இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 04

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

இந்துத்துவத்துக்கும் சியோனிசத்திற்கும் ஏற்பட்டுள்ள உறவைப் பார்க்கு முன் ஒன்றை இங்கு நினைவு கொள்வோம். நெருக்கடி நிலைக்கால கொடுமைகளுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஒட்டி பொதுவெளியில் தீவிரமாகத் தலைகாட்டத் தொடங்கிய இந்துத்துவம், இடைக்காலத்தில் அது உருவாக்கி வைத்திருந்த மிக வலுவான இயக்கக் கட்டமைப்புகளை இதில் பயன்படுத்தினர்.


பல்வேறு விதமான இயக்க அமைப்புகளை அவர்கள், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. மீனாட்சிபுரம் மதமாற்றத்தை இந்திய அளவில் ஒரு பிரச்சினையாக்கி மேலுக்கு வந்த இவர்கள் அடுத்து பாபர் பள்ளிவாசல், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு வாக்களிக்கப்பட்ட சிறப்புரிமைகளை அழித்தல் என அடுத்தடுத்து அவர்களின் பிளவுவாத அரசியலைத் தொடங்கினர்.


ஒவ்வொன்றின் அடிப்படையிலும் பெரிய அளவில் மக்களைத் திரட்டினர். வாய்ப்பில்லாத தமிழகம் போன்ற மாநிலங்களில் விவேகாநந்தர் பாறை முதலான திட்டங்களை முன்வைத்துப் பெரிய அளவில் தமிழகம் முழுவதிலும் பள்ளிகளில் எல்லாம் சென்று மாணவர்கள் மத்தியில் நிதி திரட்டுவது என்கிற பெயரில் பிரச்சாரம் செய்தனர். இதனூடாக தமிழகம் முழுவதும் சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்து மதத்திற்குச் சம அளவில் வாழ்கிற ஒரே மாவட்டமான கன்னியாகுமரியைத் தம் சோதனைக் களமாகத் தேர்வு செய்ததன் மூலம் மண்டைக்காடு கலவரத்திற்கு வழிவகுத்து நிரந்தரமாகக் காலூன்றினர்.


இந்துத்துவமும் வெளிநாட்டு நிதியும்


இத்தகைய செயல்பாடுகளுக்கான நிதி ஆதாரங்களை அவர்கள் பல்வேறு வழிகளில் உருவாக்கினர். அவற்றில் ஒன்றுதான் மேலை நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் மத்தியில் இந்துத்துவ உணர்வை ஊட்டி அதன் மூலம் பல மட்டங்களில் ஆதவு திரட்டுவது. அதில் நிதி ஆதரவும் ஒன்று.


வெளிநாட்டில் 'செட்டில்' ஆகி உள்ள இந்த இந்தியர்கள் இருக்கிறார்களே அவர்களின் மனநிலை சுவாரசியமான ஆய்வுக்குரிய ஒன்று. வெளிநாடுகளில் வாழ்வது என்பது ஒருவகையில் ஒரு அற்புதமான அனுபவம். பல்வேறு இன மக்கள், மதக் கருத்தியல்கள், வழமைகள், மொழிகள், கலை இலக்கியங்கள், உணவுகள், புவி அமைப்புகள் (றீணீஸீபீsநீணீஜீமீs) ஆகியவற்றின் மத்தியில் இயல்பாக முகிழ்க்கும் ஒரு நீஷீsனீஷீஜீஷீறீவீtணீஸீ உணர்வையும் அனுபவத்தையும், அவற்றின் ஊடாக உருப்பெறும் மேன்மையான மாநுட விகசிப்பையும் கருக்கிச் சாம்பலாக்கி இவர்கள் மத்தியில் குறுகிய மத அடையாளத்தை உருவாக்குவது என்பதுதான் இங்கெல்லாம் இந்துத்துவத்தின் அணுகல்முறையாக உள்ளன.


இன்னொன்றையும் நாம் கருத வேண்டும். சமீப காலம் வரை இவ்வாறு 'செட்டில்' ஆனவர்கள் பெரும்பாலும் இந்திய உயர்சாதியினர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர்தான், இவர்கள் ஒருவகையில் ஒரு பிளவுண்ட மனநிலையில்தான் வாழ்கின்றனர். ஒரு பக்கம் இவர்கள் எல்லாவகைகளிலும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளின் சொகுசுகளிலிருந்து விடுபடவும் தயாராக இல்லை. அதே நேரத்தில் அவர்கள் நான் சற்றுமுன் குறிப்பிட்டவாறு ஒரு பன்முகப் பண்பாட்டில் ஓரங்கமாக இணைந்து போகவும் தயாராக இல்லை.


ஏதோ ஒரு வகையில் இவர்கள் தம் "இந்தியக் கலாச்சாரத்தை", அதாவது இந்துக் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்க விரும்புகின்றனர். அந்த வகையில் இவர்கள் வெளிநாடுகளைத் தாயகமாகக் கொண்ட தீவிர இந்திய தேசியர்களாக உள்ளனர்.


இவர்களை ஏதாவது சீண்ட வேண்டுமானால், "பணி ஓய்வுக்குப் பின்னராவது இந்தியாவிலேயே வந்து செட்டில் ஆகிவிடலாமே.." என ஒரு கேள்வியைக் கேட்டீர்களானால் போதும். எரிச்சலடைவார்கள். பொங்கி எழுவார்கள்.


பதிலாக அவர்கள் தம் தேசியப் பற்றை மிகத் தீவிரமாக வேறு வகைகளில் வெளிப்படுத்துவார்கள். 'ளிஸ்மீக்ஷீsமீணீs திக்ஷீவீமீஸீபீs ஷீயீ ஙியிறி', 'பிவீஸீபீu ஷிஷ்ணீஹ்ணீனீ ஷிமீஸ்ணீளீ ஷிணீஸீரீலீ' முதலான பெயர்களில் ஏராளமான அமைப்புகளை இவர்கள் அமைத்து அங்கிருந்து செய்து வரும் பணிகளை நான், "ஏழுகடல் தாண்டி வேர் நீட்டும் இந்துத்துவா" (இந்துத்துவத்தின் பன்முகங்கள், உயிர்மை வெளியீடு, 2014, பக்.93-94) முதலான கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். இவை இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. இந்துத்துவ அமைப்புகளுக்குப் பெரிய அளவில் நிதி திரட்டி அனுப்புவது, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இன அழிப்புப் படுகொலைகள் முதலான சம்பவங்களால் வெளிநாடுகளில் பெயர் கெடும்போது இந்தியாவிலிருந்து சிக்கந்தர் பக்த் போன்ற 'தலைவர்'களை அழைத்து பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்வது, வெளிநாடுகளில் இருந்து கொண்டே பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல்களில் 'ஆன்லைன்' பிரச்சாரம் செய்வது, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை அழைத்து பிரும்மாண்டமான விழாக்களை நடத்துவது, கல்வி பயில வந்துள்ள இந்திய மாணவர்களைத் தங்களின் அரசியல் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அணுகி 'ஹோலி அல்லது தீபாவளி' முதலான கொண்டாட்ட விழாக்களுக்கு அழைத்து கலாச்சார அமைப்புகளைக் கட்டுவது, "ஆரிய இனப் பரவல்" என்கிற கருத்தாக்கத்திற்கு எதிராக பொய்யான ஆதாரங்களையும் அபத்தமான "ஆராய்ச்சிகளையும்" முன் வைப்பது (சில நேரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு முழிப்பது, பார்க்க: என் 'ஆரியக் கூத்து', எதிர் வெளியீடு), இவர்களின் இந்தக் கொள்கைகளுக்கு ஆதரவாக வீடியோக்கள் முதலியவற்றை ஊடகங்களில் ஏற்றுவது, ஜெஃப்ரி க்ரிபால், வென்டி டோனிகர், பால் கோர்ட்ரைட் முதலான அறிஞர்களின் நேர்மையான பல ஆய்வுகள் தங்களின் அபத்த, இன வெறுப்புக் கொள்கைகளுக்கு எதிராக அமையும்போது அவற்றுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் கருத்துப் பிரச்சாரம் செய்வது முதலியன இவர்களின் பணிகளாகக் கடந்த ஆண்டுகளில் இருந்து வந்துள்ளன.


செப்டம்பர் 11க்கு பின் புதிய மாற்றம்


இந்த நிலையில் செப்டம்பர் 11, 2001 க்குப் பின் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் நாம் இங்கு விரிவாகப் பார்க்க வேண்டி உள்ளது. "செப்டம்பர் 11 க்குப் பிறகு உலகம் மாறிவிட்டது" என்கிற ஒரு கருத்தாக்கம் இங்கு எல்லோராலும் முன்வைக்கப்படுவதை அறிவோம். எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே, அதாவது சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் இருந்தே இந்த மாற்றங்கள் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை.


அதைத் தொடர்ந்து இங்கு உருவான 'ஒரு துருவ உலகம்' (unipolar world), அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பின் (nam) வீழ்ச்சி, மூன்றாம் உலகக் கோட்பாட்டின் பின்னடைவு (fall of third worldism) என்பவற்றின் தொடர்ச்சியாகத்தான் செப்டம்பர் 11 ஐ ஒட்டிய ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' (war on terrorism)) என்கிற நிலை ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பொது எதிரியாக முஸ்லிம்களைக் கட்டமைப்பது, நவதாராளவாத பொருளாதாரக் கட்டமைப்புடன் இந்தியாவை வலுவான நாடாக்குவது, அமெரிக்க அரசியலை இதை நோக்கி வளைக்கும் வகையில் யூத லாபியைச் சாதகமாகப் பயன்படுத்துவது என்கிற மூன்றம்ச அணுகல் முறையுடன் இன்று மிக வலுவாக "இந்துத்துவம் சியோனிசம் பாய் பாய்" என்கிற முழக்கம் இந்துத்துவத் தரப்பிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


தொடரும்...