வாடி வதங்கும் இரட்டை இலை!

தமிழகம்

பொதுத் தேர்தலின் போது தான் அரசியல் கட்சிகள் அணிவகுத்துக் களமிறங்கும் என்ற தமிழக அரசியல் சூத்திரத்தை முறியடித்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே மெகா கூட்டணிக்கு வழிகிடைத்து இருக்கிறது.
இடைத்தேர்தல் களம் ஜெயலலிதாவின் மறைவு நாளில் சூடுபிடித்து இருக்கிறது.

பொதுத் தேர்தல் நெருங்கும் போது கலைஞர் மிகச் சுறுசுறுப்பாக இயங்குவார். அவரின் திரைமறைவுத் திருவிளையாடல்களில் பல சிறிய கட்சிகள் அவரை மொய்க்கும். வானவில்லின் ஏழு நிற வண்ண வரிசைகளைக் கலைஞரின் கைவண்ணத்தில் காண முடியும். ஒரு மூவர்ணம் (காங்கிரஸ் அல்லது அதன் உதிரி), ஒரு பச்சை (முஸ்லிம் கட்சி), ஒரு சிவப்பு (கம்யூனிஸ்ட் கட்சி), ஒரு நீலம் (தலித் கட்சி), ஒரு மஞ்சள் (வன்னியர் அடையாளம் கொண்ட கட்சி), ஒரு கறுப்பு (திராவிட இயக்கம்) எனத் தன் இரு வண்ணத்துடன் சேர்த்து கூட்டணி அமைப்பது கலைஞரின் தேர்தல் வியூகப் பாணி.


திமுகவின் மெகா கூட்டணி

ஆனால் மு.க.ஸ்டாலினோ... இடைத் தேர்தலிலேயே இத்தகைய மெகா கூட்டணிக்கு அச்சாரம் போட்டு இருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இத்துடன் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அதன் வலிமையைப் பெருக்கி உள்ளன.


தேமுதிக வோ இந்த இடைத்தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருப்பதாக அறிவித்து விட்டு உடல்நல சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்து விட்டார் விஜயகாந்த். ஓட்டுகளைப் பிரித்தாண்டு வெற்றியைத் தட்டிப் பறிக்கும் ஜெயலலிதாவின் தேர்தல் வியூகம் போன்ற சூழ்நிலை தற்போது இல்லை. தேமுதிகவின் அடக்கி வாசிப்பு கூட இந்த இடைத் தேர்தலில் திமுகவுக்குச் சாதகமான அம்சம் தான்.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இதே அமைதியில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கே தலைமுறை தலைமுறையாக ஓட்டு போடும் வாக்கு வங்கியைச் சிறிதளவேனும் சிதைக்க தமிழ் மாநில காங்கிரசால் முடியும். அதுவே அமைதி காப்பதால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி முழுமையாக திமுகவுக்குக் கிடைத்திட வாய்ப்பு உருவாகி இருக்கிறது.


தற்போது புயல், மழை, வெள்ளப் பெருக்கு... குடிசை வாழ் மக்கள் இடப்பெயர்ச்சி எனப் பல்வேறு பிரச்னைகளால் வாக்காளர்கள் வதைபட்டு வருகின்றனர். உரிய நிவாரண நடவடிக்கைகள் இல்லை என்பதும், கிடைத்த உதவிகளிலும் அரசியல் தலையீடுகளினால் நிதி திசைதிரும்பி விட்டது என்ற சூழலும் வடசென்னை வாசிகளை வாட வைத்துள்ளது. இந்த வாட்டமே அதிமுகவின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும்.


வாடி வதங்கும் இரட்டை இலை

இரட்டை இலைச் சின்னம் தேர்தல் கமிஷனிலேயே முடக்கத்தில் இருந்து இருந்தால் என்னாகி இருக்கும்? எம்.ஜி.ஆர். இல்லை, ஜெயலலிதா இல்லை, இரட்டை இலையும் இல்லை. ஆகவே இனி அதிமுகவுக்கு வெற்றி வய்ப்புகளும் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இரட்டை இலையை அதிமுகவுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே தோல்விகளால் துவண்டு வாடி வதங்கிப் போகவைக்கும் நிலை இரட்டை இலைக்கு ஏற்படும்.


அதிமுகவை உருவாக்கிய தலைவரும் இல்லை. உயர்த்திப் பிடித்த தலைவியும் கிடையாது. அதிமுகவின் ஓட்டு வங்கிகளில் முக்கியமானது கலைஞரின் மீதான வெறுப்பு ஓட்டு வங்கி. இதனை எம்ஜிஆர் தான் உருவாக்கினார். தற்போது தீவிரமான அரசியலில் கலைஞர் இல்லாத காரணத்தால் அந்த வங்கி இப்போது காணாமலேயே போய்விட்டது.


கடந்த முறை தினகரனுக்கு ஓட்டு கேட்ட அதிமுக தலைவர்கள் எல்லாம் களம் கண்டு தினகரனைத் தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். இவர்களின் திடீர் அரசியல் மாற்றம் வாக்காளர்களைக் குழப்ப வைத்து வெறுமையை வளர்க்கும்.


ஏற்கெனவே வாக்காளர் களை வகைவகையாக வளைத்துப் போடும் ஏற்பாடுகளை தினகரன் செய்து முடித்து விட்டார். அதனால்தான் தேர்தலே ரத்தானது. இப்போதுகூட தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைத்தால் அவர் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பெரும் அளவில் உடைத்து விடுவார். வேறு சின்னம் கிடைத்தால் இந்த உடைப்புப் பணியில் ஓரளவுக்குத் தொய்வு ஏற்படும் என்பதே நிதர்சனம்.


போதாக் குறைக்கு அதிமுகவின் வாக்கு வங்கி தகர்ப்புப் பணியில் கொசுறு போலக் களம் புகுந்து இருப்பவர்கள் விஷாலும் தீபாவும். அரசியலுக்குள் அவ்வப்போது சில நகைச்சுவை கூட அரங்கேறி விடுவது அவசியம் தான். அனல் களத்தில் இளைப்பாறிக் கொள்ள கொஞ்சம் தமாஷ§ம் தேவை தானே!


மது சூதனனுக்கு ஆர்.கே.நகரில் வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றித் தோற்றுப் போனவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். நீண்ட நெடுங்காலமாக அவர் வடசென்னை மண்டலத்தின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருபவர். அது பாதிக்கச் செய்யும் வகையில் மதுசூதனன் வந்து விடுவாரே... என்ற கொதிப்பில் அவர் இருக்கிறார். மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.


இந்த இருவரும் சந்தித்துக் கொண்ட போது முகங்களை ஆழ்கடல் அமைதியுடன் தான் வைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் மனங்களோ எரிமலை தகிப்புடன் இருந்ததை மக்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை மண் கவ்வ வைக்கும் மறைமுக முயற்சியில் ஜெயக்குமார் இறங்கி விடுவார் என்று உள்ளூர் அரசியல் குருவிகள் அலசி வருகின்றன. இதுதான் அதிமுகவுக்கு முக்கியமான சேம்சைட் கோல். கட்சி நலனைத் தாண்டிய தனிமனிதத் தாண்டவம் இது.


சூரியனின் சூடு


கடந்த முறை இரட்டை இலை போன்ற இரட்டை மின்கம்பங்கள் சின்னத்தை மதுசூதனன் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது இதே சின்னம் ஒரு சுயேச்சைக்குக் கிடைத்தால் என்னாகும்? அந்த வேட்பாளரும் அதிமுகவின் சில வாக்குகளைப் பிரித்து விடுவார்.


தொப்பி சின்னம் தினகரனுக்குக் கிடைக்காமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வேறு ஒரு சுயேச்சைக்குச் சென்று விடும். அந்த சுயேச்சையோ தினகரனின் வாக்குகளைப் பிரித்து விடுவார். அந்த அளவுக்கு தொப்பி சின்னம் வாக்காளர்கள் மத்தியில் வலம்வந்து கொண்டு இருக்கிறது.


எந்த கோணத்தில் பார்த்தாலும் சூரியனின் சூட்டினால் இலை வதங்கிப் போவதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது. எனினும் இறுதி எஜமானர்களான வாக் காளர்களின் மனநிலைதான் அதைத் தெளிவுபடுத்த முடியும்.