கால்நடைகளை உணவுக்காக, மத வழிபாட்டுக்காக அறுப்பதற்கு தடையில்லை

இந்தியா

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு கடும் நிபந்தனைகளை கொண்ட சட்ட விதிகளை மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017 என்ற பெயரில் கடந்த மே 23 ம் தேதியன்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இதன்படி இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்த நிபந்தனைகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பின. இதனால் பல கோடி ரூபாய்கள் வணிகம் நடைபெற்று வந்த மாட்டு சந்தைகள் வெறிச்சோடி போனது. விவசாயிகளும்,வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மாட்டுக்கறி உண்போரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.


மதுரை உயர்நீதிமன்றம்

தங்களின் உணவு உண்ணும் உரிமையில் தலையிட்டு மத்திய அரசு தங்கள் பிராமணிய சிந்தனையை திணிக்கும் விதமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் சட்ட விதிகள் அரசமைப்பு சாசன சட்டம் வழங்கியுள்ள தனிநபர் உரிமை,வழிபாட்டுரிமை ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதால் அவற்றை தள்ளுபடி செய்யக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞர் அஜ்மல் கான் ஆஜரானார். மத்திய அரசின் புதிய விதிமுறைகள் தாய் சட்டமான மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்ற வாதங்களை வைத்தார்.


இதனடிப்படையில் உயர் நீதிமன்றம் மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு தற்காலிக தடை விதித்தனர். இதையடுத்து மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை உறுதி செய்து தற்காலிக தடையை நீக்க மறுத்தது.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு


இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த அகில இந்திய குரைஷி சங்கம் சார்பில் அப்துல் பஹீம் குரேஷி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை தன்னிச்சையானது மட்டுமின்றி தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானது. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வணிகர்கள் வளர்க்கும் விலங்குகள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் பட்டினி கிடக்க நேரிடும். மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வணிகர்களுக்கு பொருளாதார சுமையும் ஏற்படும். அத்துடன் அவர்கள் பசு காவலர்களால் மிரட்டலுக்கும், கொடுமைக்கும் ஆளாகும் சூழ்நிலையும் உருவாகும்.


அடிப்படை உரிமைக்கு எதிரானது


உணவு தொடர்பான ஒருவரின் தேர்வு (சைவம் அல்லது அசைவம்), அவரது தனிப்பட்ட சுதந்திரம், மனசாட்சி மற்றும் அந்தரங்கம் ஆகியவற்றின் அங்கம் என்பதால் இந்த தடை அசைவ உணவை உண்பவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.


விலங்குகளை மத சடங்கு களுக்காக பலியிடுவதை தடுப்பதும் ஒருவரின் மத ரீதியான சுதந்திரத்தில் தலையிடுவதாகும். மிருகவதை தடை சட்டத்தின் 28-வது பிரிவு மத சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை அனுமதிக்கிறது. ஆனால் தற்போது மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள் பலியிடுவதை தடை செய்கிறது. இதனால் மிருகவதை தடுப்பு தொடர்பான மூல சட்டத்துக்கு எதிராக இந்த விதிமுறை அமைந்து உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.


ரத்து செய்ய கோரிக்கை


மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவது மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானதாகவும் அமைந்து இருக்கிறது. எனவே மிருகவதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.


இவ்வாறு தனது மனுவில் தெரிவித்திருத்தார். இதேபோல் மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.


விசாரணை


இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர் அப்துல் பஹீம் குரேஷி சார்பில் மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜரானார்.


மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதாடுகையில் கூறியதாவது:- மத்திய அரசின் இந்த அறிவிக்கை கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிக்கையால் மாட்டிறைச்சிக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும் இந்த அறிவிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உள்ளது.


தடை இல்லை


இந்த தடை நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடியது. இதனால் மத்திய அரசின் அறிவிக்கை இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதால், நாட்டில் தற்போது மாட்டு இறைச்சிக்கு தடை இல்லை. புதிய விதிமுறைகளை செயல்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்தாது. இந்த வி‌ஷயத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டு அறியும். மாட்டு இறைச்சி ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அதற்காக தனி சந்தைகளை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். எனவே, இந்த தருணத்தில் நீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட தேவை இல்லை என்று மத்திய அரசு கூறியது. இதையடுத்து இந்த அறிவிக்கையை சட்ட விரோதம் என ஏன் அறிவிக்க கூடாது என பதிலளிக்க கோரி வழக்கை ஒத்தி வைத்தனர்.


இறுதி தீர்ப்பு


இந்த வழக்கு மீண்டும் கடந்த வெள்ளியன்று 11&8&2017 விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி கெஹர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் அறிவிக்கை 22 (e)(iii) பிரிவு சட்ட முரணானது எனவே மத ரீதியான பலியிடுதலையும், இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதையும் தடை செய்ய முடியாது என தீர்ப்பளித்தனர். புதிய அறிவிக்கையில் சட்ட முரணான அம்சங்கள் இடம் பெற்றால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.


உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களிடையேயும், பொது மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்வரும் தியாகத் திருநாள் அன்று கால்நடைகளை அறுத்து பலியிட எவ்வித தடையும் இல்லை என்ற நிலை இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.