பாபரி வழக்கு: குழப்பங்களை ஏற்படுத்த ஷியா வக்ப் வாரியத்தை பயன்படுத்தும் சங்கிகள்

இந்தியா

அயோத்தியில் பாபர் பள்ளி இடிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடக்க இருக்கிறது.இப்போது,மத்தியிலும் 16 மாநிலங்களிலும் அசுர பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக,பாபர் பள்ளி இருந்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பாரதீய ஜனதா அரசு நடக்கிறது.அயோத்தியில் முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்தியநாத் வந்த உடன் வக்பு வாரிய குழுவை கலைத்தார்.


ஷியா வக்ப் வாரியத்தின் வாக்குமூலம்

இப்போது உத்தர் பிரதேசத்தின் ஷியா வக்பு வாரியம் பாபர் பள்ளியை,ஏற்கெனவே இருந்த இடத்தை விட்டு தள்ளி வேறு ஒரு இடத்தில் கட்டிக்கொள்கிறோம் என்று புதிதாக ஒரு வாக்குமூலப் பத்திரத்தை ஆகஸ்ட் 8 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறது.30 பக்கங்கள் கொண்ட இந்த வாக்குமூலப் பத்திரத்தில்,'சர்ச்சைக்குரிய இடம் என்பது உண்மையில் ஷியா வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம்.எனவே, இந்த இடத்துக்கு ஷியா வக்புவாரியம் தான் உரிமை கோர முடியும். நீண்ட காலம் இருக்கும் பாபர் பள்ளி பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் ஷியா வாரியமே முன் வைக்க முடியும்' என்பது இதன் மைய கருத்தாக இருக்கிறது.ஆனால், ஷியா வக்பு வாரியத்துக்கு அதற்கான உரிமை கிடையாது.இப்போது, பள்ளியை வேறு ஒரு இடத்தில் கட்டி கொள்கிறோம் என்று சொல்வது மக்களை குழப்புவதற்காகவே.

வழக்கில் ஷியா வாரியம் ஒரு வாதி அல்ல

பாபர் பள்ளி உரிமை தொடர்பாக பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் தொடங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் வரை நடைபெற்ற வழக்கில் ஷியா வாரியம் மனுதாரர் இல்லை.


அதனால்,அலகாபாத் உயர்நீதி மன்றம் 2010 ல் தீர்ப்பு அளிக்கையில், ராம் லாலா, நிர்மோகி அகரா, சுன்னத் ஜமாஅத் வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் இடத்தை பிரித்து கொடுத்த போதும் அதில் ஷியா வக்பு வாரியம் இடம் பெற வில்லை. பாபர் பள்ளி இடத்தில் தனக்கு பங்கு கூறாத அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்பு வாரியம் மேல்முறையீடும் செய்யவில்லை. எனவே இப்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வாக்குமூலப் பத்திரத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.


பாபர் பள்ளிக்கு சொந்தம் நாடி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஷியா வக்பு வாரியங்கள் 1946 வரை மோதிக்கொண்டன. 1946 ல்மாவட்ட நீதிமன்றம் பாபர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத் வக்பு வாரியத்துக்கு தான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கி விட்டது. இத்தீர்ப்பினால் பாபர் பள்ளி உரிமை கோரும் வழக்கை நடத்தும் உரிமையும் சுன்னத் ஜமாஅத் வக்பு வாரியத்துக்கு வந்துவிட்டது.அதன் பின்னர் பாபர் பள்ளி விவகாரத்தில் முடிவு எடுக்கும் எந்த உரிமையும் ஷியா வக்பு வாரியத்துக்கு இல்லை. வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்த ஷியா வக்பு வாரியத்தில் இருக்கும் சில கையாட்களை பயன்படுத்தி சங்கிகள் இப்படி ஒரு மனுவை பதிவு செய்திருக்கிறார்கள்.பாபர் பள்ளி இட உரிமை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ல் அளித்த தீர்ப்பின் மேல் முறையீட்டு விசாரணை தொடங்க மூன்று நாட்களே இருந்த நிலையில் ஷியா வக்பு வாரியம் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதிலிருந்து வழக்கை குழப்பவும் திசை திருப்பவும் சங்கி அரசியல் சக்திகள் ஷியா வக்பு வாரியத்தை தூண்டி விட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.


20 கோடி முஸ்லிம்களுக்கு சொந்தமானது பாபரி

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் பாபர் பள்ளி வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி வரும் மூத்த வழக்குறைஞர் ஜபர்யாப் ஜீலானி,"இந்த பள்ளி சுன்னத்தி முஸ்லிமிற்கும் சொந்தமில்லை,ஷியாவுக்கும் சொந்தமில்லை.

இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது.பள்ளியை எங்கே கட்ட வேண்டும் என்பதும் நீதிமன்றத்தின் விவகாரம்.இது தொடர்பில் ஷியா இமாம்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தங்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளார்கள்.இப்போது,ரிஸ்வி சொல்வதற்கு முற்றிலும் மாற்றமான கூற்று அது" என்று கூறி இருக்கிறார்.

"பாபர் பள்ளிவாசலில் கடைசியாக தொழுகை நடத்திய இமாம் அப்துல் கப்பாரும், பள்ளிவாசல் முத்தவல்லி (தலைமை நிர்வாகி) யான சமீபத்தில் காலமான ஹாசிம் அன்சாரியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள். இப்போதும் அயோத்தியில் சுன்னத்தி முஸ்லிம்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள். திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்த ஷியா வக்பு வாரியத்தை சங்கிகள் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் பைசாபாத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் காலிக் அஹ்மது.

பாபரி கட்டப்பட வேண்டும்

-மௌலானா யசூப் அப்பாசி என்னும் ஷியா மார்க்க அறிஞர் உத்தரப்பிரதேச வக்பு வாரியத்தின் வாக்கு மூலப்பத்திரம் பற்றி கருத்து சொல்லாவிட்டாலும் பாபர் பள்ளி இருந்த அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்ற தனியார் சட்ட வாரியத்தின் கோரிக்கையை தானும் ஆதரிப்பதாக கூறி இருக்கிறார்.

மத்திய ஷியா வக்ப் வாரியத்தின் தலைவர் ஜீபார் அஹ்மது பாரூக்கி உபி ஷியா வக்ப் வாரியத்தின் தலைவர் ரிஸ்வி மீது பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பிரச்னையை திசை திருப்ப அவர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்றார்.

70 ஆண்டுகள் இந்திய அரசியலின் மைய அச்சாக இருந்துள்ள பாபர் பள்ளி பிரச்சனைக்கு ஒரு தீர்வும் முற்றுப்புள்ளியும் உச்சநீதிமன்றத்தின் மூலம் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கையில் பாபர் பள்ளி பிரச்சனை அணைந்து விடாமல் மதவெறி அரசியலுக்கான விறகாக இன்னும் பல ஆண்டு காலத்துக்கு நீண்டிருக்கும் வேண்டும் என்று ஆவல் உடையவர்கள் அதற்கென இப்போது ஷியாக்களை தூண்டி விட்டு முஸ்லிம்களுக்கு இடையில் மோதல் உருவாகவும் வழக்கு இன்னும் பல பத்தாண்டுகளுக்கும் தள்ளிப்போகவும் ஷியா வக்பு வாரியத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள்.

 

பாபர் பள்ளிவாசல் சுன்னத் முஸ்லிம் வக்ப் என்று 1949 தீர்ப்பு-அருள்செல்வன்

 

1945ல் உ.பி. ஷியா வக்ப் வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. பாபரி பள்ளிவாசல் ஒரு ஷியா வக்ப் என்று அறிவிக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்ட்டது. (உரிமையியல் வழக்கு எண் 29) பாபரி பள்ளிவாசலில் இருந்த சில கல்வெட்டுகள் மற்றும் சில வாய்வழி சாட்சியங்கள் அடிப்படையில் இந்த பள்ளிவாசலை மீர் அஹ்மது பாகி என்னும் இஸ்ன அஷாரி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கட்டினார் என்றும் அதனை நிர்வாகம் செய்தவர்கள் மிர் பாகி குடும்பத்தைச் சேர்ந்த ஷியாக்கள் என்றும் ஷியா வக்ப் வாரியம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. ஷியாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் பாபர் பள்ளிவாசல் இருந்தது என்றும் அவர்கள் தான் இந்த பள்ளிவாசலில் தொழுது வந்தார்கள் என்றும் ஷியா வக்ப் வாரியம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிபதி முத்தவல்லிகளின் குடும்ப பாரம்பரியத்தை அறிய பல சாட்சிகளை விசாரித்தார். மேலும் பள்ளிவாசலில் பின்பற்றப்படும் தொழுகை நடைமுறைகளையும் ஆராய்ந்தார்.


பள்ளிவாசலில் உள்ள கல்வெட்டுகளையும் மேலும் பல வரலாற்று சான்றுகளையும் அவர் விசாரணைக்கு உட்படுத்தினார். தீவிர விசாரணைக்கு பிறகு பைசாபாத் உரிமையியல் நீதிபதி மார்ச் 30 1946ல் பின் வரும் தீர்ப்பை வழங்கினார்:


1. பள்ளிவாசலை நிறுவியவரின் மார்க்க அணுகுமுறையை பொறுத்தே பள்ளிவாசல் ஷியா அல்லது சுன்னத்தியா என்று நிர்ணயிக்க இயலும்.


2. பள்ளிவாசலை நிர்மாணிக்க உத்தரவிட்ட பாபர் ஒரு சுன்னத்தி முஸ்லிமாவார்.


3. இந்த பள்ளிவாசலை பராமரிக்க பாபர் மானியம் வழங்கினார்


4. பள்ளிவாசலின் முத்தவல்லிகள் ஷியாக்களாக இருந்தனர். ஆனால் இது ஒரு பெரிய விவகாரம் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது.


5. நினைவில் உள்ள காலம் முழுவதும் இந்த பள்ளிவாசலின் இமாம்களாக இருந்தவர்கள், தொழுகைக்கு குரழைப்பு அளிக்கும் முஅத்தீன் அனைவரும் சுன்னத்தி முஸ்லிம்களே


6. ரமலானில் இரவு தொழுகையான தராவீஹ் இந்த பள்ளிவாசலில் நடைபெற்றுள்ளது. முத்தவல்லிகள் இதற்கான செலவுகளையும் செய்துள்ளனர். தராவீஹ் தொழுகை சுன்னத்தி முஸ்லிம்களின் நடைமுறையாகும். ஷியாக்களுக்கு தராவீஹ் தடைச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.


7. இந்த பள்ளிவாசலை இரு தரப்பினரும் பயன்படுத்தினார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால் ஷியாக்கள் பயன் படுத்தினார்கள் என்பதினால் இது ஒரு ஷியா வக்ப் சொத்து ஆகாது. மேற்கண்ட அடிப்படையில் பாபரி பள்ளிவாசல் சுன்னத்தி முஸ்லிம்களின் வக்ப் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.