மூர்க்கத்தனத்திற்கு மூக்கனாங்கயிறு போடுவார் லாலு

இந்தியா

வருமான வரித்துறையையும், சி.பி.ஐ.யையும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக்கி பாஜகவுக்கு எதிரான அரசியல் தலைவர்களை வேட்டையாடி வருகிறார் மோடி.


மேற்கு வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கை உடைத்துப்போட முயன்றார் மோடி, பாவம்... மூக்குடைந்து போனார். பின்னர் அவர் டில்லி மாநிலத்தை ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அரசு அஸ்திரங்களை ஏவிவிட்டார். அவரின் எம்.எல்.ஏ.க்களை இழுத்து அவர்களை விட்டே கேஜ்ரிவால் மீது களங்கத்தை சுமத்த முனைந்தார். தலைமைச் செயலரின் அறையிலேயே ரைடு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். பின்னர் அவரின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பியது. இங்கும் தினகரன் மீது இதே அஸ்திரங்களை அதிரடிப் பாய்ச்சல் நடத்த வைத்தார். இதன் விளைவாக தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை வளையத்தில் சிக்கித் தவிக்கிறார். இதன் மூலமாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் தமிழகத்தின் அதிமுக அணிகள் மூன்றுமே பாஜகவிற்கு ஆதரவாகக் கைதூக்கி விட்டன. "இப்போதைக்கு இதுபோதும்" என்று மோடியின் கவனம் பீகார் அரசியலின் பக்கம் தாவி இருக்கிறது.


நெருங்க முடியவில்லை


வருகிற 2019ம் ஆண்டு மத்திய ஆட்சிக்கான பொதுத்தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்குத் தடையாக இருப்பது பீகார் மாநிலம். இதன் பின்னணியில் இருப்பவர் லாலுபிரசாத் யாதவ். "ஆனானப்பட்ட நிதிஷ்குமாரையே வளைத்து விட்டோம். லாலுவை மட்டும் நெருங்கவே முடியவில்லையே!" என்று அமித்ஷா கொதிக்கிறார்.


லாலுபிரசாத் யாதவ் யார்? பீகாரின் தனிப்பெரும் தலைவராக 1977ம் ஆண்டு மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சியை உருவாக்கக் காரணமாக இருந்த முழுபுரட்சி இயக்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் ஆத்மார்த்தமான சீடர்தான் லாலு. மாணவப் பருவத்தில் இருந்தே ஜே.பி. இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். கொண்ட கொள்கைக்காக எதையும் இழக்கத் தயங்காதவர் தான் லாலு. எனவே தான் தன் அரசியல் காலம் முழுவதும் பாஜகவை எதிர்த்தே அரசியல் நடத்தி வருகிறார்.


சாதனை


2004ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக லாலு இருந்தார். அப்போது அவர் ரயில்வே துறையின் நஷ்டத்தைப் போக்கி லாபம் காட்டினார். உலகமே வியந்தது. ஐ.ஐ.டி. என்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகம் அவரை அழைத்துத் தன் மாணவர்களுக்கு அந்த சாதனைக்கான வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டது. அவரும் வகுப்பு நடத்தி ஆரவார வரவேற்பு பெற்றார். நாடே அவரின் சாதனையை அப்போது கொண்டாடிக் களித்தது. 18 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது ஏதோ புதிய கண்டுபிடிப்பாம். லாலு சில தனியார் நிறுவனங்களுக்கு ரயில்வேயின் ஹெரிடேஜ் ஓட்டல்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடாம். இப்போது தான் கண்டுபிடித்தார்களாம். சி.பி.ஐ.யை ஏவிவிட்டு லாலுவை முட்டுகின்றனர். அவரோ பனங்காட்டு நரி. இந்த சலசலப்புகளுக்கா அஞ்சுவார்? கடந்த ஜூலை 7ல் இந்த நடவடிக்கை.இதேபோன்று கடந்த ஜூன் 20ல் வருமான வரித்துறையை மோடி ஏவிவிட்டார். அதன்படி அதிகாரிகள் லாலு குடும்பத்தின் மீது பாய்ந்து பிராண்டி இருக்கின்றனர். கேட்டால் பினாமி சொத்துப் பரிவர்த்தனையாம். எதிர்க்கட்சித் தலைவர்களின் தீவிர செயலாக்கத்தை அடக்கி, ஒடுக்கி, முற்றிலுமாக முடக்கிவிட வேண்டும் என்பதில் முரட்டுத்தனமான முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர் மோடியும் அமித்ஷாவும். அவர்களின் மூர்க்கத்தனத்துக்கு மூக்கனாங்கயிறு போடும் முயற்சியில் இறங்கிய லாலு இப்போது வீறுகொண்டு எழுந்து விட்டார். பீகாரின் அடித்தட்டு மக்களின் தன்னிகரற்றத் தலைவராகத் திகழும் லாலு போர்க்குரல் எழுப்பி இருக்கிறார்.


இனி அவர் பாஜகவுகுச் சிம்மசொப்பனமாய் மாறிக் குடைச்சல் கொடுப்பதை முடுக்கிவிடப் போகிறார். கடந்த பீகார் சட்டசபைத் தேர்தலின் போது பிஜேபி தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் லாலுவோ ஈகோவை மறந்து செயல்பட்டார். பிஜேபியைப் பொது எதிரியாகக் கொண்ட அரசியல் கட்சிகளையெல்லாம் ஓரணியில் திரட்டி மகாகூட்டணி அமைத்தார். இதன் மூலமாக பிஜேபியை பீகாரில் தலைதூக்கவிடாமல் தடுத்துவிட்டார். இனியும் லாலுவை விட்டு வைத்தால் 2019ல் பிஜேபிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விடும் என்று மோடி கருதியதால்தான் லாலு மீது பாய்ச்சல் காட்டுகிறார்.


நம்பிக்கை நட்சத்திரம்


பீகாரில் நடத்திக்காட்டிய மெகா கூட்டணி சூத்திரம் போலவே தேசிய அளவிலும் மகாகூட்டணியை உருவாக்கும் செயலாக்கத்தில் லாலு இனி தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். முடங்கிக் கிடந்த லாலுவை முடுக்கிவிட்டுத் தனக்குத்தானே தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டது தான் பாஜக அரசு. பீகார் தலைவரான லாலு இனி பாஜகவுக்கு எதிரான தேசியத் தலைவராக விசுவரூபம் எடுக்கக்கூடிய நாள் நெருங்கி வருகிறது. மதச்சார்பற்ற கட்சிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்து வருகிறார். கடந்த 2014ல் மக்களவைப் பொதுத் தேர்தல் நடந்த போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். உடனே நிதிஷ்குமாரைத் தொடர்பு கொண்ட லாலு, பிஜேபி அணியில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த மோடியோ, நிதிஷ் அரசை உடைத்தார். அவரின் சீடரைக் கொண்டே தலித் அரசியல் நடத்தி ஆட்சியை ஒரு தலித் தலைவரிடம் ஒப்படைத்தார் மோடி. அந்த முதல்வரோ மோடியின் வாய்மொழியையே தலையெழுத்தாய் ஏற்று நடந்தார். லாலுவோ, நிதிஷ், ராகுல் ஆகியோரையும் தன் அணிக்குள் ஒருங்கிணைத்து தேர்தலில் வென்றார்.


நிதிஷ்குமாரை முதல்வர் ஆக்கிக் காட்டினார். தன் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கே அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் அவர் நிதிஷ்குமாருக்கு வாய்ப்புத் தந்தார். இந்த தியாக உணர்வு யாருக்கு வரும்? மோடி பறித்த முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு மீட்டுத்தந்த செம்மல்தான் லாலு.


கேலிக்கூத்து


மோடி அரசின் இந்த கேலிக்கூத்தை மக்களின் முன்பு அம்பலப்படுத்தி மக்கள் மோடியைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் நிலையை உருவாக்கி விட்டார் லாலுபிரசாத் யாதவ். எனவே நிதிஷ்குமார் கூட லாலுவுக்குக் கடமைப்பட்டு இருக்கிறார்.நான்கு மாடுகள் தனித்தனியே உலவிய போது சிங்கம் அடித்துக் கொன்றது. மற்ற நான்கு மாடுகள் ஒன்றாக நின்றபோது சிங்கமே பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒளிந்தது என்ற கதை தமிழகத்தில் பிரபலம். இதுதான் இப்போது இந்திய மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்குத் தேவையான உத்தி ஆகும். அபாயம் தீர்க்க இதுவே உபாயம். இதில் கவனம் செலுத்தி அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் மகாகூட்டணிக்கு இப்போதே தயாராக வேண்டும். இல்லையேல் ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் தனித்தனியே பிரித்து தலைவர்களை முடக்க பாஜக சதி செய்துவிடும்.