''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்

இந்தியா

பூஜா சுகான் பாண்டேக்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும். பூஜா சுகான் பாண்டே இவர் இந்து மகாசபையின் பொதுச் செயலாளர். ‘அதுகென்ன இப்போ?’ என்கிறீர்களா.

இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் இந்துக்களுக்கு ஆதரவாக, அவர்களின் நலனில் அக்கறையோடு பேசினால் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், எந்த இந்துத்துவத் தலைவர்களும் இந்து நலனில் கவனம் கொண்டு பேசுவதில்லை.


ஏனென்றால் இந்துத்துவம் பெரும்பான்மையான பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துகளுக்கு எதிராக இருப்பதால், அதைப் பேசினால், இந்துத்துவ தலைவர்களுக்கே அடி, உதை விழும் என்பதால் பூஜா சுகான் பாண்டேவும் மற்ற இந்துத்துவத் தலைவர்களைப் போலவே தனது இந்துக் கடமையாக இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.


முஸ்லிம் பெண்கள் இந்துவாக வேண்டுமாம்


‘முத்தலாக் முறையால் பாதிக் கப்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்து மதத்திற்கு வாருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும்’ என்று அழைப்பு விடுக்கிறார்.குஜராத்தில் முஸ்லிம் கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, குழந்தையையும் கொலை செய்த ‘கருணை’ உள்ளம் கொண்ட இந்துமகா சபையின் தலைவர் அன்புடன் அழைக்கிறார், இஸ்லாம் பெண்களின் விவகாரத்துப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு. ஆமாம், தீர்த்து வைப்பார். ஆளையே தீர்த்துக் கட்டிட்டா, பிரச்சினையையும் ஒரேடியாகத் தீர்த்திடுமே. சரி. அவர்கள் சொல்வதுபோல் மதம் மாறி வந்தால் நீதி கிடைக்கும் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஜாதியற்ற முஸ்லிம் பெண்களை இந்து மதத்திற்குள் எந்த ஜாதியில் வரவு வைப்பீர்கள்? உங்களைப் போன்ற பார்ப்பன சமுகத்தில் சேர்த்துக் கொள்வீர்களா? பெயரளவிலாவது ‘முடியும்’ என்று சொல்ல முடியுமா?


அது இருக்கட்டும். உங்கள் ஜாதி பெண்கள் இன்று உயிரோடு இருப்பதற்கான காரணத்தின் வரலாறு அறிவீர்களா? பூஜா சுகான் பாண்டேவின் பாட்டிகள், இறந்த தங்கள் கணவன்களோடு, அதாவது உங்கள் தாத்தாக்களின் பிணங்களோடு உயிரோடு வைத்துக் கொளுத்தியது உங்கள் இந்து மதம்தான். உங்கள் பாட்டிகளையே புனிதத்தின் பெயரில் படுகொலை செய்தபோது, கிறஸ்துவ மதத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள்தான் உங்களையும் உங்கள் தாயையும் உங்கள் அன்பான இந்து ஆண்களிடமிருந்து பாதுகாத்தார்கள்.


உங்கள் அத்திம்பேரு, மாமனாரு, கொழுந்தானாரு இவர்களிடமிருந்தே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நீங்கள், இஸ்லாம் பெண்களின் முத்தலாக் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்து மதத்திற்கு ‘பாதுகாப்பாக’என்று அழைப்பதை கிறிஸ்துவ வெள்ளைக்காரன் கேள்விப்பட்டால், உங்களை எவ்வளவு இழிவாக நினைப்பான் என்பதை நினைத்தால், எனக்கு வருத்தமாக இருக்கிறது.


இந்து பொது விதி தெரியுமா?


சரி. ஒரு இந்து ஆண் ஒரே சமயத்தில் சிறுமிகள் உட்பட எத்தனை பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற இந்து பொதுவிதி இருந்தது தெரியுமா? பலதார மணத்தைத் தண்டனையாகவும் பால்ய விவாகத்தைக் கிரிமினல் குற்றமாகவும் மாற்றி, இந்துப் பெண்களைப் பாதுகாத்தது, இந்து மத எதிர்ப்பாளரான டாக்டர் அம்பேத்கர் தான் என்பதையாவது அறிவீர்களா?


‘படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயில்’ என்று ஒரு வைணவ பழமொழி உண்டு.அதுபோல், இஸ்லாம் பெண்கள் மீது அக்கறையாகப் பேசிவிட்டு, அந்தப் பக்கமாக இஸ்லாம் பெண்கள் மீது வன்முறையும், பள்ளிவாசலை இடிப்பதுமாக இருக்கிற உங்களின் கரங்களின் கொடூர சேவைகளை நிறுத்துங்கள். கருணை நிறைந்த உங்கள் கைகளில் முஸ்லிம்களின் ரத்தவாடை வீசுகிறது. இந்துமதத் தலைவரும் புனிதருமான காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மாட்டிக் கொண்டு, இந்துப் பெண் எழுத்தளார் அனுராதா ரமணன் பட்ட பாட்டை உலகமே அறியும். மரணித்த அனுராதா ரமணனுக்கான நீதியையும்,கணவன் இருந்தும் இல்லாமல் தனிமையில் துயரத்தோடு வாழ்க்கிற இந்துப் பெண்ணான நமது பாரதப் பிரதமர் மோடியின் துணைவியாருக்குமான நீதியையும் பெற்றுத் தந்துவிட்டு, பிறகு முஸ்லிம் பெண்கள் மீதான உங்கள் பேரன்பைக் காட்டுங்கள். முடியாவிட்டால், இஸ்லாம் மதத்திற்கு மாறி உங்களின் மீதி வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.