பத்திரிக்கையாளர்கள் தேசத் துரோகிகளா?

தமிழகம்

‘‘நான் சார்ந்திருக்கும் ஆன்மீக மார்க்கத்தின் மீது அளப்பரியப் பற்றாளன்’’ என்று ஒரு பக்தன் ஓங்காதக் குரலில் உரத்துக் கூறுகிறான். இதை அவன் எப்படி நிரூபிப்பான். தன் சமயம் பற்றிய சிறப்புகளை உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் விளக்கிடு வான். இது அந்தக் காலம். ஆனால், இது தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுவிட்டது.

‘‘தன் மதத்திற்கு மாறாக இருப்பதாக அவனே கருதும் மதம் குறித்து அதன் வழி நடப்போர் பற்றி அவதூறாகவும், அசிங்கமாகவும், இழிவாகப் பேசினால் தான் அவன், தான் சார்ந்த சமயத்தின் சத்தியவான்’’ இப்படியாக சமூகப் பிழை சந்திக்கு வந்துவிட்டது.

இதற்குக் காரணம் என்ன?

அரசியல், பதவி, மோகம், அதிகாரப்பசி, பணவெறி என அடுக்கிக் கொண்டே போகலாம். இதைப் கையில் எடுத்து களப்படுத்திய கண்ணியவான்களைக் கூட காயப்படுத்தி  அரசியல் ஆதாயம் தேடி வருவது எது? அது தான் பா.ஜ.க. அது தான் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி அமைப்பின் அரசியல் முகமூடி, சிறுபான்மை முஸ்லிம் இனத்தைச் சீண்டி பார்ப்பது முஸ்லிம்களைக் கொச்சை படுத்திப் பேசுவது இவர்களின் பாணி. கலைஞரைத் திட்டத்திட்ட அதிமுகவில் பதவிகளும் அதிகாரங்களும் தேடித் தேடி வரும் என்ற கழிகடைக் காலம் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. 

மாநில அளவிலான இந்த நிலைப்பாடு இப்போது பாஜகவினால் தேசிய மயப்படுத்தப்பட்டு வருகிறது. உ.பி.யில் முஸ்லிம் இனத்துக்கு எதிராக மிகக் கேவலமான நடைமுறைகளை இயக்கி வந்து கொண்டிருப்பவர் ஆதித்யநாத், முஸ்லிம் மக்களை புழுக்களாகவும், பூச்சிகளாகவும், பாவித்து ஈனத்தனமாகப் பேசி மனங்களை ஊனப்படுத்த முயலும் நாராக நாவினர் தான் ஆதித்யநாத். எங்கோ இருந்த அவரை பாஜக தேடிப்பிடித்து வந்து உ.பி. முதல்வராக்கி வைத்திருக்கிறது.

அவரோ மாநிலத்தையே பூ மலையாக்கிக் கொண்டு அதனை உதறிப்போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார். குரங்கு தான் அவரின் உற்ற தோழன் என்று பேட்டி வேறு கொடுத்து வருகிறார். 

நம்ம ஊர் ஆதித்யநாத் 

நம் ஊரிலும் ஒரு ஆதித்யநாத் இருக்கிறார். அவர் பெயர் எச்.ராஜா .செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த அவர் நிருபர்கள் மீது சீறிப் பாய்ந்து விட்டார். ‘‘நிவாரண நிதியைத் தமிழகத்துக்கு வழங்குவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறதே!’’ என்று ஒரு நிருபர் கேட்டது தான் தாமதம், ராஜாவோ சாமியாடுகிறார். நிருபரைப் பார்த்து ‘‘நீ தேசத்துரோகி’’என்று சவக்கிறார். 

திடீர் திடீர் என்று இருக்கையை விட்டு எழுந்து வெளியேற முயல்கிறார். ஆனால் அவசரமாக அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறார். விஜயகாந்த் களத்தில் இல்லாத குறையை இவர் தான் தீர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சீட்டுக் கம்பெனி மூலமான சீட்டிங் பற்றி எடுத்து விட்டால் இவரின் வண்டவாளம் அப்படியே தண்டவாளத்தில் ஏறி விடும் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறார். அற்பனுக்கு வாழ்வு கிடைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். எச். ராஜாவுக்கோ அதிகாரம் குவிந்து இருக்கிறது. ஆட்டம் போடுகிறார். அதி....காரம் உடம்புக்கு ஆகாது என்று கூற அவர் கட்சியில் யாரும் இல்லை போல் தெரிகிறது.

பத்திரிக்கையாளன் தேசத்துரோகி!

இந்திய ராணுவத்தின் ரகசியங்கள் அழகிகளின் மூலமாக அயல்நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதில் தொடர்பு கொண்ட வருண்காந்தி தேசத்தியாகி, மக்கள் நலன் கருதி கேள்வி கேட்டச் செய்தியாளன் தேசத்துரோகி. ‘‘இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை‘‘ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுச் சிறையில் இருந்து விடுதலைப் பெற்றுவந்த பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர் தேசியப் பெருந்தலைவர்.மாநிலத்தின் நிதிச் சுமையைக் குறைக்க நெகிழ்வுடன்  கேள்வி கேட்ட நிருபர் தேசத்துரோகி. அந்தமான் சிறையில் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு எழுதிக் கொடுத்து விட்டு வந்தவர் தேசத்தியாகி. தமிழக மக்களின் துயர் துடைக்க  கேள்வி கேட்ட நிருபர் தேசத்துரோகி. 

பாபர் பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்து உலக அரங்கில் இந்தியாவின் இறையாண்மைக்கே தலைகுனிவை ஏற்படுத்திய பெண்சாமியார் தேசத்தியாகி. உலக மக்களுடன் ஒப்பிடும் வசதி வாய்ப்புகளோடு தமிழக மக்களும் வாழ வேண்டும். இதற்கான நிவாரண நிதியை செய்தியாளர் கேட்டால் அவர் தேசத்துரோகி!

பத்திரிகையாளர் சங்கம் கொதிப்பு

சென்னை பத்திரிகையாளர் சங்கம் கொதிப்பு கொண்டுள்ளது. கேள்வி கேட்கும் செய்தியாள ரின் உரிமையையே கொச் சைப்படுத்தும் எச். ராஜாவின் கொடுங்கோல் செயல்பாட்டைக் கண்டித்து முழக்கப் பெருந்திரளுக்கு அரைகூவல் விடுத்துள்ளார். அச்சங்கத்தின் தலைவர் வி.அன்பழகன். வரும் வியாழன் காலை 10 மணிக்கு சென்னை பிரஸ் கிளப் அரங்கில் கண்டன முழக்கங்கள் எழும். அவை எச்.ராஜா.வின் செவிப்பறைகளில் விழும். ‘‘வரியைக் கட்டி இருக்கிறோம். 

கோரிக்கை எழுப்பும் உரிமை எமக்குண்டு’’என்று நிருபர் போர்க்குரல் எழுப்புகிறார். எவ்வளவு வரி கட்டினாய் கூறு. நான் அந்தப் பணத்தைத் தருகிறேன்’’ என்று சவால் விடுகிறார் எச்.ராஜா. அவரிடம் அதிகாரம் ஆணவம் குறித்தும்தான் அறிந்து வைத்திருந்தோம். இப்போது தான் தெரிகிறது. இவர்  பண மழையில் தினம் தினம் நனைகிறார் போலிருக்கிறது. உத்தம வேஷம் அனைத்தும் போலிதான் என்பதை எண்ணின் நுனலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி தான் நினைவுக்கே வருகிறது.

அரசியல் தலைவர்களை நோக்கி ‘‘அறிவிருக்கிறதா?’’ ‘‘மூளையற்றவர்கள்’’ என்று கத்துகிறார். நெடுவாசல் எதிர்ப்புக் கருத்து கூறி வரும் தலைவர்களை‘‘இவர்கள் விஞ்ஞானிகளா?’’ என்று கூறுகிறார். ஆனால் நெடுவாசல் திட்டம் சிறப்பானது என்று ஒரு விஞ்ஞானி போலவே பேசும் இவரின் போக்கு தான் வேடிக்கை மிக்கது. நாட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்களை, ‘‘தேங்காய் மூடிக்கு அழைபவர்கள்’’ என்கிறார். ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பார்கள். இங்கோ வெட்கம், மானம், சூடு, எதுமே காணோம்.செய்தியாளர்களைச் சீண்டிய தலைவர்கள் தழைத்ததாகச் சரித்திரம் இல்லை.

நாவுக்குரிய நாகரிகத்தைக் கை கழுவி விட்டால்... எச்.ராஜாவை மட்டுமல்ல. எக்கச்சக்கமான ராஜாக்களைக் கூட இந்த சமுதாயம் புறக்கணித்து விடும். இந்த அகக்கணிப்புடன் பேசுவது எச். ராஜாவின் எதிர்காலத்துக்கு நல்லது.