இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 06

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

2014ல் நடைபெற்ற 16ம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதை அறிவோம். அவர்களின் தேர்தல் அறிக்கையில், “அயல் உறவுகள் : தேசம் முதலில், அனைத்துலக அளவில் சகோதரத்துவம்” எனும் தலைப்பின் கீழ் தம் அயலுறவுக் கொள்கையைக் கோடிட்டு காட்டி இருந்தனர்.

அதில் இப்படி ஒரு வாசகம்: “உலகெங்கிலும் துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஓர் இயற்கை இல்லமாக இந்தியா அமையும். அவர்கள் அடைக்கலம் புக இங்கே வரவேற்கப்படுவார்கள்”. தங்களின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர்கள் இதை வலியுறுத்தத் தயங்கவில்லை.

நரேந்திர மோடியே தன் தேர்தல் பிரச்சாரங்களில் வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்கள் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப் படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். இன்னொரு பக்கம் அவர் புலம் பெயர்ந்து வரும் வங்க முஸ்லிம்களை கொடூரமாகச் சித்திரிக்கவும், ஒட்டு மொத்தமாக அவர்களைத் திருப்பி அனுப்புவோம் எனச் சொல்லவும் தயங்கவில்லை.


எந்த அந்நிய நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டு இங்கு வந்தால் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் என அவர் சொல்லியிருந்தாரானால் நாம் அதை முழுமையாக வரவேற்கலாம். ஆனால் துன்புறுத்தப்படும் இந்துக்கள் இடம் பெயர்ந்தால் மட்டும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும் எனச் சொல்வதன் பொருளென்ன? இது ஒரு இந்துக்களுக்கான தேசம். இங்குள்ள அரசு ஒரு இந்து அரசு என்பதுதானே.


இப்படியான ஒரு கருத்தாக்கத்தை அவர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கின்றனர்?


அலியாஹ்’ என்றால் என்ன?


இஸ்ரேலின் ‘அலியாஹ்’ (aliyah) எனப்படும் ‘திரும்புதல் சட்டம்’ என்பதுதான் இப்படியான அவர்களின் பேச்சுக்களுக்கு மூலாதாரம். இந்தச் சட்டத்தின்படி யூதர்கள் உலகில் எந்த நாட்டிலிருந்து வந்தபோதிலும் இங்கு வந்து குடியேறலாம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இஸ்ரேலுக்கு இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் நிறைந்த, ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க இந்தியத் துணைக் கண்டத்திற்கு எப்படிப் பொருந்தும்?


‘சியோனிசம்’ என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘வாக்களிக்கப்பட்ட நிலம்’ எனும் கருத்தாக்கம் ஒன்றே இதற்கு ஆதாரம். “பலஸ்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணை” (British Mandate) என்கிற பெயரில் (1948) பலஸ்தீனம் சிதைக்கப்பட்டு இஸ்ரேல் உருவான போது காலம் காலமாக அங்கு வசித்திருந்த பல்லாயிரக் கணக்கான பலஸ்தீனியர்கள் இடப் பெயர்வுகளுக்கு ஆளாயினர். இன்று மேலும் மேலும் பலஸ்தீனம் இஸ்ரேலால் ஆக்ரமிப்புக்குள்ளாகிறது. சிறிய ஆனால் மிக வலிமையான பயங்கரவாத நாடாக உள்ள அது ஆக்ர மிக்கப்பட்ட நிலங் களில் சட்ட விரோதக் குடியிருப்புகளை ஏற்படுத்தி யூதர்களைக் குடியமர்த்துகிறது. அப் பகுதிகளில் வாழும் பலஸ்தீனியர்களின் உயிர், வாழ்வு, இயக்கம் அனைத்தும் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதன் கட்டுப்பாட்டில் வாழும் பலஸ்தீனிய முஸ்லிம்கள் அனைவரும் அங்கு சம உரிமைகளற்ற இரண்டாம்தரக் குடிமக்கள்.


அகதி கொள்கை


1948 ல் பிரிட்டிஷாரி டமிருந்து விடுதலை பெற்ற இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகக் கட்டமைக்கப்பட்டது. இன்னும் கூட இங்கொரு அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாத போதும் பிற நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு இங்கு அடைக்கலம் தேடி வருவோர் யாராயினும் அவர்களின் மதம், இனம், மொழி எதையும் பாராமல் அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதை அது ஒரு அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், இலங்கை, திபெத், மியான்மர் என எந்த நாடுகளில் இருந்தும் வருவோர் அவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், பவுத்தர்கள் யாராயினும் அடைக்கலம் அளித்து வருவதுதான் இந்த நாட்டின் பாரம்பரியமாக இருந்து வரும் நிலையில் இன்று இவர்கள் “இந்துக்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படும்” எனச் சொல்ல எங்கிருந்து கற்றுக் கொண்டனர்? வேறெங்கிருந்து? அவர்களின் ‘மாதிரி தேசம்’ ஆன இஸ்ரேலிடமிருந்துதான்.


தற்போது உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் பா.ஜ.க தலைவராக இருந்தபோது வங்கதேச இந்துக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்றார். நிதின் கட்காரி பா.ஜ.க தலைவராக இருந்தபோது உலகின் எந்தப் பாகத்திலிருந்து துன்புறுத்தப்பட்ட இந்துக்கள் இங்கு வந்தாலும் அவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்றார். நரேந்திர மோடியோ ஃபிஜி, மொரிஷியஸ் .. ஏன் அமெரிக்காவிலிருந்து ஒரு இந்து அடைக்கலம் தேடி வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றார்.


யூதர்களுக்கான ஒரு யூதப் பெரும்பான்மை அரசை உருவாக்குவது என்கிற வகையில் இஸ்ரேலியர்களுக்கு ‘அலியாஹ்’ கோட்பாடு பொருத்தமானதாக்க இருக்கலாம். இந்தியாவுக்கு அது எப்படிப் பொருந்தும்? இந்தியாவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பொருத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். இப்படி அவர்கள் சொல்லி வருவது ஒரு பிரச்சினையாக எழுப்பப்பட்ட பின் அருண்ஜேட்லி மெதுவாக வாயைத் திறந்தார். இந்தியப் பாரம்பரியத்துக்குரியவர் என ஏற்றுக்கொள்ளப்படுமானால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கலாம் என்றார்.


தேசி மொசாத்கள்


வாஜ்பேயி பிரதமராக இருந்து அமெரிக்கா சென்றபோது ஸ்லேட்டன் தீவில் அவருக்கொரு வரவேற்பை அமெரிக்க வாழ் பா.ஜ.கவினர் அளித்தனர். அப்போது அவர் சொன்னதை நாம் மறந்துவிட இயலாது. “இப்போது நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லை. ஒரு காலத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரும். அப்போது நாம் விரும்பிய இந்தியாவை அமைப்போம்” - என்பதுதான் அது. இப்போது அவர்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று விட்டனர்.


ஆனால் இன்னும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வில்லை. பெறும்போது அவர்கள் நிறைவேற்றப் போகும் கொள்கைகளில் ஒன்று அலியாஹ் கொள்கையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


சென்ற முறை அவர்கள் ஆட்சிக்கு வந்த போது (1999 -2004) இஸ்ரேலுடன் அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஒத்துழைப்பை அதிகரித்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அதை அவர்கள் பெருமையாக வெளிப்படுத்திக் கொள்ளவும், கோட்பாடாக நியாயப்படுத்தவும் செய்தனர். இந்துத்துவ கருத்தியலாளர்கள் வெளிப்படையாக “ஹிந்து - யெஹ§தி ஒற்றுமை” (Hindu - Yehudi Unity) எனும் முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கினர். ஜூன் 30, 2000 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் பஜ்ரங் தள் அமைப்பு நடத்திய ஒரு பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை வந்தது. குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 2000 க்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டிருந்த தருணம் அது. 15 முதல் 21 வதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்குபெற்ற அந்தப் பயிற்சி முகாம் பற்றிய அந்தக் கட்டுரைக்கு அந்த இதழ் கொடுத்த தலைப்பு “பஜ்ரங் தள்ளின் அயோத்யா முகாமில் உள்நாட்டு தேசி மொசாத்கள் தயாராகிறார்கள்” என்பது. ‘மொசாத்’ என்பது வன்முறைகளுக்கும் படுகொலை களுக்கும் அஞ்சாத இஸ்ரேலிய உளவுப் படை. பஜ்ரங் தள் பயிற்சியாளர்களிடம் பேசியபோது தாங்கள் இஸ்ரேல் மற்றும் மொசாத்தால் ஊக்கம் பெறுவதாகப் பலமுறை கூறினர் எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.


சுற்றிலும் முஸ்லிம் நாடுகளால் சூழப்பட்ட இஸ்ரேலின் புவியியற் சூழல் தனித்துவமானதல்லவா? எப்படி அதையே நீங்கள் பின்பற்ற முடியும் எனக் கேட்டபோது அவர்களின் தலைவர் ஒருவர் சொன்ன பதில்:
“இந்தியா இன்னும் மோசம். இஸ்ரேலுக்கு வெளியில் உள்ளவர்களால்தான் ஆபத்து. இந்தியாவுக்கோ அதன் உள்ளே வசிப்பவர்களாலேயே ஆபத்து உள்ளது.”


(அடுத்த இதழில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் சில சியோனிச ஆதரவு இந்துத்துவ அமைப்புகள்)