காஷ்மீரில் மனிதனை கேடயமாக்கி மாண்பிழந்த இராணுவம்

இந்தியா

நாட்டின் மிகவும் பதட்டமான பகுதி ஒன்றில் வாழும் மக்களாக காஷ்மீரிகள் இருக்கிறார்கள். 1971 போருக்குப் பிறகு நாட்டின் எல்லை இப்போதுதான் மிகவும் பதட்டமான நிலையில் இருக்கிறது என்று மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இதுவரை காஷ்மீர் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றிருந்தது. இப்போது மானத்துக்கும் இல்லை.

காஷமீர் மக்களை ஒரு மனிதனாக மதிக்கும் அவசியம் இல்லை என்பதை ராணுவம் காட்டியிருக்கிறது. ஒரு ராணுவ ஜீப்பின் முன் பக்கத்தில் ஒரு காஷ்மீர் இளைஞரை கட்டிவைத்து ஜீப் சென்று கொண்டிருப்பதாக 16 நிமிடங்கள் ஓடும் ஒரு காணொளி வெளியாகி பரபரப்பானது. இந்த காட்சியைக் கண்டு காஷ்மீர் மனித உரிமை அமைப்புகள் கொந்தளித்தன. மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஜீப் மறுவாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த குந்திபூரா கிராமத்துக்குச் சென்றிருக்கிறது. அந்த ஜீப்பில் இருந்து வெளிப்படும் ஒரு குரல், "ராணுவத்தின் மீது கல்லெறிபவர்களுக்கு இந்தக் கதிதான் கிடைக்கும்" என்று அந்த நபரைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்வதும் அந்தக் காணொளியில் கேட்கிறது. காஷ்மீரில் சிறப்பு அதிகாரச் சட்டத்துடன் மிடுக்காக நடந்து கொள்ளும் ராணுவம் செய்யும் மனித உரிமை மீறல்கள் கணக்கில் இல்லாதவை. ஒரு சில மாதங்கள் முன்பு ‘புர்கான் வாணி’ என்ற இளைஞர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட, காஷ்மீர் கொந்தளித்தது. ராணுவத்தின் மீது கோபமுற்று இளைஞர்கள் வழக்கம் போல் கல்லெறிப் போராட்டம் செய்தனர். ஆனால் இம்முறை நிலைமை வேறு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சர்சங்சாலக்காக இருந்த மனோகர் பரீக்கர் ராணுவ அமைச்சர். விடுவாரா? கல்லெறிந்தவர்களும் பயங்கரவாதிகள் ஆனார்கள். தலைமையின் சமிக்ஞை கிடைக்க ராணுவம் பெல்லட் குண்டுகளால் சுட்டுத் தள்ளியது. பெல்லட் குண்டுகள் உயிர்ப் பலி உண்டாக்காது. கடும் காயங்கள் ஏற்படுத்தும். ஆனால் ராணுவம் முன்னமே திட்டமிட்டுக் கொண்டு கண்களைக் குறிபார்த்து சுட்டது. 3000க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை கெட்டார்கள். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்று யார் கண்ணையும் ராணுவம் விட்டு வைக்கவில்லை. பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தத் தடை இருந்த போதும் அதைப் பொருட்படுத்தவில்லை. பெல்லட் தாக்குதல் இந்தியாவுக்கு உலக அரங்கில் கண்டணத்தையும் அவப்பெயரையும் உண்டு பண்ணியது. இந்தச் சம்பவம் ஏப்ரல்9 ஆம் நாள் நடந்திருக்கிறது. ஆனால் சர்ச்சை ஏற்பட்ட பின்னரே ஏப்ரல் 14ஆம் நாள் ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், மனித உரிமை மீறலில் சிக்கிக்கொண்ட ராணுவத்தை குற்றத்தில் இருந்து சட்டப்படியாக விடுவிக்கவே இந்த விசாரணை பயன்படும். ராணுவத்துக்குச் சொந்தமான 5 ஜீப்புகள் பத்திரமாக செல்வதற்கு வசதியாகவே கல்லெறிபவரில் ஒருவரைப் பிடித்து முதல் ஜீப்பின் முன்பக்கம் கட்டிவைத்து ஜீப்புகள் பாதிப்பு இல்லாமல் சென்றன என்று ஒரு ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கூறுகிறார்.


காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் சிறப்பு அதிகாரச் சட்டத்துடன் சர்வாதிகாரப் போக்கில் நடக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்திய பெண்கள் கூட்டத்தில் புகுந்து கண்ணத்தில் அறைந்த காவல்துறை அதிகாரிக்கும் காஷ்மீரிலும் வட கிழக்கிலும் மனித உரிமைகள் மீறும் ராணுவத்துக்கும் வித்தியாசம் இல்லை.


காவல்துறை மற்றும் ராணுவத் தின் அத்துமீறல்களையும் குற்றங் களையும் சட்ட மன்றங் களிலும் நாடாளு மன்றத்திலும் உடனுக்குடன் விவாதத்துக்குக் கொண்டுவர வேண்டும். குடியாட்சியில் குடிமக்களுக்கான சட்டங்கள் இயற்றவும் சர்ச்சைகளை விவாதிக்கவும் தானே நாடாளுமன்றம். மக்கள் பிரதிநிதிகள் கள்ள மௌனம் காப்பதால்தான் அதிகார அமைப்புகள் ஆணவமாக நடந்து கொள்கின்றன. சிறப்பு அதிகாரச் சட்டத்துக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு ராணுவம் மனித உரிமை மீறல்கள் செய்கிறது. இதற்கு அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் இது அனுமதிக்கப் படுகிறது. குடிமக்களின் கௌரவம் நாட்டின் பாதுகாப்புக்கு இணையானது என்பதை நமது அரசுகள் எப்போது புரியப் போகின்றன.

 

இனி தேர்தலில் வாக்களிக்கமாட்டேன்: பரூக் அஹ்மது

பீர்வா துணை மாவட்டம் சில் என்ற கிராமத்தை சேர்ந்த 26 வயதான பரூக் அஹ்மதுதர் என்பவர்தான் இராணுவத்தினால் ஜீப்பில் கட்டப்பட்டு மனிதகேடயமாக பயன்படுத்த்பட்டவர். ஜிலீமீ கீவீக்ஷீமீ இணைய தளத்துக்கு பேட்டியளித்த பரூக் அஹ்மது தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். எலும்புகள் நொறுங்கி எங்கே தான் இறந்து விடுவேனோ என்று பயந்து கொண்டிருந்ததாகவும், வழியில் யாரையாவது பார்த்து உதவி என்று கத்தினால் கூட சுட்டு விவோம் என்று மிரட்டப்பட்டதாகவும், எங்கே இறந்து விடுவோமோ என்று இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.


உள்ளூர் இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்படும் போது அவரது கிராமத்தினர் பார்த்து தகவல் சொன்னதின் பேரில் அவரது குடும்பத்தினர் வந்து அவரை மீட்டிருக்கிறார்கள். பாரூக்கின் சகோதரர் பயாஸ் அஹ்மது கூறும்போது பாரூக் இதுவரை எந்த கல்லெறி சம்பவத் திலும் ஈடுபட்டதில்லை என்று கிராமத் தலைவரை அழைத்துச் சென்று செஞ்சிக் கதறிய பிறகே அவரை விடுவித்தனராம். என் வாழ்க்கையில் இதுவரை எந்த கல்லெறி சம்பவத்திலும் ஈடு பட்டதில்லை. அதுமட்டுமின்றி நடைபெற்ற இடைத்தேர்தலில் நான் ஓட்டு போட்டிருக்கிறேன். இராணுவத்தினரை பொறுத்தவரை கல்லெறிபவரோ,அமைதியாக இருப்பவரோ யாராக இந்தா லும் தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர்.எந்த குற்றமும் செய்யாத என்னை ஏன் அடித்து கட்டி வைத்து இந்த சித்திரவதைகளை செய்தார்கள்? கஷ்மீரியாக பிறந்ததே குற்றமா? இனி என்வாழ்நாளில் ஓட்டுப் போட செல்ல மாட்டேன் என கதறுகிறார் பரூக் அஹ்மது.


இஸ்ரேல் ராணுவம் கல்லெறியும் பலஸ்தீன சிறுவர்களை இப்படி வாகனத்தின் முன்னால் கட்டி வைத்து ஊர்வலம் செல்வதைப் போல இநதிய இராணுவமும் நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சர்வதேச மனித உரிமை சட்டங்களை காட்டி இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் பாலஸ்தீன் சிறுவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளதால் இஸ்ரேல் தற்போது அவ்வாறு நடந்து கொள்வதில்லை.ஆனால் இஸ்ரேலில் பயிற்சி பெறும் நமது இராணுவம் மட்டும் அடாவடிகளை தொடர்ந்து கொண்டிருப்பது  வெக்கக் « கடானது. இது தொடர் பாக மாநில அரசும், இராணு வமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். விசா ரணை முடிவுகள் வருவதற்குள் எத்துணை உயிர்கள் பறிபோகுமோ?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.