினார். ‘தமிழகத்தில் காவியின் கால் வேரூன்ற இது அவசியம்’ என்றார். ‘சிறுகுறிப்பு’ என்ற வகையில் பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் புலமைத் திறன் சேர்க்கப்பட்டது. இதை அவர் மாநிலங்களவையிலும் பேசிக் குறிப்பேட்டில் பதிவு செய்தார்.

‘‘திறமான புலமை உள்ளதெனின் அதை வெளிநாட்டார் வணக்கஞ்செய்தல் வேண்டும்’’ என்பது பாரதியின் பாடல் வரிகள். தமிழுக்கு வெளிநாட்டவரான தருண் விஜய் அணுகுமுறையால் தமிழகத் தலைவர்கள் உருகத் தொடங்கினர். ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’’ என்று தருண் விஜயை அவரின் சகாக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

ஆனால் அந்தப் பெருமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. காசிக்குப் போனார் தருண் விஜய். பாரதியார் தங்கி இருந்த வீட்டைப் பார்த்தார். உணர்ச்சி வசப்பட்ட அவர், & ‘‘காசியில் உள்ள பாரதியார் வீட்டை நாட்டுடமையாக்கி, நினைவுச் சின்னம் அமைத்திடச் செய்வேன்’’ என்று முழங்கி முடித்து விட்டார். பத்திரிகைகளே செய்திகளை வெளியிட்டு தருண் விஜய்க்கு தாங்கு தூண்களாய் மிளிர்ந்தன.

கொதித்தெழுந்த பாரதியார் வாரிசுகள்

அங்கு குடியிருந்த பாரதியாரின் வாரிசு கொதித்தெழுந்தார். ‘‘எங்கள் சொத்துக்கு... எங்கள் உரிமை வீட்டுக்கு... என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் வீட்டை நினைவுச் சின்னமாக்கிட இவர் யார்?’’  என்று கோபாவேசக் கணை தொடுத்தார். ‘‘கயிறு என்று எண்ணிக் கையில் எடுத்தோம். பாம்பாக அல்லவா படம் எடுக்கிறது?’’ என்று கருதிய தருண் விஜய்... தொங்கு முகத்தோனாகத் திரும்பி வந்துவிட்டார்.

ரிஷிகேஷ் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைக்கத் திட்டமிடப்பட்டது. சென்னையில் உள்ள ஓர் தொண்டு நிறுவனத்தின் இத்திட்டம் நீண்டகாலமாக நிலுவையில் தான் இருந்தது. இதனை நிறைவேற்றிட அந்த அமைப்பினர் தருண் விஜய்யை நாடினர். அவரோ... இந்த திட்டத்தைத் தானே கபளீகரம் செய்து கொண்டு, தமிழகத் தொண்டு நிறுவனத்தாரையே இருட்டடிப்பு செய்து விட்டார். பாவம்... மனிதர்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.

இச்சிலையைத் தமிழகத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று மக்களிடையே தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியிலும் தருண் விஜய் தான் முன்னிலை வகித்தார். பின்பு சிலையை ரிஷிகேசில் நிறுவினார். ஆனால் உள்ளூர் மக்களோ அச்சிலையைப் பிடுங்கிப் போட்டு விட்டனர். அச்சிலையை நெகிழ்வுத்தாளில் சுருட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் போட்டுவிட்டனர். அந்தோ திருவள்ளுவர்...

‘‘தருண் விஜய் எடுத்த தவறான முடிவினால் தான் இந்த அவமானம்’’ என்று தமிழர்கள் அனைவரும் தருண் விஜய்யைத் தூற்றினர். ‘‘தமிழகத்தில் தாண்டவம் ஆடலாம் என்று திருவள்ளுவரைத் தொட்டோம். அவரும் கவிழ்த்து விட்டாரே’’ என்று தருண் விஜய் தத்தளிக்கிறார். இவரின் தமிழுணர்வு நாடகப் பாசாங்கு தமிழ்ப் புலவர்களான திருவள்ளுவரிடமோ..பாரதியாரிடமோ எடுபடவில்லை என்பதுதான் அவரின் கவலை. ‘‘போலித் தமிழ் ஆர்வலர் ஒருவரின் பொய் முகத்திரை கிழிந்து விட்டதே’’ என்பதில் தமிழ் இனத்துக்கு ஆறுதல்.

ரிஷிகேஷில் உள்ள தமிழகத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஓரணியில் திரண்டனர். பல்வேறு கட்டங்களில் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசினர். பின்னர் தான் திருவள்ளுவர் சிலை அங்கு நிலைநிறுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த தருணத்தில் தான் மற்றொரு ஈட்டி அவரைப் பதம் பார்த்தது. ‘‘ரிஷிகேசில் முதன்முதலாகத் திருவள்ளுவர் சிலையை வைக்கப் போகிறோம் என்று கூறித்தானே தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டீர். ரிஷிகேசில் உள்ள திருக்கோவிலூர் மடத்தில் ஒரு திருவள்ளுவர் சிலையை ஏற்கனவே நிலைநிறுத்தி விட்டோம்! அதையா மறைக்கப் பார்த்தீர்?’’ என்று கண்டனக் கணை பாய்ந்தது. 

நிறவெறியே தருணின் உண்மை சுபாவம்

 இவ்வாறாகத் தொட்டது எல்லாமே அவரைச் சுட்டது. விரக்தியின் விளிம்பில் இருந்தபடி அவர் பேசிய நிறவெறி வாதம் அவருக்கு மிகப்பெரும் சரிவைத் தந்துவிட்டது. நுணலும் தன் வாயால் கெடும்! என்பதுஇது தானோ?

 ‘‘தென்மாநில மக்கள் கறுப்பர்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஒன்றாக வாழவில்லையா’’ என்று அல்ஜஸீரா தொலைக்காட்சி பேட்டியில் வாதம் செய்திருக்கிறார் தருண் விஜய். இனத்துக்கு எதிராக வதம் செய்து விட்டார் என்றும் கூறலாம்.

 அனைத்திந்தியாவில் அறியப்பட்டவரான ப.சிதம்பரம் கொதித்துப் போனார். ‘‘கறுப்பர்களுடன் நாங்கள் வாழ்கிறோம் என்று தருண் விஜய் கூறுகிறாரே... ‘நாங்கள்’ என அவர் கூறுவது யாரை? பாஜக&ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மட்டும் தானே! அவர்கள் மட்டும்தான் இந்தியரா?’’; என்று காட்டமான வினாக் கணை தொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.

 தருண் விஜய்யின் இந்தக் கருத்து நம் நாட்டையே கூறுபோட்டுப் பார்ப்பது போல இருக்கிறது. தவறு செய்து விட்டு எளிதாக மன்னிப்பு கேட்கலாம். ஆனால் இவர் சாதாரண நபர் அல்ல.. இவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே.  

 டி.கே.எஸ்.இளங்கோவனோ... ஆவேசக் கூக்குரல் எழுப்பி தருண் விஜய்யைத் தாளித்துக் கொண்டு இருக்கிறார்.

 ‘‘நரம்பில்லாத நாக்கு... வரம்பு இல்லாமல் தான் பேசும்’’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இவர்கள் கூறுவது தருண் விஜய் போன்றோரின் கோணல் புத்திக் கூற்றாளர்களைக் கண்டு தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.