காகத்தின் கதை 2

பூந்தளிர் பூங்கா

(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. 'நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்”என (காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), 'பயபக்தியாளர்களிட மிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” எனக் கூறினார்.”

'என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. 'நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்.” 'என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக் காரர்களுக்குரிய கூலியாகும்” (என்றும் கூறினார்.)”

'
'பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்து விட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.”
'தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், 'எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” (5:27-31)


திருக் குர்ஆன் கூறும் இச்சம்பவத்தைக் கதையாக அதுவும் காகத்தின் கதையாக சிறுவர்களுக்குக் கூறலாம்.கதை என்று கூறும் போது இதில் கற்பனையோ பொய்யோ இல்லை. முற்றிலும் உண்மைச் சம்பவம் இது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.காகம் ஒற்றுமையின் இலக்கணமாகப் போற்றப்படும் பறவை. மனிதன் முதன் முதலில் கொலை செய்த சம்பவத்துடன் காகம் சம்பந்தப்படுகின்றது.
'ஒன்னா இருக்கக் கத்துக்கனும்; இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கனும்..காக்கா கூட்டத்தப் பாருங்க!...அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க!...”


என்று ஒரு தமிழ் பாடல் காகத்தின் ஒற்றுமைக் குணத்தை சிலாகித்துப் பேசுவதைப் பிள்ளைகளுக்குக் கூறலாம். எந்த ஒரு பொருளையும் அல்லாஹ் காரண-காரியம் இல்லாமல் படைக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லலாம்.காகங்கள் சுற்றுப் புறச் சூழலை சுத்தம் செய்கின்றன. ஒரு காகம் தன் ஆயுளில் சுமார் 30,000 மரங்களை நடுவதாகக் கூறுவர்.


அல்லாஹ்வின் படைப்பின் பயனை பிள்ளைகள் இதன் மூலம் உணர்வதுடன் உயிரினங்கள் மீது அன்பு பிறக்கவும் இது வழி வகுக்கும்.


ஆதம் நபிக்கு ஹாபீல்- காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே ஒரு பிரச்சனை எழுந்தது. இருவரும் குர்பான் கொடுக்க வேண்டும். யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது.


இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை.


காபீல் கோபம் கொண்டான். தன் சகோதரன் மீது பொறாமை கொண்டான். எனது குர்பான் ஏற்கப்படவில்லை, இவனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதே என்று ஆத்திரம் கொண்டான். உன்னை நான் கொல்லுவேன் என்று தன் சகோதரனைப் பார்த்து கோபத்தில் குமுறினான். ஹாபிலோ நான் என்ன குற்றம் செய்தேன்? உன்னிடம் இறையச்சம் இருந்திருந்தால் உனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். உன் உள்ளம் சரியாக இல்லாதது உனது குற்றம்தானே என உணர்த்தினான்.


அப்படியிருந்தும் அவன் சகோதரனைக் கொலை செய்ய முயன்றான். ஹாபில் நல்லவன்; மறுமை நம்பிக்கை உள்ளவன். எனவே, அவன் தன் சகோதரனைப் பார்த்து,'நீ என்னைக் கொலை செய்ய முயன்றாலும் உனக்கு எதிராக நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். நீ என்னைக் கொன்றால் எனது பாவத்தையும் உனது பாவத்தையும் நீ சுமக்க நேரிடும். உன்னால் எனது உலக வாழ்வைத்தான் அழிக்க முடியும். ஆனால், என்னைக் கொன்றால் உனது மறுமை வாழ்வே அழிந்துவிடும் என்று கூறினான். இப்படியெல்லாம் விளக்கப்படுத்திய பின்னரும் அவன் தனது சகோதரனைக் கொலை செய்து விட்டான். இதுதான் உலகில் நடந்த முதல் கொலை. எனவே, உலகில் நடக்கும் எல்லாக் கொலையின் பாவத்திலும் காபீலுக்குப் பங்குள்ளது.


கொலை செய்துவிட்டு தனது தம்பியின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்த போது ஒரு காகம் வந்து பூமியில் குழி தோண்டிது.


இதைப் பாத்த காபீல், 'எனக்குப் பிடித்த கேடே! நான் இந்தக் காகத்தைப் போலாவது இருந்திருக்கக் கூடாதா! எனது சகோதரனின் சடலத்தைக் கூட அடக்க எனக்குத் தெரியாமல் போனதே என்று வருந்தினான்/மனிதனுக்குக் காகம் அடக்கவிடம் தோண்டக் கற்றுக் கொடுத்துள்ளது. நாம் காகத்திடம் கற்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது.


இந்த சம்பவத்தின் மூலம் பொறாமை கொள்ளக் கூடாது, கோபம் கொள்ளக் கூடாது, அவசரப்படக் கூடாது, முரட்டுத்தனம் கூடாது மற்றும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யக் கூடாது, எனக்குக் கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்ற வக்கிர புத்தியுடன் செயற்படக் கூடாது என்று ஏராளமான நல்ல விஷயங்களை சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம்.


(அடுத்த வாரம் எறும்பின் கதை).