ஹாதியாவுக்கு கிடைத்தது நீதியா

இந்தியா

இந்திய உச்சநீதிமன்றம் அகிலா அசோகனாக இருந்து ஹாதியா ஷபின் ஜஹானாக மாறிய அந்த 24வயது மருத்துவருக்கு கடத்தி வைக்கப்பட்ட பெற்றோரிடம் இருந்து விடுதலை கொடுத்துள்ளது.

அவரது ஹோமியோபதி மருத்துவ படிப்பினை சேலம் மருத்துவக்கல்லூரியில் முழுமை படுத்திக்கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளது . தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான் வில்கர், டி ஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வு ஹாதியாவின் 25 நிமிடங்களடங்கிய உணர்வு பூர்வ விளக்கங்களுக்குப்பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவக்கல்லூரியின் விடுதி விதிமுறைகளின் படி பார்வையாளர்களை சந்திக்கலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது .

கலக்கிய கபில் சிபல்


ஹாதியாவின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ளத்தான் உச்சநீதிமன்றம் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்தது. ஆனால் ஹாதியாவின் கருத்து என்ன என்பதை அவர் ஆஜரவாதற்கு முன்பே தெரிந்து விட்டதால். சுமார் இரண்டரை மணி நேரம் நீதிமன்றத்தில் அவரை நிறுத்தி வைத்து விட்டு, ஐ.எஸ். தேசிய புலனாய்வு அறிக்கை. ஜாபினின் திவிரவாத தொடர்புகள் என்று எப்படி எல்லாம் வேறு ரூட் பிடிக்கலாம் என்று சிலர் வழக்கையும் ஹாதியா நீதிமன்றத்திற்கு அழைத்த நோக்கத்தையும் திசை திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஹாதியா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியிருந்து மிகத் தெளிவான வாதங்கள் வைத்தார். “நீங்கள் லவ் ஜிகாத் என்ற ஒன்று இருக்கிறதா என விசாரியுங்கள். ஷாபினுக்கு தீவிரவாத தொடர்பிருந்தால் அதையும் விசாரித்து நடவடிக்கை எடுங்கள் ஆனால் இப்போதைக்கு ஹாதியா அழைக்கப்பட்டது எதற்கு? “ என்பதாக மிக தெளிவாக இருந்தது.

கடந்து வந்த பாதை


வற்புறுத்தலின் பேரிலே ஹாதியா முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அவரை ஷஃபின் ஜஹான் என்ற வாலிபர் கட்டாயப்படுத்தி திருமணம் முடித்தார் என்றும், இத்திருமணம் லவ் ஜிஹாத் என்றும், அவரை ஐ.எஸ்-ல் சேர்க்க முயற்சி மேற்கொண்டு சிரியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிலரின் தூண்டுதலின் பெயரில் அவரின் பெற்றோர் மூலம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர்.


இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த கேரள நீதிமன்றம், வரலாற்றில் இல்லாத ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கியது. பெற்றோரின் அனுமதி பெறாமல் முடிந்த இத்திருமணம் செல்லாது என்றும், அத்தோடு லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த திருமணத்தை ரத்து செய்வதாகவும் கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதற்கு முன் லவ் ஜிகாத் சர்ச்சை எழுந்த பொழுது, அது குறித்து விசாரித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க கேரள தலைமை காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டது. அது குறித்து விசாரித்த கேரளா டிஜிபி ‘லவ் ஜிகாத் என்பதே இல்லை, அது பொய்யான குற்றச்சாட்டு’ என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

திருமணத்தை ரத்து செய்து, மேலும் அந்த பெண்ணை அவரின் பெற்றோரிடமே அனுப்பி வைத்தது உயர்நீதிமன்றம். அன்று முதல் வீட்டுச் சிறையில் கைதியாக மாறினார் ஹாதியா. இந்துத்துவாவினர் தொடர்ந்து கவுன்சிலிங் என்ற பெயரில் அவரை மிரட்டி வந்தனர் . ஹாதியாவின் மன உறுதியை யாராலும் மாற்ற முடியவில்லை. தான் மிரட்டப்படுவதாகவும், அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், கொலை செய்யப்படலாம் என்றும் ஹாதியா பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது. ஹாதியாவை கரம் பிடித்த ஷாஃபின் ஜஹான் நீதிவேண்டி உச்சநீதிமன்றம் சென்றார் .

தேசிய புலனாய்வு முகமையும் (ழிமிகி) தன் பங்கிற்கு இது லவ் ஜிஹாத் என்று கூறி இந்த வழக்கை விசாரிப்பதற் கான அனுமதியை உச்சநீதிமன்றத்தில் பெற்றுள்ளது. பா.ஜ.க தமது அரசியல் ஆதாயத்திற்காக
தேசிய புலனாய்வு முகமை (ழிமிகி), வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை பணியவைப்பதை அப்பட்டமாக செய்து வருவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.


அது போன்றே மதமாற்றத்திற்கு பின் நடந்த இத்திருமண விவகாரத்தில் மத்திய அரசு என்ஐஏ-வை பயன்படுத்தியிருப்பது அந்த அமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. 18 வயது பூர்த்தியான இந்திய குடிமக்கள் யாவரும் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுக்கவும், தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளவும் இந்திய அரசியல் சாசனம் முழு சுதந்திரத்தையும், உரிமையையும் வழங்கியுள்ளது. கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் என்ஐஏ-வின் தலையீடுகளுக்கு ஊடே உச்சநீதிமன்றம் தனிமனித சுதந்திரத்தை பாதுகாத்து நீதியை நிலை நாட்டவேண்டாமா?

ஒருவரின் மதமாற்றம் மற்றும் திருமணம் முடிவில் தலையிட்டு தனிமனித உரிமையை பறிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது.

இந்த நிலையில் ஹாதியாவின் கொச்சின் விமான நிலைய அறைகூவல் சரித்திரத்தில் இடம்பெறத்தக்கது . உலகமே உற்றுநோக்கிய அந்நிகழ்வு கேள்விக்கே இடமின்றி அனைவரையும் ஹாதியாவின் பக்கம் அணி திரட்டிவிட்டது.

கணவர் கார்டியன் அல்ல. என்ன ஒரு முட்டாள்தனமான விளக்கம்

தம் கணவனுடன் செல்லவே விருப்பம் என்ற ஹாதியா விடம் உங்கள் கல்வி செலவை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்று நீதிபதிகள் சொன்னபோது கல்வி நிதியை என் கணவரே பார்த்துக்கொள்வார் என்ற கம்பீரம் அடடா இதுவல்லவோ கம்பீரம் என சொல்லவைத்தது.

இதுதானா நீதி?

11 மாத சட்டவிரோத கடத்தலில் சிக்கி தவித்த அந்த இளம்பெண்ணுக்கு என்ன நிவாரணம் வழங்கியது நீதிமன்றம். ஹாதியா செய்தது தேசத்துரோக குற்றமா? என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? உயர் நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்யும் துணிச்சல் எண்ணம் வந்தது எப்படி? 21 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் திருமண உரிமையை மதமாற்ற உரிமையை, நீதித்துறையே அவமானப்படுத்த்தினால் எங்கு போய் முறையிடுவது .அரசியல் சாசன சட்டம் பிரிவு 21 க்கு எதிராக நடந்தது ( No one shall be deprived of his life and liberty except in accordance with law -article 21) நீதித்துறைக்கே களங்கமன்றோ? ஹதியாவுக்கு கிடைத்தது நீதியா நீங்களே சொல்லுங்கள்.