பொதுசிவில் சட்டம் இப்போது தேவையில்லை; சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்ட ஆணையம்..

இந்தியா

2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.

பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி, 21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ். சௌகான், பொதுசிவில் சட்டம் என்றால் என்ன வென்று தனக்கே தெரியாது என்று கூறியிருந்தார்.


பாஜக தவிர வேறு அரசியல் கட்சிகள் எதுவும் பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை. சட்ட ஆணையம் 16 கேள்விகளை சுற்றுக்கு விட்டு கருத்தறிந்தது. முஸ்லிம்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டது. முஸ்லிம்கள் பல கோடி பேர் சேர்ந்து எங்களுக்கு ஷரியத் சட்டம் தான் வேண்டும்.


பொதுசிவில் சட்டம் வேண்டாம் என்று கையெழுத்து போட்டு சட்ட ஆணையத்துக்கு அனுப்பினார்கள். சட்ட ஆணையம் பொதுசிவில் சட்டத்துக்கு தோதான கருத்தையோ, ஒத்துழைப்பையோ பெறமுடியாமல் போனது.


இப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதி 21 வது சட்ட ஆணையத்தின் ஆயுள் காலம் முடிவடைந்தது. இதனிடையே, சட்ட ஆணையம் 185 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், இப்போதைக்கு, பொதுசிவில் சட்டம் கொண்டுவரும் சாத்தியம் இல்லை என்று கூறி இருக்கிறது. இது, முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் மற்றும் இதற்காக உழைத்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி.


பொதுசிவில் சட்டத்துக்கு மாறாக, தனிநபர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்த விவாத அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், விவாகரத்து, குழந்தைகளின் பராமரிப்பு, திருமண வயது, குடும்ப சொத்து உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைத்துள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி சௌகான், “ பொதுசிவில் சட்டம் என்பது மிகவும் விரிவானது. தற்போது, அதனை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை அளிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக, தனி நபர் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர பரிந்துரை செய்யப்படும். பொதுசிவில் சட்டம் மிகவும் பரந்துபட்டது. இந்தியாவில் இதுவரையில் இதனை செயல்படுத்திப் பார்க்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பொதுசிவில சட்டம் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டோம். பலதரப்பினருடனும் ஆலோசனை நடத்தினோம். அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். இதனடிப்படையில் ஆலோசனை அறிக்கையை வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார். அதே நேரம், அடுத்து அமைய உள்ள 22 சட்ட ஆணையம், பொதுசிவில் சட்டம் குறித்து, முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தும் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


இந்துக்கள், பார்சிகள், உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் தனிநபர் சட்டங்களில் திருத்தங்கள் குறித்தும் இந்த ஆணைய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, திருமணம், பலதாரமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், விவாகரத்துக்குப் பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பராமரிப்பு தொகை வழங்குவது, வாரிசுரிமைச் சட்டம், பரம்பரை சொத்துகளை பங்கிடுதல், விதவைகள், சொத்துரிமை, மதம் மாறி திருமணம் செய்யும் பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தை தத்தெடுப்பு, பாதுகாவலர் சட்டம் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்ச்சையான விசயங்களை இந்த அறிக்கை தவிர்த்து உள்ளது. மேலும், கிறிஸ்தவ ஆலயங்களில் பின்பற்றப்படும் பாவ மன்னிப்பு நடைமுறைக்கு மாற்று வழி குறித்து ஆராய வேண்டும் எனவும் சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.