இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 10

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

‘அமெரிக்க இந்திய அரசியல் செயல்பாட்டுக் குழு’ (United States India Political Action Committee [USINPAC] [www.usinpac.com]) என்னும் அமைப்பு ஒன்று 2002 ல் உருவாக்கப்பட்டது. அதாவது இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் வாழும் இந்துத்துவ ஆதரவாளர்கள் இதைச் செய்தனர்.. ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்குபவர்கள் ஒன்றிணையத் தோதான காலமாக அது அமைந்தது. மிக விரைவில் இந்த அமைப்பு அமெரிக்க அரசியலில் கவனத்திற்குரிய ஒன்றாக உருப்பெற்றது.


ரிச்சர்ட் லூகர், ஓரின் ஹாட்ச் (Richard Lugar and Orrin Hatch) முதலான செனட்டர்கள் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகார மையங்களில் இருக்கும் பலருடன் விருந்துரைச் சந்திப்புகளை இவ் அமைப்பு நடத்தியது. USINPAC கிற்கு இப்படியான அமெரிக்க அதிகார மையங்களுடன் இத்தனை விரைவில் தொடர்பு ஏற்படுத்தித் தந்ததில் ‘அமெரிக்க - யூத குழு’ (American-Jewish Committee - AJC) மற்றும் ‘அமெரிக்க- இஸ்ரேல் அரசியல் செயல்பாட்டுக் குழு (American-Israel Political Action Committee - AIPAC) எனும் இரண்டு சக்தி வாய்ந்த யூத அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்துத்துவ அமைப்புக்கு வழிகாட்டிய இஸ்ரேலிய குழுக்கள்

USINPAC எனப் பரவலாக அறியப்பட்ட ‘அமெரிக்க - இந்திய அரசியல் செயல்பாட்டுக்குழு’ முழுக்க முழுக்க ‘அமெரிக்க - இஸ்ரேல் அரசியல் செயல்பாட்டுக் குழு (AIPAC) ’ மற்றும் ‘அமெரிக்க - யூதக் குழு (AJC) ஆகிய யூத அமைப்புகளின் அரசியல் அணுகல்முறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதே வடிவில் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கத் தலைநகர (Capitol Hill) அரசியலில் USINPAC இயல்பாய்க் கலந்து இயங்குவதற்கு இந்த இரு யூத அமைப்புகளும் முழுமையாக உதவின. இதற்கு ஈடாக USINPAC  அந்த இஸ்ரேலிய அமைப்புகளின் ‘அஜென்டா’வை அப்படியே ஏற்றுச் செயல்பட்டது. இந்த யூதக் குழுக்களின் திட்டங்களில் பல பாரம்பரியமான இந்திய அணுகல்முறைகளுக்கும், அமெரிக்க வாழ் ‘டயஸ்போரா’ இந்தியர்களின் நலன்கள் சிலவற்றிற்கும் எதிராக இருப்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் USINPAC  இந்த இஸ்ரேலியக் குழுக்களின் வழிகாட்டலை அப்படியே பின்பற்றியது.


இந்த இரு யூத அமைப்புகளும் இந்திய NRI அமைப்பான USINPAC  ம் இணைந்து தமது முதலாவது ‘தலைநகரக் கலந்துரையாடல் அமைப்பை’ (Capitol Hill Forum) 2003 ஜூலை 16 அன்று கூட்டின. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 12 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய மற்றும் இஸ்ரேல் தூதராலயங்களைச் சேர்ந்த பலமுக்கிய அயலுறவு தொடர்பான அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர். இந்த உரையாடலை ஏற்பாடு செய்த இம்மூன்று அமைப்புகளையும் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் இந்தியாவும் - இஸ்ரேலும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். கலந்துகொண்ட காங்கிரஸ் உறுப்பினர்களில் முக்கியமானவர்களான டாம் லான்டோஸ் மற்றும் கேரி ஆகர்மன்; இருவரும் குடியரசுக் கட்சியினர். இந்தக் கூட்டமைப்பின் அடிப்படையான அம்சங்களை கேரி லான்டோஸ் தொகுத்துரைக்கும் போது, ”அறிவற்றதும், வெறித்தனமானதும், தீமையின் வடிவமாகவும் எழுந்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் இன்று நம் எல்லோரையும் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. சுமார் 120 மில்லியன் முஸ்லிம்களால் இஸ்ரேல் இன்று சூழப்பட்டுள்ளது.


இந்தியாவோ 120 மில்லியன் முஸ்லிம்களை (உள்ளேயே) கொண்டுள்ளது” என்றார். இதே தொனியில் அங்கு வந்திருந்த அனைவரும் தொடர்ந்து பேசினர். ‘முஸ்லிம்’, ‘பயங்கரவாதம்’ ஆகிய இரு சொற்களும் அங்கே மிகத் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. ஹிஷிமிழிறிகிசின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் உள்ள சஞ்சை சூரி, “பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றில் இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்துவதே” தமது அமைப்பின் நோக்கம் என்றார்.


1960 களுக்குப் பின் அமெரிக்க அரசியலில் மேலுக்கு வந்த ‘நியோ கன்செர்வடிவ்’கள் Neo Conservatives / Neo Con) பொருளாதாரத்தில் நவ தாராளவாதப் போக்கையும் பிற நாட்டு அரசியலில் தீவிரத் தலையீட்டையும் வற்புறுத்துவோர். இதே கருத்துக்களை வற்புறுத்தும் Human Events என்னும் இதழ் USINPAC ஐ இப்படியான ஒரு ‘நியோ கான்’ அமைப்பாக அறிமுகம் செய்ததோடு அதை உருவாகிவரும் ‘இன்னொரு புதிய உலக ஒழுங்கமைப்பின்’ ஓர் அங்கம் எனப் பாராட்டியும் எழுதியது.


புதிய உலக ஒழுங்கமைப்பு

‘புதிய உலக ஒழுங்கமைப்பு’’ என்பது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இவை சார்ந்த அமைப்புகளைக் குறிக்கும். தற்போது உருவாகியுள்ள ‘நியோ கான்’ அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணியை அந்த இதழ் ‘இன்னொரு புதிய உலக ஒழுங்கமைப்பு’ என்று குறிப்பிட்டதோடு, அந்த இன்னொரு புதிய உலக ஒழுங்கமைவில் இந்தியாவையும் இணைக்கும் முயற்சியாக USINPAC  ஐ அடையாளம் காட்டியது. வழக்குரைஞரும் USINPAC ன் பாதுகாப்பு (Defence and strategic affairs) தொடர்பான குழுவின் உறுப்பினருமான ஸ்யூ கோஷ் சிக்லெட் என்பவர், “அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் அதே பயங்கரவாதம்தான் இந்தியாவிற்கு எதிராகவும் இயங்குகிறது” என்றார்.

இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பலஸ்தீனப் போராட்டத்தை ஆதரித்து வந்துள்ளதை அறிவோம். இரட்டைக் கோபுரத் தாக்குதலை அமெரிக்காவுக்கு எதிரான “முஸ்லிம் பயங்கரவாத” தாக்குதலாக மட்டுமின்றி அதைப் பலஸ்தீன இயக்கங்களுடனும் முடிச்சுப் போடுவதுதான் இஸ்ரேல் லாபியின் நோக்கம். இந்தியாவின் பாரம்பரியமான பலஸ்தீன ஆதரவுக் கொள்கைக்கு எதிராக இஸ்ரேல் லாபியின் இந்த முயற்சிக்கு USINPAC இவ்வாறு துணைபோனது. “உலக வர்த்தக மையத்தை (9/11) தாக்கியவர்கள் மட்டுமல்ல, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலை நடத்தியவர்கள், ஜெருசலேம் மற்றும் பல்வேறு இஸ்ரேலியப் பகுதிகளிலும் தாக்குதல் புரிவோர் எல்லோரும் பயங்கரவாதிகள்தான்” என்றார் சஞ்சை சூரி. இப்படி அமெரிக்க இந்திய மனத்தை எளிதாக இந்த நோக்கில் திருப்பியது USINPAC.


தேசபக்திச் சட்டம்

இரட்டைக் கோபுரத் தாக்குதலைச் சாக்காக வைத்துக் கொண்டு புஷ் நிர்வாகம் “தேசபக்திச் சட்டம்’ (Patriotic Act)  என்றொரு கொடிய சட்டத்தை இயற்றியதையும் அதை அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததையும் அறிவோம். AJC  முதலான யூத அமைப்புகள் தீவிரமாக இந்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் ஜனநாயக உரிமைகளைக் காக்கப் போராடும் இயக்கங்களின் வெறுப்புக்கு ஆளாகின. USINPAC ம் இந்தக் கொடிய சட்டத்தை மௌனமாக ஆதரித்ததன் மூலம் தன்னை அமெரிக்க முற்போக்கு சக்திகளிடமிருந்து விலக்கி அடையாளப்படுத்திக் கொண்டது. புஷ் நிர்வாகம் இயற்றிய இந்தச் சட்டம் அமெரிக்கா வாழ் வெளிநாட்டார் (immigrants) அனைவரையும் பல்வேறு வகைகளில் பிரச்சினைகுள்ளாக்கிய நிலையில், எல்லா சிவில் உரிமை அமைப்புகளும் இதை எதிர்த்துக் கொண்டிருந்த சூழலில் புலம் பெயர்ந்த இந்திய உயர்சாதி வர்க்கம் அத்தகைய இயக்கங்களிலிருந்து தம்மை இவ்வாறு தனிமைப்படுத்திக் கொண்டது.

9/11 ஐ சாக்காக வைத்து அமெரிக்க அரசு பல்கலைக் கழகங்களின் சுதந்திரத்திலும் தலையிட்டது. கல்வித் திட்டங்கள், ஆய்வுகள், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் திட்டத்துடன் புஷ் நிர்வாகம் ‘பன்னாட்டு உயர்கல்விச் சட்டம்’ (The International Higher Education Act of 2003 - HR3077)  என ஒன்றைக் கொண்டுவந்த போது அமெரிக்கக் கல்வியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.

ஆலோசனைக் குழு என்கிற பெயரில் பல்கலைக் கழகங்களுக்குள் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து பாடத்திட்டம், ஆய்வுத் திட்டங்கள் ஆகியவற்றில் தலையீடு செய்யும் முயற்சி சகல ஜனநாயக சக்திகளின் கண்டனத்திற்கும் உள்ளாகியது.

கடந்த பல ஆண்டுகளாக தென்னாசியா குறித்த பல முக்கிய ஆய்வுகளை அமெரிக்கப் பல்களைக் கழகங்கள் செய்து வந்துள்ளதை அறிவோம். இந்தியச் சாதி முறை, சமூக அமைப்பு முதலானவை குறித்து மேலை ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செய்து வரும் பங்களிப்புகள் மிக முக்கியமானவை.

தேசப்பாதுகாப்பு எனும் பெயரில் இப்படியான ஆய்வுகள் கட்டுப்படுத்தப்படுவது உண்மை யில் இந்திய மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிக பெரிய இழப்பு. தம் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமெரிக்கப் பல்கலைக் கழக நிர்வாகங்களும் இதை எதிர்த்தன. சில நிர்வாகங்கள் தங்களின் எதிர்ப்பால் அரசு மான்யம் நிறுத்தப்பட்டாலும் கவலை இல்லை என அறிவித்தன.

மார்டின் கிராமர், டேனியல் பைப்ஸ் போன்ற புதிய பழமைவாதிகள் (Neo Conservatives)  மட்டுமே அரசின் இம்முயற்சியை ஆதரித்தனர்.

இப்படியான ஒரு சூழலில் USINPACஅமெரிக்க அரசின் இந்தத் திட்டத்தையும் ஆதரித்தது.

இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பற்றியும் அது இம்மியும் கவலைப்படவில்லை.

இந்திய சாதி அமைப்பு, மதங்கள், மொழிகள் ஆகியன குறித்த ஆய்வுகளை இந்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வருவதையும் இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். இந்தியர்களுக்குக் கல்வியே வேண்டாம் எனச் சொன்னவர்கள் இவர்கள், சென்னை மிமிஜி யில் கலைப் பாடங்கள் (லீuனீணீஸீவீtவீமீs), மொழியியல் முதலானவற்றை எல்லாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என எழுதியவர்கள் இவர்கள் என்பதை எல்லாம் நாம் மறந்துவிடக் கூடாது.

(அடுத்த இதழில் இன்டெர் நெட் இந்துத்துவத்தின் யூதத் தொடர்புகள்)-