வங்கத்தில் பா.ஜ.க.வின் போட்டோஷாப் கலவரம்...

இந்தியா

மேற்கு வங்கத்தில் வன்முறை தணிந்து வரும் வேளையில், அதனை மீண்டும் கொழுந்து விட்டு எரிய செய்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

குறிப்பாக சமூக வளைத்தளங்களில் புனையப்பட்ட படங்கள் காணொலிகளை பதிவேற்றம் செய்து கலவரத்தை ஏற்படுத்துவது சங்கிகளின் கைவந்த கலையாக உள்ளது. உ.பி; மாநிலம் முசாபர் நகரில் பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த காணொலிகளை பரப்பி வெறியை தூண்டினர். அதே பாணியை சமீபத்திய மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது அவர்கள் கையாண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

2002 குஜராத் கலவர படம்

மேற்கு வங்கத்தில் தனது முகநூல் பக்கத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து வெறுப்பு உமிழும் பதிவைச் செய்தவரை காவல்துறை கைதுச் செய்த அதே நாளில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் நுபுர் சர்மா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவில் வன்முறையாளர்கள் வாகனம் ஒன்றுக்கு நெருப்பு வைக்கும் காட்சியை பதிவிட்டு வங்கம் எல்லா அம்சங்களிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று மாலை ஜன்தர் மந்தரில் என்னுடன் போராட வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். உடனடியாக இதற்கு ட்விட்டர் பதிவாளர்கள் தகுந்த பதிலடி கொடுத்து பாஜகவின் பொய் முகத்தை தோலுரித்துக் காட்டினார்கள். நுபுர் சர்மா பதிவேற்றம் செய்த அந்த படம் வங்காளத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் எடுக்கப்பட்டது அல்ல. பிப்ரவரி 28, 2002ல் அகமதாபத்தில் முஸ்லிம் விரோத கலவரத்தின் போது எடுத்த படம் என்பதை அவர்கள் ஆதாரத்துடன் பதிவுச் செய்தனர்.


இந்த பதிவிற்கு சில நாட்கள் முன்பு அரியானாவை சேர்ந்த பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜிதா மாலிக் தனது முகநூல் பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் ஒரு பெண்ணின் சேலையை ஒருவர் பிடித்து இழுக்கிறார். அருகில் இருக்கும் ஒரு கும்பல் அதனை சிரித்த முகத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். அந்த பெண் கைகளில் சேலையை பற்றி அனைத்துக் கொண்டு கெஞ்சுவது போன்று இருக்கிறது. அதன் கீழ் மேற்கு வங்கத்தில் இந்து பெண்களின் நிலையை பாரீர்.. மேற்கு வங்க அரசில் இந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்த்தரப்பினரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நோக்கில் பதிவிட்டிருந்தார்.


இந்த படம் பாஜக மேற்குவங்க மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இந்தி பேசும் மாநில பாஜகவினர் லட்சக்கணக்கில் பகிர்ந்து வந்தனர்.


திரைப்படக் காட்சியை கலவரக் காட்சியாக...


ஆனால், விஜிதா மாலிக் பதிவிட்டிருப்பது, போஜ்பூரி படமான அவுரத் கிழோனா நகி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி, அந்த காட்சியில் நடித்திருப்பவர், அதாவது அந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பவர் தற்போது பாஜகவின் தலைவர்களில் ஒருவரான மனோஜ் திவாரி என்பவர் ஷாபி ஷர்மா என்ற நடிகையின் சேலையை உருவும் படம் ஆகும். இந்த படத்தில் பாஜக தலைவர் மனோஜ் திவாரியை மட்டும் வெட்டி விட்டு, அப்படியே படத்தை பதிவிட்டு அதனை முஸ்லிம்களுக்கு எதிராக சித்தரித்து, வன்முறையை தூண்டியிருக்கிறார்.


இந்த படம் வைரலாக பரவிய சில மணி நேரங்களில் அந்த படத்தின் உண்மையான படத்தை போட்டு பலரும் இது திட்டமிட்ட வன்முறை உருவாக்கும் போலி படம் ஆகும். இதனை மக்கள் நம்ப வேண்டாம். பாஜகவின் சூழ்ச்சியில் இந்து மக்கள் சிக்கிவிட வேண்டாம் என பதிவிட்டிருந்தனர்.இதையடுத்து பாஜக தலைவர் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் அந்த படத்தை தங்களின் பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தருணத்தையும் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி இந்து முஸ்லீம் மக்களை மோத விட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது மீண்டும் ஒரு முறை அம்பலமாகியிருக்கிறது.


ஏற்கனவே பாஜக எந்த ஒரு இடத்தில் மதரீதியான வன்முறையை கையில் எடுத்திருக்கிறதோ, அந்த இடம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக வெற்றியையே பெற்று தந்திருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அண்மையில் கூட யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீண்டும் தங்களின் ஆய்வு மூலம் இதனை உறுதி செய்திருந்தனர். இந்த நிலையில்தான், மேற்கு வங்கத்தை பாஜக தற்போது குறிவைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதரீதியான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் அருவருக்கத்தக்கது என விமர்சித்திருக்கிறது.இனி பாஜகவினர் போடும் பதிவுகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.