இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 12

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

அமெரிக்க வாழ் உயர்சாதி NRIகள் அப்படி ஒன்றும் தொழில்நுட்பத்தில் சளைத்தவர்கள் இல்லை. சிந்துவெளிச் சில்லுகளில் உள்ள கழுதை படத்தை எல்லாம் குதிரையாக மாற்றி சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களுடையதல்ல, அது ஆரியர்களுடையதுதான் என்றெல்லாம் ‘நிரூபித்து’ மாட்டிக் கொண்டவர்கள் அவர்கள்.

அப்படியெல்லாம் இருந்தும் ஏன் இப்படி கஹானே கும்பலுடன் கூட்டணி சேர வேண்டும்? இதற்கு ஒரே பதில்தான். இது வெறும் தொழில்நுட்ப ரீதியான உறவு மட்டும் அல்ல. மாறாக வலதுசாரி மதவாத சக்திகளுக்கிடையேயான இயற்கைக் கூட்டணி இது. இந்துத்துவாவின் இந்தக் கூட்டணியில் இப்போது யூத சியோனிஸ்டுகள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ சியோனிஸ்டுகளும் அடக்கம்.

ஃப்ரீமன் சென்டர்

Freeman Center என்கிற இன்னொரு யூத இணையத் தளம் ஏரியல் ஷரோன், டேனியல் பைப்ஸ் முதலான சியோனிச இரும்புத் தலைகளின் ஆதரவுடன் இயங்குகிற ஒன்று. அமெரிக்க அரசியலாருடனும் இஸ்ரேல் அரசு முகமைகளுடனும் நேரடித் தொடர்பில் உள்ள இந்த அமைப்பின் Maccabean எனும் கொள்கை விளக்க இதழ் ஆகஸ்ட் 2000 த்தில் மிகப் பெருமையுடன் ஒன்றைப் பறைசாற்றியது. அது:

“இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இராணுவ உறவுகளைத் தொடங்கி வைத்ததில் ‘ஃப்ரீமன் சென்டர் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு முன்னதாக அயலுறவு அமைச்சர் ஷிமோன் பிரெஸ் மூலம் இது நிறைவேற்றப்பட்டதுஞ்ஞ் இந்தியாவுடனான இஸ்ரேலிய இராணுவத் திட்டங்களின் (military projects) விற்பனை இதன் மூலம் 2 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளதுஞ்” அர்விந்த் கோஷ் இந்தியாவுடன் தொடர்புடைய இரு இணையத் தளங்களுடன் இந்த ஃப்ரீமன் சென்டர் உறவைப் பேணுகிறது. ஒன்று காஷ்மீரப் பண்டிட்களுடைய “காஷ்மீரின் கடல் கடந்த அமைப்பு” என்பதன் இணையத் தளமான http://www.kashmir-information.com/ .மற்றது “ஃப்ரீமன் சென்டருடைய ஆய்வாளர் அர்விந்த் கோஷின் 'Sword of Truth' (<http://www.swordoftruth.com/>)” என்னும் தளம். இது மிகவும் வெறித்தனமாக இந்துத்துவப் பிரச்சாரத்தை மேற்கொள்கிற ஒன்று. இந்த அர்விந்த் கோஷ் என்கிற நபர் ஆர்.எஸ்.எஸ்சின் ஆர்கனைசர் இதழில் தொடர்ந்து எழுதுகிறவர். ‘இஸ்லாமும் நாத்திகனும்’ (Islam and the Infidel) எனும் அவரது எழுத்து அந்த வட்டத்தில் பிரபலமானது. சீதாராம் கோயல் போன்ற இந்துத்துவக் கருத்தாளர்களால் பாராட்டப்பட்டது. 1999 ல் soc.culture.Indian எனும் தளத்தில் ஜய் மகராஜ் என்பவர் 50,000 முஸ்லிம்கள் இந்து மதத்தைத் தழுவப் போவதாகவும் அதற்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் அர்விந்த் கோஷின் முகவரிக்குP.O. Box 631048, Houston TX 77263 USA) ஒரு விளம்பரத்தைச் செய்திருந்தது என்கிற தகவலும் அவரைப் புரிந்து கொள்ள உதவும்.


இத்தகைய தொடர்புகளை உடைய அர்விந்த் கோஷ் எழுதியுள்ள ‘யூத -இந்து உறவுகள்’ எனும் கட்டுரையில்தான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்ட யூத -இந்து தொடர்பின் அவசியத்தை வலியுறுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. “யூதர்கள் இன்று அறிவு நுட்பத்திலும், கல்வியிலும் இன்னும் பல வகைகளிலும் உச்சத்தில் உள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்துக்களிடம் அறிவு நுட்ப வளர்ச்சிகள் குறைவாக இருந்தபோதும் எண்ணிக்கை அதிகம். எனவே இந்துக்களின் ஆள் பலமும் யூதர்களின் அறிவு நுட்பமும் ஒன்றாக இணைய வேண்டும்” என்பதுதான் அது. கட்டுரையின் மற்ற பகுதி முழுவதும் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை உள்ள முஸ்லிம்கள் மீது அவதூறுகள்தான்.


அர்விந்த் கோஷின் இந்தக் கருத்து இந்துத்துவ - சியோனிச உறவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

israelforum.com எனும் தளத்தில் ‘இஸ்ரேலின் உலக உறவுகள்’ எனும் பக்கத்தில் ‘இஸ்ரேல் இந்திய வணிக வளர்ச்சி’ எனும் தலைப்பில் இஸ்ரேல் இந்திய உறவு ஒரு விவாதப் பொருளாக ஆக்கப்பட்டது. “இஸ்லாமியவாதிகள் மற்றும் அரேபியர்களுடனான இந்தியாவின் நீதியான போர் இன்னும் தீவிரமாக வேண்டும். ஒரு விரலசைவில் இஸ்லாமியவாதிகளை அழித்தொழிக்கும் வல்லமையும் வளமும் இந்தியாவுக்கு உண்டு இஸ்ரேல் ஒரு சிறு கல் என்கிற அளவில் இருக்கலாம். ஆனால் இந்தியா ஒரு மலையளவாக உள்ளது. நம் இரு நாடுகளின் பொது எதிரியின் தலையில் அது நழுவி விழுந்து நசுக்கும் காலத்தில் இஸ்ரேல் அதனிடம் உள்ள பயிற்சி மிக்க படைகள் உட்பட அதன் சிறப்பு ஆற்றல்களை எல்லாம் அளித்து உதவும் என்பதில் ஐயமில்லை..” - என்கிற கருத்துக்கள் அதில் இடம் பெற்றன.

அந்த தளத்தில் கீழ்க்கண்ட ஒரு அழைப்பும் இடம் பெற்றது:

“அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகியவற்றுக்கிடையே வணிகம் மற்றும் இதர சாத்தியங்கள் (strategic opportunities) தொடர்பாக விவாதிக்க அமெரிக்க இந்திய அரசியல் செயல்பாடுகளுக்கான குழு (USINPAC) உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர், அவர்களின் வணிகம் தொடர்பான கூட்டாளிகள் ஆகியோரை இஸ்ரேல் தூதுவர் அழைக்கிறார். நாள்: மார்ச் 25, 2004 மதியம் 12 மணி”.

 

அடுத்த இதழுடன் நிறைவுறும்)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.