முஸ்லிம்கள் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்

இந்தியா

தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 12 விழுக்காடாகவும் பழங்குடியினர் இடதுக்கீட்டை 10 விழுக்காடாகவும் உயர்த்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் கே. சி. சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிட்டி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான திரு. சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பின் வரும் நன்றி கடிதத்தை ஆங்கிலத்தில் அனுப்பியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா. அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தெலுங்கானாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தி 2014ல் நடைபெற்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியமைக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்தியமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் முறையாக நிறைவேற்றப்படாத நிலையை தான் நமது நாட்டில் பார்க்கிறோம். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடே அளிக்க கூடாது என்று கொள்கையுடைய பாஜக உங்கள் நட்புக் கட்சியாக இருந்த போதினும் மிகவும் துணிச்சலாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நீங்கள் இடஒதுக்கீட்டை அளித்தது எங்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4) அல்லது 16 (4) பிரிவின் கீழ் இடஒதுக்கீட்டிற்கு அதிக பட்ச உச்சவரம்பை நிர்ணயிப்பது நீதியானது அல்ல என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் ஒ. சின்னப்ப ரெட்டி ஆகியோர் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேலே இருக்கும் வகையில் முஸ்லிம்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் நியாயமான அளவு இடஒதுக்கீட்டை அளித்து நீதியை நிலைநாட்டியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை மேற்கோள் காட்டி தெலுங்கானாவிலும் இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தாங்கள் அறிவித்திருப்பது சமூக நீதி ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


சமூக நீதியை நிலைநாட்டும் தங்கள் அரசு தொடர்ந்து நிலைபெற்று சீரிய முறையில் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

 

முந்தைய பதிவு தெலுங்கானாவில் விரைவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.