16 ஆண்டுகள் சிறை... 10 வழக்குகளில் விடுதலை...உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்தியா

குல்சார் அகமது வானி,பொய் வழக்குகளில் இந்திய புலனாய்வு துறைகளால் சிக்கவைக்கப்பட்ட எண்ணற்ற முஸ்லிம் சிறைவாசிகளில் ஒருவர்.16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.

2000 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் 14 ஆம் நாள்,சபர்மதி ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குல்சார் அகமது வானி கைது செய்யப்பட்டார்.16 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்,இந்த வழக்கு முடிந்தாலும் முடியாவிட்டாலும் முதலில் வானியை வெளியில் விடுங்கப்பா என்று காவல் துறையிடம் காட்டமாக தெரிவித்து விட்டார்கள்.


பல்கலைக்கழக மாணவர்


வானி காஷ்மீரை சேர்ந்தவர். கைதாகும் போது அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்தார். சிறந்த மாணவராக விளங்கியவர்.சபர்மதி ரயில் குண்டு வெடிப்பில் முதலில் கைது செய்யப்பட்ட முகம்மது அக்கில் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி வானி கைது செய்யப்பட்டிருக்கிறார்.வாணியின் தூண்டுதலின் பேரில் தான் நானும் முகமது மரூப்பும் சேர்ந்து ரயிலில் குண்டு வைத்தோம் என்று விசாரணையின் போது முகம்மது அக்கில் தெரிவித்ததாக காவல்துறை சொல்கிறது.அக்கிலும் மரூப்பும் 2001 ல் பிணை பெற்றுவிடுகிறார்கள். வானிக்கு பிணை கொடுக்க அன்று முதல் தொடர்ந்து 16 ஆண்டுகள் காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறது.காஷமீரி என்பதற் காகவே கூடுதல் கவனம் எடுத்து நீதி மறுத்துள்ளார்களா? தெரியவில்லை.


இந்த வழக்கு இன்னும் விசாரணை மட்டத்தையே தாண்டவில்லை. வானி பிணை கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2015 ல் மனுச் செய்தார்.வானிக்கு பிணை மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்,"இவர் போன்றவர்களுக்கு பிணை கொடுத்தால் மனித சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று வியாக்கியானம் வேறு செய்தது.உயர்நீதிமன்றம் பிணை மறுத்ததை எதிர்த்து 2015 ல் வானி உச்சநீதிமன்றம் சென்றார்.


உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தும் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது.ஏப்ரல் 25(2017)அன்று தான் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெகர் மற்றும் டி.ஒய்.சந்திராசூட் அமர்வு,வானியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டதை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் அக்டோபர் 31 ஆம் நாள் வழக்கு விசாரணையை முடித்து கொள்ள வேண்டும்.விசாரணை முடிந்தாலும் முடியாவிட்டாலும் நவம்பர் 1ஆம் நாள்(2017) வானியை பிணையில் விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.வானி கைது செய்யப்படும் போது அலிகார் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு (ஜீலீபீ) படித்து கொண்டிருந்தார். அவர் மீது 11 வழக்குகள் போட்டார்கள்.அதில் 10 வழக்குகளில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டு விட்டார்.மீதம் இருப்பது இந்த ஒரு வழக்கு தான். 10 வழக்குகளில் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவருக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்திருப்பது மிகப்பெரிய அநீதி என்பதையே உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு உணர்த்துகிறது.


உச்சநீதிமன்றத்தின் கண்டனம்


"என்ன ஒரு அவமானம்! இந்த மனிதர் 16 ஆண்டுகள் சிறைவைக்கப் பட்டிருக்கிறார்.ஆனால்,11 ல் 10 வழக்குகளில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.


இது ஒரு அவமானம்


"உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞரை பார்த்து இப்படி சொல்லி இருப்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெகர். இந்த வழக்கில் மொத்தம் 96 சாட்சிகள்.அரசு தரப்பு சாட்சிகளில் 20 பேர் தான் 15 வருடங்களாக விசாரிக்கப் பட்டிருக்கிறார்கள்."உங்களால் சாட்சிகளை விசாரிக்க முடியாமல் போனதற்கு வானி ஏன் சிறையில் வாட வேண்டும்" என்றும் கெகர் காட்டமாக கேட்டிருக்கிறார்.


"காவல்துறை தான் என்னை தீவிரவாதியாக அடையாளப் படுத்தியது. நான் காஷ்மீர் குடிமகனாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம்" என்று வானி நீதிபதிகளிடம் முறையிட்டிருக்கிறார். "ஒரு நேர்மையான மனிதனுக்கு இத்தனை பெயர்கள் எதற்கு?என்று இர்ஷாத்,அஷ்ரப், அப்துல் ஹமீது என்று வானியின் இதரப் பெயர்களை பட்டியல் போட்டார் தலைமை நீதிபதி கெகர்.


குண்டுவைத்தது யார்?


"விசாரணை அதிகாரிகள் எனக்கு பல பெயர்கள் கொடுத்தார்கள்.எனக்கு புனை பெயர்கள் ஏன் கொடுத்தார்கள் என்று தெரியாது. இதற்கு எனக்கு பதில் தெரியவில்லை".வானியின் சார்பில் அவரது வக்கீல் முகம்மது இர்ஷாத் ஹனீப் நீதிபதிகளுக்கு பதில் அளித்தார்.'இந்த வழக்கின் முழு கதை சந்தேகமும் புதிர்களும் சூழ்ந்தது'என்றும் ஹனீப் கூறி இருக்கிறார்.


இந்த வழக்கில் வானிக்கு எதிரான சாட்சியங்கள் அனைத்தும் "ரகசியமாக பெறப்பட்டவை"என்று தான் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரை சேர்ந்தவர்கள் எப்படி சந்தேகத்தின் வளையத்துக்குள் கொண்டுவரப் படுகிறார்கள்.பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் படுகிறார்கள் என்பதற்கு வானியின் கதை மற்றும் ஒரு உதாரணமாக இருக்கிறது.


ஏற்கனவே 10 வழக்குகளில் குற்றமற்றவரான வானி 11 வது வழக்கிலும் விடுதலை ஆவது தான் நீதியாக இருக்கும்.அப்படி என்றால் சபர்மதி ரயிலில் குண்டு வைத்தது யார்? முஸ்லிம்களை பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் சதி திட்டத்துடன் நடந்த பல குண்டு வெடிப்புகளுடன் சேர்ந்ததுதானா இதுவும். பொய் வழக்குகளையே 16 ஆண்டுகள் வைத்து விசாரித்து கொண்டிருக்கும் காவல்துறை 16 ஆண்டுகள் கழித்தும் பிணை மறுக்கும் நீதித்துறை இவர்களிடம் உண்மை குற்றவாளி கொண்டு வாங்க சார். என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.