இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 09

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

‘டயஸ்போரா குற்ற உணர்வு’ என்பதன் இன்னொரு பக்கம் இஸ்லாமிய வெறுப்பு 

வளமிக்க நாடுகளில் கடல்கடந்து வாழும் இந்த ‘டயஸ்போரா’ (diaspora) உயர்சாதி இந்துக்கள் மனதில் திரண்டு உருவாகி வரும் ஒரு வகையான ‘டயஸ்போரா குற்ற உணர்வு’ச் (diasporic guilt)) சிக்கல் குறித்து இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டேன். இந்த நாடுகளில் எந்நாளும் தம்மை ஒரு மூன்றாம் உலக நாட்டு அந்நியராகவே உணரும் இவர்கள், எக்காரணம் கொண்டும் மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் இந்த மேலைச் சுகங்களை விட்டுவிட்டு அகல இயலாத நிலையில் அவர்கள் உள்ளத்தில் வீங்கும் ஒரு சீழ்க் கட்டியாய் வெளிப்படுகிறது இந்தக் குற்ற உணர்வு. இந்த சீழ்க் கட்டி அவர்களுக்கு அளிக்கும் தீராத தொல்லைக்கு ஓர் ஆறுதலாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகத்தான் அவர்களின் இந்தச் செயல்பாடுகள் அமைகின்றன.


டயஸ்போரிக் ஏக்கம்


சொந்த நாட்டில் இவர்கள் இந்துக் கலாசாரத்தின் சுகங்களையும் வருணப் பாதுகாப்புகளையும் அனுபவித்தவர்கள். ஆம். வருணம், சாதி என்பனவெல்லாம் வெறும் பெருமைகள் மட்டுமல்ல. அவை அவர்களுக்கு மற்றவர்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பையும் அளிக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார் இதைக் குறிப்பிடுவார். காம வேட்கையுடன் தன்னை அணுகும் இளவரசன் உதயகுமாரனை மணிமேகலை புறக்கணித்து ஒதுங்கும்போது, “ஒரு தாசி குலத்தில் பிறந்தவள். வருணப் பாதுகாப்பும் இல்லாதவள். இவளுக்கு இத்தனை திமிரா? இவளது பாட்டியை அணுகி இவளை நான் அடைவேன்” என அவன் சூளுரைப்பான். வருணமும், சாதியும் இந்த அடுக்குகளில் மேலே இருப்பவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றன. அந்தப் பாதுகாப்பைச் சுகித்துப் பெருமை கொண்டவர்கள் அவற்றை இந்தப் புலப் பெயர்வின் ஊடாக இழக்கும்போது கொள்ளும் ஒரு தவிப்பின் விளைவாக உருவாவதுதான் இந்த டயஸ்போரிக் ஏக்கம்.


தங்களின் அந்த இழந்துபோன கலாச்சாரம் குறித்த பெருமையும், மீண்டும் அங்கு திரும்பிப் போக மனம் விரும்பாமையால் உருவாகி வெடிக்கும் இந்தக் குற்ற உணர்வும் கலந்த ஒரு வகையான மனச் சிக்கலை உடைய இவர்கள் தங்களுக்குள் கட்டமைக்கும் ‘இந்து’ உணர்வு என்பது இந்து மதத்தில் இருக்கக் கூடிய சில தாராளவாதப் போக்குகளை எல்லாம் முரட்டுத்தனமாக ஒதுக்கிய ஒன்று. மிகவும் இறுக்கமான, இந்து மதத்தின் ஆகப் பிற்போக்கான பார்ப்பனீயக் கூறுகளைக் கொண்டு இவர்கள் உருவாக்கிக் கொள்ளும் இந்து அடையாளம் என்பது இவர்களை இங்கு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிற கடல் கடந்த இந்துத்துவ அமைப்புகளுக்குக் கொண்டு சேர்க்கிறது.


நுணுக்கமாகப் புகட்டப்படும் முஸ்லிம் வெறுப்பு

இவர்கள் தம் குழந்தைகளுக்கு முன்வைப்பதும் மிகத் தீவிரமாகப் புகட்டுவதுவதுமான இந்து மதம் என்பதில் சாதீயத்திற்கும், தீண்டாமைக்கும் எதிராக அதனுள்ளும், வெளியிலிருந்தும் நடந்த போராட்டங்கள் குறித்த வரலாற்றுக்கெல்லாம் இடமில்லை. குறைந்த பட்சம் ராஜாராம் மோகன்ராய் போன்றோர் கடந்த நூற்றாண்டுகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கும் கூட அதில் இடமில்லை. பவுத்தம், சமணம், ஆசிவகம் ஆகிய சிந்தனை மரபுகள் முன்வைத்த வளமான பண்பாட்டு இடையீடுகளுக்கும் இடமில்லை. மாறாக அவர்கள் கருத்தில் கொள்ளும் இந்து மதம் என்பது பாரம்பரியம் மிக்க தமது மதம் இடைக் காலத்தில் முஸ்லிம் மற்றும் ஆங்கிலப் படை எடுப்புகளாலும் ஆட்சிகளாலும் “சீரழிக்கப்பட்டது” என்கிற அடிப்படையிலேயே அமைகிறது. அத்தகைய கதையாடல்களால் நிரப்பப்பட்டதாகவே அவர்களின் உணர்வும் சிந்தனையும் அமைகின்றன. தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் இந்த முஸ்லிம் வெறுப்பை நுணுக்கமாகப் புகட்டுகின்றனர்.


மிகவும் நவீனமான மேலைச் சூழலில் வாழும் இவர்கள் இந்த நவீன வாழ்க்கையையும் இவர்கள் உருவாக்கிக் கொளும் பழம் பிசுக்குகள் நிறைந்த கலாச்சாரப் பாரம்பரியத்தையும் எவ்வாறு இணைத்துக் கொள்கின்றனர்? டயஸ்போரா உலகில் நிலவும் ‘கார்பொரேட்’ கலாச்சாரம், கார்பொரேட் பணி அறம் (corporate work ethics),  பொருளாதாரத்திலும், இராணுவ ரீதியாகவும் வலிமையான, ‘பாதுகாப்பான’ நாட்டை உருவாக்குதல் முதலான நவீன அமெரிக்க லட்சியங்களுடனும் முழக்கங்களுடனும் அவர்கள் இயல்பாகப் பொருந்திப் போகின்றனர். அவற்றையே உன்னத லட்சியங்களாகத் தம் பிள்ளைகளுக்கும் பயிற்றுவிக்கின்றனர்.


இந்த வகையில் மேலை மண்ணும், குறிப்பாக அமெரிக்காவும் அங்கு இதே போன்ற நோக்கங்களுடனும் செயல்படும் சியோனிச அமைப்புகளும் மிகவும் தோதான களமாகவும், கூட்டாளிகளாகவும் அமைந்துவிடுகின்றன.


கூட்டணிக்கான அடிப்படை


குழந்தைகளுக்கு இவர்கள் இந்து மதத்தை அறிமுகப் படுத்துவது இப்படித்தான்: “இந்து மதம் மிகவும் சகிப்புத் தன்மையுடைய ஒன்று. மதமாற்றம் என்பதற்கு அதில் இடமில்லை. அதனாலேயே அது கடந்த நூற்றாண்டுகளில் தாழ்வைச் சந்தித்துள்ளது. அதேபோன்று மதமாற்றம் முதலானவற்றில் ஆர்வமற்றதாகவும், கடந்த காலங்களில் மிகப் பெரிய அளவில் இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்ததாகவும் உள்ள மதம் யூத மதம்தான். சம காலத்தில் இஸ்லாம்தான் இந்த இரு மதங்களுக்கும் ஆபத்தாக உள்ளது. அதே போல செப்டம்பர் 11. 2001 க்குப் பின் இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு நாடு அமெரிக்கா. எனவே இந்துக்கள், யூதர்கள், அமெரிக்கர்கள் ஒரு இயற்கை கூட்டணியாக அமைகின்றனர்..” - என்கிற ரீதியில் இது அமைகிறது.


சுருக்கமாகச் சொல்வதானால் இஸ்லாமிய வெறுப்பு (islamophobia)என்பதே அவர்களின் இந்தப் புதிய கூட்டணிக்கான அடிப்படையாக அமைகின்றது. வெறுப்பு அரசியல் என்பது எந்தத் தர்க்கபூர்வமான நியாயங்களையும் முன்வைப்பதில்லை. இன்றைய இந்தியாவில் இஸ்லாம் எப்படி இந்து மதத்திற்கு ஆபத்தாக உள்ளது என்கிற கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில், “இஸ்லாம் உலக அளவில் ஆபத்தாக உள்ளது. இந்தியாவிலும் அவர்கள் பயங்கரவாதத்தில் இறங்குகின்றனர். அருகிலுள்ள பாகிஸ்தான் அதற்கு உதவுகிறது..” என்பதைப் போன்ற மட்டையடி வாதங்கள்தான். வெறுப்பு அரசியலுக்கு இவையே போதுமானவையாக அமைகின்றன.


இவ்வாறு உருவாகும் டயஸ்போரா குற்ற உணர்வை இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினால் இயக்கப்படும் பல்வேறு கடல் கடந்த அமைப்புகள் மிக லாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.


அவர்களைக் கொண்டு நிதி திரட்டுதல், கருத்துப் பிரச்சாரம் செய்தல், சியோனிசத்துடன் உறவை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றைச் சாத்தியமாக்கிக் கொள்கின்றன. ‘ஹிந்து அமெரிகன் ஃபவுன்டேஷன்’  (HAF), ‘இந்திய வளர்ச்சி நிவாரண நிதியம்’ (India Development relief Fund - IDRF). ‘ஹிந்து ஸ்டூடன்ட்ஸ் கவுன்சில்’ (HSC) முதலானவை இப்படி இயங்கும் அமைப்புகளில் சில. தங்களுக்கு இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சின் கிளை அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொல்லிக் கொண்டு இவை அங்கு இயங்குகின்றன. பண்பாட்டு வகுப்புக்கள், வரலாற்றுக் கல்வி, கல்வி வளாகங்களில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பெயரால் இஸ்லாமிய வெறுப்புப் பிராச்சாரங்களை மேற்கொள்ளுதல், நிவாரணம் என்கிற பெயரில் நிதி திரட்டி இந்திய சங்கப் பரிவார அமைப்புகளுக்கு அனுப்புதல் முதலியவற்றை இவை செய்து வருகின்றன. 


தில்லுமுல்லுகள்

இவர்களின் இந்தத் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துகிற மதச் சார்பற்ற இந்திய இயக்கங்கள் சிலவும் அங்கு உள்ளன. அவை அவ்வப்போது இவற்றை ஆதாரபூர்வமாக தம் இணையத் தளங்களில் வெளியிடுகின்றன. 'Campaign to Stop Funding Hate [CSFH] என்பது அப்படியான அமைப்புகளில் ஒன்று. ‘வெறுப்பு அரசியலுக்கு நிதி அளிப்பதைத் தடுப்பதற்கான பிரச்சார அமைப்பு’ என்பதாக இதை மொழியாக்கலாம்.


மேற்குறிப்பிட்ட ‘இந்திய வளர்ச்சி நிவாரண நிதியம்’ (IRDF)  எனும் அமெரிக்க இந்து அமைப்பிற்கும் இந்திய இந்துத்துவ அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பை சென்ற நவம்பர் 2002ல் CSFH  தனது இணையத் தளத்தில் அம்பலப்படுத்தியது.


நிவாரணத்திற்கு என அமெரிக்காவில் திரட்டப்படும் நிதி இந்தியாவில் வெறுப்பையும், வன்முறையையும் தூண்டும் சங்கப் பரிவார அமைப்புகளுக்குப் பிரித்தளிக்கப்படுகிறது என்பதை அது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியபோது அவற்றை ஆர்.எஸ்.எஸ்சும் மிஞிஸிதிம் முதலில் மறுத்தன. எனினும் தொடர்ந்து ஆதாரங்களுடன் அந்தக் குற்றச்சாட்டை சிஷிதிபி வைத்தபோது வேறு வழியின்றி 2004 பிப்ரவரியில் மிஞிஸிதிம் ஒரு இந்து அமைப்புதான், சங்கப் பரிவாரங்களுடன் தொடர்புடையதுதான் என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டது.


IDRF திரட்டிய நிதி பெரிய அளவில் பழங்குடி இந்தியர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டப் பயன்படுத்தப்பட்டது இதன் மூலம் அம்பலமானது. <http://stopfundinghate.org/resources/news/030104SFHPressRelease.htm>


(அடுத்த இதழில் 2001 க்குப் பின் உருவான ஆபத்தான இந்துத்துவ - சியோனிச கூட்டணிகள்)