சமுதாய உரிமை போராளி பேராசிரியர் எம்.எஃப்.கான் மறைந்தார்

தமிழகம்

முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக, கடைசி மூச்சுவரை கவலையுடன் உழைத்த பேரா. எம்.எஃப்.கான் 1.4.2017 அன்று சென்னையில் காலமானார். (இன்னாலில்லாஹி........)

2.4.2017 அன்று ராயப்பேட்டையில் நல்லடக்கம் நடைபெற்றது. அவர் தமுமுகவின் கல்வி வழி காட்டல் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டீஷ் இந்தியாவில் காவல்துறை அதிகாரியாக இருந்து, தேச விடுதலைக்காகப் பணியைத் துறந்த இவரது தந்தை எம்.கே.எம்.மீரான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். மணலி கந்தசாமியுடன் இணைந்து இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியவர்.

அவரது வழியில் நாட்டுப்பணியும். கல்விப்பணியும் ஆற்றிய எம்.எஃப் கான், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளின் தலைவர்களின் அன்பைப் பெற்றவர்.

விமர்சனங்களை தயவு தாட்சணயம் பாராமல், முகத்துக்கு நேராக வெளிப்படையாக முன்வைப்பது இவரது சிறப்பியல்பு.

அண்ணா ஐ.ஏ.எஸ் அகாடமியை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்கள், ஆட்சிப் பணிப்பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு இயங்கி வந்தார். இப்பணிகளில் இவரே சமுதாய முன்னோடியாகவும் திகழ்ந்தவர். உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியில் இளங்கலைப் பயின்று, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து, ஊட்டி,நந்தனம் அரசு கல்லூரிகளில் பயிற்றுநராகவும், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சட்டப்பாட ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்று திருவாரூர் திருவிக அரசுக் கல்லூரியில் பணியாற்றி, சென்னை அரசு ஆட்சிப்பணி பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்து, சென்னை மாநிலக்கல்லூரிக்கு மாற்றலானார். 2001வரை மாநிலக் கல்லூரியில் சிறப்பாகப் பணியாற்றி சமுதாயப் பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றார்.

சென்னை புதுக்கல்லூரியில் மாணவர் வழிகாட்டல் மையப் பொறுப்பாளராகவும், வண்டலூர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகத்தில் ஆட்சிப்பணித் தேர்வு வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார். தனது உடல் நசிவுற்ற நிலையிலும்,தமுமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சிறப்பான ஆலோசனைகளை பலமுறை தந்துள்ளார். உடல் நலங்குன்றியிருந்த நிலையிலும் சமுதாய முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்தும், சமூகத்திற்கெதிரான சதிகள் குறித்துமே பெரிதும் கவலைக் கொண்டிருந்தார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல்

பேராசிரியர் எம்.எப். கான் மறைவு குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

பேராசிரியர் எம்.எப். கான் அவர்களின் மரணம் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும். காலை சுபுஹீ தொழுகைக்கு பிறகு பல நாட்கள் எனக்கு வரும் முதல் தொலைபேசி அவருடையதாக தான் இருக்கும். கடைசியாக இரு வாரத்திற்கு முன்பு கூட என்னை தொலைபேசியில் அழைத்து அரசு தேர்வுகளுக்கு மக்களை தயார்படுத்துவது குறித்து சில அறிவுரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரி மாணவர் தேர்வில் தகுதி அடிப்படையில் மதிப்பெண் பெற்ற மாணவர்களை 3.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சேர்க்கும் தவறை சில அதிகாரிகள் செய்தனர். இது கண்டு கொதித்தெழுந்தார் பேராசிரியர் எம் எப். கான். கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தகுதி அடிப்படையில் தேர்வாகும் மாணவர்களை 3.5 விழுக்காட்டில் சேர்த்தால் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பது கண்டு பெரிதும் கவலைக் கொண்டார். நம்மிடம் இது குறித்து விவரித்தார். நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். பேராசிரியர் கான் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து நியாயங்களை எடுத்துச் சொல்லி முஸ்லிம் மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்தினார். பேராசிரியர் எம்.எப். கான் தனி ஒரு இராணுவமாக செயல்பட்டு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் உழைத்த போராளி. சென்ற ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும் அந்த நிலையிலும் களத்திற்கு வந்துவிடுவார். சென்ற ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது மருத்துவமனையில் இருந்த அவர் என்னை அழைத்து உங்களுக்கான வைப்பு தொகையை நானே கட்டுவேன் என்று சொல்லி அதனை கட்சிக்கு நன்கொடையாக அளித்ததை மறக்க முடியாது. தினமும் சமுதாயத்திற்கு தொண்டாற்றுவதற்கு ஒரு கிரியாயூக்கியாக செயல்பட்டவர் பேராசிரியர் எம்.எப். கான்.

எம்.எஃப்.கான் மறைவை அறிந்து தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்

அன்னாரின் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு பாவங்களை மன்னித்து உயர் சுவனத்தை வழங்கியப் பிரார்த்திப்போம்.