நாம் செய்தால் கலவரம். முஸ்லிம்கள் செய்தால் பயங்கரவாதம்

உலகம்

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க நகரமான லாஸ் வேகாசில் ஒரு இசைக் கச்சேரியில் கலந்துக் கொண்டிருந்த 59 அப்பாவி மக்களை ஒரு மனிதன் சுட்டுக் கொன்றான். தனது இயந்திர துப்பாக்கியை ஒரு மணி நேரத்திற்கு மேல் இயக்கி அந்த மனிதன் 500 நபர்களை காயப்படுத்தினான்.

இது ஒரு தனி நபரால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் இதனை பயங்கரவாதச் செயல் அல்ல என்று அமெரிக்க காவல் துறை தெரிவித்துள்ளது. அந்த கொலையாளி ஒரு கிறிஸ்த்தவர் ஆவார். அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் காவல்துறை இதனை பயங்கரவாதச் செயல் அல்ல என்று தெரிவித்திருக்குமா? பயங்கரவாதச் செயல் அல்ல என்று அமெரிக்க காவல்துறை அறிவித்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.


அந்த மனிதரைப் பற்றியும் அவரது நோக்கம் குறித்தும் பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை. எனவே இது பயங்கரவாதச் செயல் அல்ல என்ற முடிவு தீர ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்துடன் பயங்கரவாதத்தை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்ற விரிவான பிரச்னையும் சேர்த்தே ஆய்வு செய்யப்பட வேண்டும்.


பயங்கரவாதம் என்றால் என்ன?

அரசியல் நோக்கங்களுக்காகச் சாதாரண குடிமக்கள் மீது பயன்படுத்தப்படும் சட்டவிரோதமான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம் என்று எனது அகராதி தெரிவிக்கிறது. இந்த வரைவிலக்கணக்கபடி பார்த்தால் பல்வேறு வன்செயல்களை நாம் பயங்கரவாதம் என்று வரையறுக்கலாம். நமது நாட்டில் நடைபெறும் வகுப்பு கலவரங்கள் பயங்கரவாதமாக தான் உள்ளது. ஏனெனில் அவை சட்டவிரோதமானவை, அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது. அது சாதாரண குடிமக்களை குறிவைக்கிறது. மேலும் அதற்கு அரசியல் குறிக்கோள்களும் உள்ளன.


கலவரம் மட்டுமே ஆனால் நம்மில் பெரும் பாலானவர்கள் வகுப்பு கலவரங்களை பயங்கரவாதச் செயல்களாக கருதுவதில்லை. 1984ல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது நமக்கு வெறும் கலவரமாக மட்டுமே தெரிகின்றது. முசப்பர்நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை நமக்கு கலவரமாக மட்டுமே தெரிகின்றது. பாபர் பள்ளிவாசல் இடிப்பிற்கு பிறகு மும்பையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லபட்ட வன்முறையும் கலவரமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடியாக நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பயங்கரவாதச் செயலாக அழைக்கப்படுகிறது. 2002ல் அஹ்மதாபத்தின் நரோதா பட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டது கலவரம் தானாம். ஆனால் அதே ஆண்டில் அஹ்மதாபத்தில் அக்‌ஷதர்மில் 30 ஹிந்துக்கள் படுகொலைச் செய்யப்பட்டது பயங்கரவாத தாக்குதலாம்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணக்கத்தில் உள்ள “குடிமக்களை இலக்காக கொண்ட தாக்குதல்” என்ற வரியாகும். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பெரும்பான்மையான தாக்குதல்கள் ஆயுதம் தரித்த படையினர் மீதே நடத்தப்படுகிறது. சாதாரண குடிமக்கள் தாக்கப்படுவதில்லை. ஆனால் நாம் இத்தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று கருதுகிறோம். அமெரிக்க சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு பின்வரும் வரைவிலக்கணத்தை தருகின்றன. தங்கள் அரசியல் அல்லது சமூக நோக்கங்களுக்காக அரசையோ அல்லது சாதாரண குடிமக்களையோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரை அச்சுறுத்துவதற்காக மக்கள் அல்லது சொத்துகள் மீது நடத்தப்படும் சட்டவிரோத தாக்குதலே பயங்கரவாதம் ஆகும்.


இந்த வரைவிலக்கணம் எனது அகராதி பயங்கரவாதத்திற்கு அளிக்கும் வரைவிலக்கணத்துடன் ஏறத்தாழ ஒத்துப் போகின்றது. நான் முன்பே குறிப்பிட்டப்படி லாஸ் வேகாசில் துப்பாக்கி சூடு நடத்தியவனை பற்றியோ அல்லது அவனது குறிக்கோளைப் பற்றியோ தெளிவாக எதுவும் தெரியவில்லை. துப்பாக்கியால் சுட்டவனின் அரசியல் மற்றும் சமூக நோக்கம் என்னவென்று தெரியாத நிலையில் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று முடிவிற்கு காவல்துறை எப்படி வந்தது?


பயங்கரவாதத்திற்கெதிரான இந்தியாவின் சட்டம் வாஜ்பாய் அரசால் 2002ல் இயற்றப்பட்டது. அதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் (போட்டா) என்று பெயர். இந்தியாவில் உள்ள பல சட்டங்களைப் போல் மிக மோசமாகவும் வடிவமைக்கப்பட்ட சட்டமாக இது இருக்கின்றது. பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணத்தை இச்சட்டம் பின்வருமாறு அளிக்கின்றது:


இந்தியாவின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பை அல்லது இறையாண்மையை குலைக்கும் வகையிலும் அல்லது மக்களிடையே அல்லது மக்களின் ஒரு சாராரிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் ஒருவர் வெடிகுண்டுகள் அல்லது அது போன்ற வெடிபொருட்கள் அல்லது எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அல்லது துப்பாக்கிகள் அல்லது பிற பயங்கர ஆயுதங்கள் அல்லது விஷம் தோய்ந்த அல்லது ஆபத்தான வாயுகள் அல்லது பிற ரசாயனங்கள் அல்லது உயிர்வேதியியல் அல்லது அது போன்ற பொருட்கள் அல்லது வேறு வகைகளில் பயன்படுத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு மரணம் அல்லது காயங்கள் ஏற்படுத்தி அல்லது சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்தி அல்லது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் முறையை சீர்குலைக்கும் வகையில் அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிற சொத்துகளை சேதப்படுத்துகிற அல்லது அரசை அல்லது எந்தவொரு மனிதரையும் பயமுறுத்துவதற்காக எந்தவொரு மனிதரையும் பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு அவரை கொலைச் செய்யப் போவதாக மிரட்டுவது ஆகியன பயங்கரவாதச் செயலாகும்.”


பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கனம் இத்துடன் முற்றுப் பெறவில்லை. அது பின்வருமாறு தொடருகிறது. “சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் 1967 கீழ் தடைச் செய்யப்பட்ட ஒரு அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக செயல்படுபவர் அல்லது அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது பரப்புவதற்கு உரிய செயலை தானாக முன்வந்து செய்பவர் மேலும் இந்த இரு நடவடிக்கைகளின் போதும் உரிமம் பெறாத துப்பாக்கி, வெடிபொருட்கள் அல்லது வேறு உபகரணங்கள் அல்லது பெருமளவில் மக்களுக்கு அழிவை தரக்கூடிய ஒரு பொருளை வைத்திருப்பவர் மேலும் இவற்றை பயன்படுத்தி சொத்துகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துபவர் பயங்கரவாதச் செயலை செய்தவர் ஆவார்.”


இந்த வரைவிலக்கணத்தில் முக்கிய வார்த்தைகள் “ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை” ஆகும். இந்தியா சிதைந்து விடும் என்ற முற்றிலும் அடிப்படையில்லாத நமது அச்சத்தின் அடிப்படையில் தான் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் அமைக் கப்பட்டிருக்கிறது. சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் குறித்து இந்த வரைவிலக்கணத்தில் குறிப்பிடப் பட்டிருந்தாலும் ஆர்டிஎக்ஸ் அல்லது சி 14 அல்லது நவீன வெடிகுண்டு மூலப்பொருட்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை? இச்சட்டத்தை எழுதும் அரசு அதிகாரிகள் ஹிந்தி படங்களை பார்த்து விட்டு வெடிமருந்துகள் குறித்த அறிவாற்றலைப் பெற்றிருப்பார்கள் போலும்.பொடா சட்டம் பயங்கரவாதத்திற்கு தரும் வரைவிலக்கணம் விரிவானதாக இருக்கும் அதே நேரத்தில் குறுகியதாகவும் இருக்கின்றது. இந்த சட்டம் ஆழமான சிந்தனையின் அடிப்படையில் இயற்றப்படவில்லை என்பதற்கு இது எடுத்துக் காட்டாகும். இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் நமது நாட்டில் பல சட்டங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்டு தாறுமாறாக உள்ளன. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற சட்டங்கள் உள்ளன. நீங்கள் எந்தவொரு குற்றமும் செய்யாவிட்டாலும் தமிழ்நாட்டில் விசாரணையின்றி உங்களை ஒரு வருடம் சிறையில் தள்ளும் குண்டர் சட்டம் உள்ளது.


மீண்டும் சொல்கிறேன் நீங்கள் குற்றம் செய்யாவிட்டாலும் எதிர்காலத்தில் நீங்கள் குற்றம் செய்வீர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அரசு உங்களை ஓர் ஆண்டு சிறையில் அடைக்கலாம். நீங்கள் எதிர்காலத்தில் குற்றம் செய்வீர்கள் என்று அரசுக்கு எப்படி தெரியும். எதிர்கால நடவடிக்கைகளை கவனிக்க அவர்கள் குறிசொல்பவர்களை அல்லது சோதிடர்களை வேலையில் அமர்த்தியுள்ளது போலும்.
பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்திற்கு மீண்டும் செல்வோம். நம் அனைவருக்கும் இதன் தாத்பரியம் புரியும். மொழியியல் வல்லுனரும் எழுத்தாளருமான நோம் சொம்ஸ்கி உலகமெங்கும் அமெரிக்கா நிகழ்த்தும் அராஜகங்கள் குறித்து பேசும் போது சொன்னார்: “நாம் அதனை செய்யும் போது அதற்கு பெயர் பயங்கரவாதத்திற்கு எதிர்வினை நடவடிக்கை. அவர்கள் அதனைச் செய்யும் போது அதற்கு பெயர் பயங்கரவாதம்.”

இதே அடிப்படையில் இந்தியாவில் நாம் செய்யும் போது அதற்கு பெயர் கலவரம் அல்லது தனி நபர்களின் செயல்கள். ஆனால் முஸ்லிம்கள் செய்யும் போது அதற்குப் பெயர் பயங்கரவாதம்”

(ஆகார் பட்டேல் சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனத்தின் (அம்னெஸ்டி இன்டர்நேசனல்) இந்திய பிரிவின் செயல் இயக்குனர் ஆவார்.)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.