பசு அரசியல்: பிராமணர் போட்டுடைக்கும் உண்மைகள்

இந்தியா

பாஜக ஆளும் ஜார்க்கண்ட்டில் 12 ஆயிரம் பசுக்களுக்கு, ஆதார் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மனிதனை விட பசுவின் உயிர் போற்றப்படும் ஆட்சியில் நாம் வாழ்ந்து வருகிறோம். பசுவைப் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தியவர் டெல்லி பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணிபுரிந்த த்விஜேந்திர நாராயண ஜா -(டி.என்.ஜா). இவரைப் பற்றி அவுட்லுக் வார இதழில் (17.9.2001) ஷீலா ரெட்டி எழுதியுள்ளதை இங்கே காலத்தின் அவசியம் கருதி தமிழில் தருகிறோம்.


நீங்கள் இதைக் கேள்விப் பட்டால் ஆச்சரியமடைவீர்கள்! டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டி.என்.ஜா கடந்த ஒரு மாத காலமாக காவல் துறையின் பாதுகாவலோடு தான் பல்கலைக்கழகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார். 


அவருக்கு ஏன் இந்த நிலை? என்ன தவறு செய்தார்? 


அவர் செய்ததெல்லாம் இந்திய பசுவின் புனிதத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது தான். 


புராதான இந்திய வரலாற்றில் இதுவரை வெளிப்படையாக பேசப்படாத பொருளான இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை "புனித பசுவும் இந்தியர்களின் மாட்டிறைச்சி உணவும்" என்ற தனது புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விமர்சனம் செய்ய ஆரம்பித்தவுடன் அவருக்குத் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்களும் தொல்லைகளும் தொடரலாயின. தனது பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவியை நாடினார்.


இந்தியாவில் கலாச்சார யுத்தம் துவங்கியுள்ளது. இதனை அறிவுஜீவிகள் தக்கமுறையில் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் இப்பேராசிரியர். இவரது இந்தப் புத்தகம் விற்பனைக்கு வரும் முன்பாகவே வி.ஹெச்.பி. தனது தொண்டர்களைத் தூண்டிவிட்டு ஜா எழுதிய புத்தகத்தை தீயிட்டுக் கொளுத்துமாறு கூறியுள்ளது. 


இத்தகைய எதிர்ப்புகளை எதிர்நோக்கியே ஜா தனது புத்தகத்தை சமய புனித நூல்களில் காணப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். 


"எனது புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டுமென்றால் இந்துக்கள் தங்களது புனித நூல்களான வேதங்களையும், உபநிடதங்களையும், ஸ்மிருதிகளையும், புராண இதிகாசங்களையும், தடைசெய்ய வேண்டியிருக்கும்" எனக் கூறுகிறார் ஜா. 


"நான் ஆதாரங்களை அளித்துள்ளேன். இதற்கு மாற்றமான ஆதாரங்கள் அவர்களிடமிருந்தால் அவற்றைத் தர ஏன் அவர்கள் முன்வரக் கூடாது? அவர்கள் அறிவிலிகள், புராண நூல்களைப் பற்றி ஏதும் அறியாதவர்கள். அப்படியிருக்கும் நிலையில் அவர்கள் எங்கனம் அவற்றை கற்றுணர்ந்திருப்பார்கள்? குருட்டுத் தனமான நம்பிக்கை அவர்களை ஆட்டுவிக்கிறது. இத்தகைய மூடத்தனத்தை ஆதாரங்களின் அடிப்படையில் களைவதே ஒரு வரலாற்று ஆசிரியர் இன்றைய காலகட்டத்தில் ஆற்றக்கூடிய தலையாயப் பணியாகும்" என்கிறார் ஜா. 


புராதான இந்தியாவில் மாட்டிறைச்சி


புராதான இந்தியாவில் இந்துக்கள், பிராமணர்கள் உட்பட அனைவரும் மாட்டிறைச்சி உண்பவர்களாகவே இருந்தனர். பண்டைய வேளாண் சமூகத்தில் கால்நடைகள் உற்பத்திக்கு துணைபுரியும் விலங்குகளாக இருந்ததால் பசுவைக் கொன்றால் சிறு அபராதம் விதிக்கப்பட்டது. ஆதலால் மாட்டிறைச்சி உண்பது இஸ்லாமிய கிறித்தவ சமயத்துடன் எவ்விதத் தொடர்புமில்லை என்கிறார் உயர் பிராமணரான ஜா. 


எந்த உண்மையான வரலாற்று ஆசிரியரும், ஏன் ஆர்.சி.மஜும்தார் மற்றும் கே.எம்.முன்ஷீ போன்ற இந்து வரலாற்று ஆய்வாளர்கள் கூட, ‘இந்துக்கள் மாட்டிறைச்சி உண்டனர்’ என்ற கூற்றை மறுக்கவில்லை. பிராமணர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிராக கடும் தடை விதிப்பதன் மூலம் மாட்டிறைச்சி எவ்வாறு சாமானியர்களின் அன்றாட உணவாகிவிட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 19ம் நூற்றாண்டு வரை மாட்டிறைச்சி உண்ட பிராமணர்கள் தன்னுடைய இக்கூற்றுக்கு எதிராக கொதித்தெழுவார்கள் என்பது தனக்கு முன்னரே தெரியும் என்கிறார் ஜா. முப்பதாண்டுகளுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் மாட்டிறைச்சியை சுவைத்துப் பார்த்ததாகக் கூறுகிறார் இவர். 


பசு பாதுகாப்பு அரசியலின் தொடக்கம்


19ம் நூற்றாண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதி ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கும் வரை இந்தியாவில் இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகவில்லை. இதன் பின்னர் பசு பாதுகாப்பு என்பது, அரசியலில் இந்துக்களை அணிதிரட்ட ஒரு கருத்தாக்கமாகப் பயன்படுத்தப்பட்டது. ஜாதியம் தீவிரமானபோது மாட்டிறைச்சி உண்போர் கீழ் ஜாதியினராக, தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்டனர்.பேராசிரியர் ஜாவின் கூற்றுப்படி பௌத்தர்களும் மாட்டிறைச்சி உண்டனர் என்பதை பௌத்த சமய நூல்களான ‘மஹாபரினிபான சுத்தா’ மற்றும் ‘அங்குத்தர நிகரயா’ என்ற ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கிறார். புத்தரே தனது இறப்புக்கு முன்னர் உண்ட கடைசி உணவு பன்றி இறைச்சி என்கிறார் இவர். 


பௌத்தர்கள் மட்டுமல்ல சமணர்களும் புலால் உணவு உண்டனர் என்கிறார் ஜா. மஹாவீரர் ஒருமுறை தனது சமய எதிரியை வீழ்த்த கோழி மாமிசத்தை உண்டார் என்கிறார் ஜா. கோழி மாமிசத்தை சமைப்பதற்கு அவர் விதித்த தடையெல்லாம் உயிருடன் கோழியை அறுத்து சமைக்கக்கூடாது என்பதுதான். பூனை வேட்டையாடிய கோழியை சமைத்து சாப்பிடுவதற்கு தடையில்லை என்று கூறியவர் மஹாவீரர். இவையெல்லாம் சமண மத நூல்களில் இடம்பெற்றுள்ளன என்கிறார் இவர். அதுவும் குறிப்பாக சமண நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பெரு நிறுவனங்களான ‘மேதிலால் பனாரசிதாஸ்’ மற்றும் ‘சோஹன்லால் ஜெயின் தரம் பிரச்சாரக் சமதி’ ஆகிய வெளியீட்டாளர்களின் நூல்களிலேயே இவை காணக் கிடைக்கின்றன என்கிறார் ஜா.


இந்திய சமூகம் இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது. இத் தருணத்தில் வரலாற்றாசிரியர்கள் தங்கள் பெரும் பொறுப்பை உணர்ந்து மூடத்தனங்களையும் பழமைவாதங்களையும் முறியடிக்க வேண்டும். அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போதும், தொலைக்காட்சியில் இராமாயண மஹாபாரத தொடர்கள் ஒளிபரப்பப்பட்ட போதும் இவர் தனது எதிர்ப்பைக் காட்டத் தயங்கவில்லை. இத்தொடர்கள் மக்களை இந்துமயமாக்க பயன்படுத்தப்பட்ட உபாயங்கள் என்று கூறும் ஜா, அரசுத் தொலைக்காட்சி இத்தகைய செயலை செய்திருக்கக் கூடாது என்கிறார். இத்தொடர்கள் வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை என்கிறார் இவர்.வயதான தளர்ச்சியுற்ற நிலையில் இருக்கும் ஜாவிடம் வீரியம் மட்டும் குறையவில்லை. இவர் தனது அடுத்தக்கட்ட அறிவாயுதமாக கையில் ஏந்தியிருப்பது ‘சோரம்போன கடவுளர்களும் சொக்க வைக்கும் மங்கைகளும் “ என்ற புத்தகமாகும். 


(தமிழில். பேரா. அ. அஷ்ரப் அலி)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.