முத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு! முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை

இந்தியா

ஷரிஅத் (இஸ்லாமிய சட்டத்தின்) அடிப்படைக்கு எதிராக முறையற்ற முறையில் எவராவது முத்தலாக் கூறினால் அவர்கள் ஒட்டு மொத்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டுமென்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டம் லக்னோவில் உள்ள பிரபல இஸ்லாமிய சர்வகலாசாலையான தாருல் உலூம் நத்வத்துல் உலுமில் கடந்த ஏப்ரல் 16 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லானா வலி ரஹ்மானி செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.

எட்டு அம்ச வழிமுறை

ஷரிஅத் சட்டத்தின் நடைமுறை களைத் தவறாகப் பயன் படுத்துவதில் இருந்து தவிர்க்க எட்டு வழிகாட்டும் நறிமுறைகள் இக்கூட்டத்தில் வகுக்கப்பட்டிருப்பதாக வலி ரஹ்மானி தெரிவித்தார்.

இந்த வழிமுறைகளை பின்பற்றாமல் மனம்போன போக்கில் முத்தலாக் சொல்லி திருமண பந்தத்தை முறிக்கும் ஆண்கள் சமூக புறக்கணிப்பை சந்திக்க நேரிடும் என வாரியம் எச்சரிப்பதாக வலி ரஹ்மானி தெரிவித்தார். இதன்மூலம் தலாக் விவகாரத்தில் முஸ்லிம்களையும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை யும் மனம் போனபடி விமரிசித்தவர்களின் வாய்களுக்கு நிரந்தரப் பூட்டுப் போடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை பொறுத்தவரையில் அதில் உள்ள சிறப்புக் கூறுகளை இருட்டடிப்பு செய்வது போல் தவறான கற்பிதங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. ஆண் பெண் சமத்துவம் குறித்தும், முஸ்லிம் மகளிர் பெரும் துன்பம் அனுபவிப்பதாகவும் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் மகளிர்க்கு தேவையில்லை என கூக்குரல்களும் நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளும் பெருகிவிட்ட சூழலில் சுயபரிசோதனை செய்யும் விதமாக திருப்புமுனை கருத்து ஒன்றை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. ஷரிஅத்தைப் பின்பற்றி அதனை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனப்பூர்வ உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கியுள்ள இஸ்லாமிய ஷரியத், தலாக் என்ற விதியின் வாயிலாக முஸ்லிம் பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது என வாரிய தலைவர் முஹம்மத் ரபி ஹசன் நத்வி தெரிவித்தார். அதே நேரம் முத்தலாக்கை தவறாகப் பயன்படுத்துவது சமூகப் புறக்கணிப்பை வலியச் சென்று வரவேற்பதாகும்.

ஒருவன் விவாகரத்து செய்யும்போது ஒரே தடவையில் மூன்று முறை தலாக் தலாக் தலாக் எனக் கூறுவது வலுவான கண்டனத்தை எழுப்புவதோடு சமூகத்தில் இதனை விவாதமாக்கி சமூகப் புறக்கணிப்புக்கு வழிகோலும் என்றார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் அந்நியர் தலையீட்டை எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இமாம்கள் பரப்புரை செய்ய வேண்டும்

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முத்தலாக் மற்றும் பலதார மணத்திற்கு எதிராக சில பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீடு தொடர்பாக எதிர்வரும் மே மாதம் 11ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட இருக்கும் சூழலில் தனியார் சட்ட வாரிய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் வாரியம் வெளியிட்டு 8 வழிகாட்டும் நெறிமுறைகள் கொண்ட சிறு நூலை வெள்ளிக்கிழமை எல்லா பள்ளிவாசல்களில் உள்ள இமாம்களும் விளக்கிப் பேசி உறுதியுடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் வலி ரஹ்மானி கூறினார்.

பாதிக்கப்படும் பெண்களுக் கென தனியாக ஹெல்ப் லைன் ஒன்றை தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனியார் சட்ட வாரியத்தின் மகளிர் பிரிவு அமைத்துள்ளது. நாடு முழுவதும் கருத்தரங்குகள் மற்றும் கள ஆய்வு நடத்திய போது வெளிவந்த தகவல்கள் வியப்பூட்டுவதாகும். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் முஸ்லிம்களில் விவாகரத்து மிகவும் குறைவு.

முஸ்லிம்களின் விவாகரத்து பிரச்னை உண்மைக்குப் புறம்பாக பெரிதாக்கப்படுகிறது என்கிறது வாரியம். பொது சிவில் சட்டத்தை திணிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வாரியம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 5.81 கோடி முஸ்லிம்கள் கை யெழுத்திட்டுள்ளார்கள் என்றும் இவர்களில் 2.71 கோடி பெண்களும் அடங்கும் என்றும் வலி ரஹ்மானி தெரிவித்தார். கையெழுத்திட்ட நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் ஷரிஅத்தில் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர்.

முஸ்லிம்கள் திருமணங்களை ஆடம்பரமின்றி நடத்த வேண்டுமென்றும், தங்கள் செல்வத்தை மக்களுக்கு கல்வி கற்பிக்க செலவிடவேண்டுமென்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முஸ்லிம்களை வலியுறுத்துவதாக வலி ரஹ்மானி தெரிவித்தார். முஸ்லிம் அமைப்புகள் மணவிலக்குப் பெற்ற பெண்கள், அனாதரவான பெண்கள் மற்றும் விதவைகளுக்கு தங்கள் உரிமைகளை பெறுவதற்கு முழு அளவில் உதவிட வேண்டுமென்றும் அவர் வாரியத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.

மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பரப்பப்படும் தவறான பரப்புரைகளை எதிர்கொள்ள, முறியடிக்க மகளிர் சிறப்பு பிரிவு ஒன்றை தனியார் சட்ட வாரியம் அமைத்துள்ளது.
திருமணம், மண விலக்கு தொடர்பாக சமரசம் செய்து தீர்த்து வைத்தல், கவுன்சிலிங் செய்தல் போன்றவற்றை தனியார் சட்ட வாரியத்தின் மகளிர் பிரிவு செய்து வருகின்றது. இதுவரை இந்த மகளிர் குறை தீர்க்கும் அமைப்பு 15 ஆயிரத்து 500 ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மகளிர் ஹெல்ப் லைன் எண் 18001028426 (பணி நேரம் காலை 10 முதல் 5 வரை) என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பகிஷ்காரம் என்ற எச்சரிக்கை, முத்தலாக்கை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என வாரிய மூத்த நிர்வாகி கமல் பரூக்கி தெரிவித்தார். தவறாக நடப்பவர்களுக்கு சமூக விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூட தடை ஏற்படுத்தப்படும் என கூறுகிறார்.

இந்த தடை 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஹரியானா மாநில மேவாத் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு அங்கு முத்தலாக்கே நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார். முத்தலாக்கை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மகளிர் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் போலிகளும் இதனால் தெளிவு அடைவார்கள் என எதிர்பார்க்கலாம். எட்டு வழிகாட்டும் நெறிமுறைகள் கொண்ட சிறு நூலை மார்க்க அறிஞர்களின் விளக்கத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிவாசல்களில் பரப்புரை செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

  

1. தம்பதிகள் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்

முஸ்லிம் தம்பதிகள் தங்களுக்கிடையிலான மண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளை விவாகரத்து வரை கொண்டுசெல்லாமல் அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். அனைவரிடமும் குறைபாடுகள் இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தங்கள் இணையிடம் பல நல்ல குணங்கள் உள்ளன என்பதை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் மட்டுமே கொள்கையாக இருக்க வேண்டும். சிக்கலை தீர்க்க முடியவில்லை என்றால் தம்பதியினர் தற்காலிகமாக பிரிந்து இருக்கவேண்டும்.

2. பெரியோர்களின் சமதான முயற்சி

பரஸ்பரம் தங்களுக்கிடையிலான சமரச முயற்சி தோல்வியடைந்தால் இரு தரப்பிலும் உள்ள பெரியவர்களை நாடி சமாதான பேச்சு வார்த்தை மூலம் பிணக்கிற்கு தீர்வு காண வேண்டும். அதுவரை தம்பதிகள் இருவரும் இரு தரப்பினரிடையே உள்ள நல்ல அம்சங்களை முன்னிறுத்தி, அல்லாஹ்வுக்காக பொறுமையுடன் வாழ்க்கையைத் தொடர முயற்சிக்க வேண்டும்.

3. பிரிவதற்கு ஒரு தலாக் மட்டுமே

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்து பிரிவதுதான் இரு தரப்பினரின் கண்ணியத்திற்கும் மறுவாழ்விற்கும் மன நிம்மதிக்கும் சிறந்தது என்ற நிலை ஏற்படுமானால் கணவன் மனைவிக்கு அவள் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒரு தலாக் கொடுக்க அனுமதியுள்ளது. அவர் மனைவியை விட்டு ஒரு இத்தா காலம் பிரிந்திருக்க வேண்டும். கணவன் இத்தா காலத்தில் இல்லறத் தொடர்பு கொள்ளாமல்இருந்தால் அவர்களின் திருமண பந்தம் தற்காலிகமாக முற்று பெறும்.

அவ்வாறு ஒரு தலாக் சொல்லப்பட்ட மனைவி கணவர் வீட்டிலேயே தங்கவேண்டும். அவரை அந்தக் காலங்களில் பராமரிக்கும் பொறுப்பு கணவரையே சார்ந்தது.

ஒரு தலாக் சொல்லப்பட்ட ஒரு மாத காலத்தில் கணவன் இல்லறத்தின் வாயிலாக இணைந்து விட்டால் அவனால் கூறப்பட்ட அந்தத் தலாக் நிகழாது. எனினும் அவருக்கிருந்த தலாக் உரிமைகளில் ஒன்றை அவர் இழந்தவராவார்.

4. மஹர் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்

தலாக் சொல்லப்பட்ட மனைவி கர்ப்பிணியாக இருந்தால் பிரவசவ காலம் வரை அவரின் இத்தா காலம் தொடரும்.

அம்பெண்ணுக்கு கணவன் தலாக் சொல்லி அவனுடைய திருமணத்தின் போது வாக்களித்திருந்த மஹர் என்ற மணக்கொடையை மனைவிக்கு கொடுக்காமல் இருந்திருந்திருந்தால் அதனை அப்போது அளிப்பதுடன் இத்தா காலம் முடியும் வரை அவளின் பராமரிப்புச் செலவை கணவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

5. சமரசம் ஏற்பட்டால் மீண்டும் திருமணம்

முதல் தலாக்கின் இத்தா காலம் முடிவடைந்த பிறகு இருவருக்கிடையிலும் சமரசம் ஏற்பட்டு இருவரது பிரச்னையும் சரி செய்யப்பட்டால் இரு தரப்பிலும் சுமுக முடிவுடன் புதிதாக மஹர் கொடுத்து திருமணம் செய்யவேண்டும்.

கணவர் ஒரே அமர்விலேயோ, தருணத்திலேயோ, ஒரு மாத காலத்திற்கு இடையிலேயோ, மூன்று தலாக் சொல்ல அனுமதியில்லை. இடைவெளிவிட்டு இரண்டு தூய்மை காலங்களில் இரண்டு தலாக்கள் சொல்லப்பட்டு, அதன் பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டாலும் முந்தைய திருமணம் பந்தம் தொடரும். எனினும் புதிதாக உரிய மஹர் கொடுத்து பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

6. மூன்றாவது முறை தலாக் சொல்லிவிட்டால் நிரந்தர முறிவு

இரண்டு முறை தலாக் கொடுத்துவிட்டதால் அவருடைய வாழ்வில் அவர் மீண்டும் மூன்றாவது முறை தலாக் கொடுத்தால் அதற்குப் பிறகு முழுமையாக நிரந்தரமாக திருமண பந்தம் இரத்தாகிவிடும்.

7. பெண்ணின் குலா உரிமை

 மனைவி தனது கணவருடன் வாழ விரும்பவில்லையெனில் அவள் குல்ஆ என்ற பெண்களுக்கேயுரிய மண முறிவு உரிமையின் மூலம் ஜமாஅத் மற்றும் சமாதானக்கு குழுவை அணுகி தனது திருமணத்தை முறித்து குல்ஆ பெற்றுக் கொள்ளலாம்.

தானாக முன்வந்து மணமுறிவைப் பெறும் பெண், தன் கணவரிடம் பெற்ற மணக்கொடை மஹரை திரும்ப கணவர் வசம் ஒப்படைக்க வேண்டும். மூன்று மாதங்கள் இத்தா இருந்து துக்கம் அனுஷ்டித்து, அவரின் மூலம் எந்த வாரிசும் தனக்கு இல்லை என்பதை தெரிவிக்கவேண்டும்.

8. முத்தலாக்

முறையான காரணமின்றி நியாயமின்றி முத்தலாக் சொல்பவரை முஸ்லிம் சமூகம் சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.