இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 13

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

இந்த நட்பு அற அடிப்படையில் ஏற்கத் தகாதது, அரசியல் அடிப்படையில் முட்டாள்தனமானது.

இவர்களின் செயல்பாடுகள் குறித்து இன்னும் ஏராளமான விவரங்கள் கொடுக்கலாம். அவை இவர்கள் எந்த அளவிற்குத் தீவிரமாகவும் பரந்தும் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் உறுதி செய்யுமே ஒழிய இவர்களின் இத்தனை இணையத் தளங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், விருந்துச் சந்திப்புகள் எல்லாவற்றிலும் பேசுபவையும், தம் நியாயங்களாக முன்வைப்பவையும், அனைத்தும் ஒரே மாதிரியான ‘போரடிக்கிற’ வாதங்கள்தான்.

அவற்றை இப்படிச் சுருக்கிச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்.

1. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மூன்றும் ஜனநாயக நாடுகள். பலஸ்தீனியர்கள், பாகிஸ்தானிகள், அரேபியர்கள் என உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதத்திற்காக நிற்போர்கள். எனவே இன்றுள்ள மோதல் என்பது ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்குமான மோதல்தான். இந்த அடிப்படையில் இவர்கள் இயக்கும் இணையத்தளங்களில் ஒன்று democraciesagainstterror.org. பா.ஜ.க அரசு வெளிப்படையாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது பற்றியோ காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குஜராத் படுகொலைகள், பழங்குடி மக்கள் மீது ஏவப்படும் ‘பச்சை வேட்டை குறித்தோ, ‘சல்வாஜூடும்’ என அரசாங்கமே செயல்படுத்தும் சட்ட விரோத ஆயுதப் படைகள் ஆகியவை பற்றியோ உலகெங்கிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் பயங்கரவாதத் தாக்குதல் பற்றியோ, சே குவாராவை மட்டுமல்ல கியூபாவின் அதிபராக மக்கள் செல்வாக்குடன் வீற்றிருந்த ஃபிடெல் காஸ்ட்ரோ வை கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பற்றியோ, வியட்நாமில் எரிகுண்டுகளை வீசி மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்ததைப் பற்றியோ, பலஸ்தீனியர்களின் மண்ணை இஸ்ரேல் வெளிப்படையாக ஆக்ரமித்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையோ இவர்கள் பேசுவதே இல்லை. ஜனநாயகம் பற்றியும் பயங்கரவாதம் பற்றியும் வாய் கிழியும் இந்த தளங்கள் எதுவும் குஜராத் 2002 குறித்து மட்டும் வாய் திறந்தது இல்லை.

2.அடுத்து இவர்கள் தீவிரமாக முன்வைப்பது இஸ்லாமிய வெறுப்பு. இதை நியாயப்படுத்த இவர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான்: இந்து மதமும் யூதமும் மத மாற்றம் செய்வதில்லை. எனவே இவை ‘சகிப்புத்தன்மை’ வாய்ந்தவை. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியன மதமாற்றம் செய்பவை. எனவே சகிப்புத் தன்மை அற்றவை. இப்படிச் சொல்லும் இவர்கள் இன்று அரசு ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் ‘கர் வாபசி’ மதமாற்றங்களைப் பற்றியோ, பள்ளிவாசல் இடிப்புகளைப் பற்றியோ, பசுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் பற்றியோ மட்டும் வாய் திறக்க மாட்டார்கள். மாறாக இத்தகைய இயக்கங்களுக்கு நிதி உட்பட எல்லா வகைகளிலும் உதவி செய்வர்.

3. மூன்றாவதாக இவர்கள் முன்வைப்பது தங்களின் உடனடிச் செயல் திட்டம் அது: ‘இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு’ எதிராக “அமெரிக்கா+இஸ்ரேல்+இந்தியா” எனும் கூட்டணியை உருவாக்கி, வர்த்தகம், ஆயுத விற்பனை ஆகியவற்றையும் இராணுவ நெருக்கத்தையும் அதிகரிப்பது.

இதைத்தான் அவர்கள் பல்வேறு பெயர்களில் செய்து கொண்டுள்ளனர். பல்வேறு அமைப்புகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் இவர்களுக்கிடையே நெருக்கமான உறவுகள் உண்டு. இவர்கள் சந்தித்துக் கொள்ளும் பொதுத் தளங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக சற்றுமுன் சொன்னால் அங்கமாக உள்ளவர்களில் சிலர்: திமிஷிமி அமைப்பைச் சேர்ந்த கவுரங் தேசாய், ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கின் மிஹிர் மெகானி, தீவிரமான இந்துத்துவக் கருத்தாளராக அறியப்படும் யதீந்திரா பட்நகர், சான் மேடியோவைச் சேர்ந்த தீவிர சியோனிஸ்டும் மருத்துவருமான ஸ்காட் ஆப்ராம்சன் முதலானோர். இந்த ஆப்ராம்சன் தமது அமெரிக்க இஸ்ரேல் கூட்டமைப்பின் (AIPAC) சந்திப்புகளுக்குத் தெருக்களில் நின்று கொண்டு தின்பண்ட (cookies) பொட்டலங்களைக் கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதில் கில்லாடி எனப் புகழப் படுபவர்.
Democeacy.org என்பது கலிபோர்னியாவிலிருந்து செயல்படும் இன்னொரு அமைப்பு. இந்திய - இஸ்ரேல் நெருக்கத்தை ஏற்படுத்த தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்ட பாப் ஸெய்ட்மான், முன் குறிப்பிட்ட யதீந்த்ர பட்நகர் ஆகியோர் இதில் உள்ளனர். இந்த ஸெய்ட்மான், ‘ஹிந்து சமூகம்’ (Hindu Community) எனும் அமைப்பைச் சேர்ந்த வேத் மேதா போன்றோரும் பேசி ஆள்திரட்டுவதில் வல்லவர்கள். “இந்தியா, இஸ்ரேல் இரண்டு நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தன. இரண்டும் ஒரே நேரத்தில் விடுதலை பெற்றன. இரண்டும் தம்மை அழிக்கத் துடித்துக் கொண்டுள்ள நாடுகளால் சூழப்பட்டுள்ளன. இரண்டும் ஜனநாயக நாடுகள். மனித உரிமைகளை மதிப்பவை (!), இரண்டும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தம் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆர்வம் கொண்டவை..” எனும் ரீதியில் இவர்களின் உரை வீச்சுக்கள் அமைகின்றன. “எங்கள் கூட்டங்களுக்கு வாருங்கள், உரையாற்ற வாய்ப்பு தருகிறோம். ஒன்றும் சரக்கு இல்லையே என யோசிக்காதீர்கள். நாங்களே தேவையான கருத்துரைகளை அனுப்பி வைக்கிறோம்” எனப் பேசி ஆள் சேர்க்கின்றனர். இந்த நோக்கில்‘இந்திய வரலாறு’, ‘இஸ்ரேல் வரலாறு’ போன்ற தலைப்புகளில் இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைச் சேகரித்துத் தகவல் களஞ்சியங்கள் (Resource centres) மற்றும் இணையத் தளங்களையும் செயல்படுத்துகின்றனர்.


மொத்தத்தில் இவர்கள் தீயாய் வேலை செய்கின்றனர். அந்தத் தீயில் இவர்கள் தம் ‘டயஸ்போரா குற்ற உணர்வை’ எரித்துக் கொள்கின்றனர். இவர்களின் இந்த வேலைகள் மூலம் இங்கே தூண்டப்படும் வெறுப்பு அரசியலும், பயங்கரவாத நடவடிக்கைகளும், இன அழிப்புகளும் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. சொல்லப்போனால் அதுதான் இவர்களின் நோக்கமும் கூட.

இந்தியாவிற்கு வந்த முதல் இஸ்ரேலிய பிரதமர்

சுதந்திரம் அடைந்த காலந்தொட்டுப் பாரம்பரியமாக இந்தியா ஒரு நடுநிலைப் பாதையைத்தான் மேற்கொண்டு வந்தது. நீண்ட காலம் வரை இந்திய பாஸ்போர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலும் தென் ஆப்ரிகாவும் இடம் பெற்றதில்லை. இரண்டும் இனவெறி நாடுகளாகவே அணுகப்பட்டன. நேரு காலத்தின் இறுதியிலிருந்தே (1963) இஸ்ரேலுடனான இராணுவத் தொடர்புகள் இலேசாக அரும்பத் தொடங்கி இருந்தாலும் நரசிம்ம ராவ் காலத்தில் உலகமயப் பொருளாதாரத்திற்கு இந்தியா திறந்து விடப்பட்ட பின்தான் இரண்டுக்குமான நெருக்கம் சற்றுக் கூடுதலானது. முதல் பா.ஜ.க கூட்டணி அரசின் போது இந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது.. ஒரு இஸ்ரேலியப் பிரதமர் இந்தியாவுக்கு வருவது அப்போதுதான் முதல் முறையாக நடந்தது (ஏரியல் ஷரோன் / 2003). இன்று அந்த உறவு அதன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா அயலுறவில் கொண்டிருந்த தன் அறம் சார்ந்த நடுநிலைப் பாதையிலிருந்து வழுவியதில் இந்த இன்டெர்னெட் இந்துத்துவாவின் பங்கு கூடுதலானது.


எள்ளி நகையாடப்பட்ட கதை


ஒன்றைக் குறிப்பிட்டு முடிக்க வேண்டும். இந்துத்துவம் இப்படி சியோனிசத்தை வியப்புடன் நோக்குவதும் அமெரிக்காவை அடிமை மனப்பாங்குடன் ஆராதிப்பதும் வியப்புக்குரிய ஒன்றல்ல. அமெரிக்கா வாழ் இன்டெர்னெட் இந்துத்துவவாதிகள் அப்படி ஒன்றும் புத்திசாலிகளும் அல்ல. இவர்கள் ஆர்.எஸ்.எஸ் சாக உருப்பெற்ற போதே இப்படித்தான் பாசிசத்தையும் நாசிசத்தையும் வியந்து நோக்கினார்கள். பாசிசம் உலகை ஆளப்போகிறது என முட்டாள்தனமாக நம்பினார்கள். வெளிப்படையாகத் தம் நட்பைக் கொண்டாடினார்கள். முசோலினியையும், ஹிட்லரையும் வியந்து நோக்கினார்கள்.


இன்ட்ர்நெட் இந்துத்துவவாதிகள் உலக வளர்ச்சிப் போக்கையும், ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் உய்த்துணரும் அளவு புத்திசாலிகள் இல்லை. இவர்கள் முன்வைத்த வரலாற்று ஆராய்ச்சிகள், மொழி ஆராய்ச்சிகள் எல்லாம் கல்வியாளர்களால் எள்ளி நகையாடப்பட்ட கதை உலகறியும். மாறிவரும் ஏகாதிபத்தியப் பொருளாதாரம் இனி அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டையோ, ‘டாலர்’ போன்ற ஒரு நாணயத்தையோ மையமாகக் கொண்டு அமையப்போவதில்லை என நவீன பொருளாதார அறிஞர்கள் முன்னூகிக்கின்றனர். இவர்களின் அமெரிக்க அடிமைத்தனம் எந்த வகையிலும் பெரிதாகப் பயன்படப் போவதில்லை. பக்கத்தில் உள்ள சீனாவைக் கூட அமெரிக்கத் துணையால் எதிர்கொள்ள இயலாத நிலையில்தான் இவர்கள் உள்ளனர். இஸ்லாமிய வெறுப்பு, பொருளாதார அடிமைத்தனம், இராணுவமயமான அரசியல் இவை அற அடிப்படையில் ஏற்கத் தகாதது மட்டுமல்ல; மட்டுமல்ல அரசியல் அடிப்படையிலும் முட்டாள்தனமானது.

 

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.