இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 03

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்துத்துவம் எப்போதும் தன்னை இந்தியாவுக்குள் சுருக்கிக் கொண்டதில்லை. அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு "உலகப் பார்வை" உண்டு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ் சை தோற்றுவித்தவர்களில் ஒருவரான மூஞ்சே இத்தாலிய ஃபாசிஸ்ட் முசோலினியைச் சந்தித்து, அவனது இராணுவப் பள்ளிகளை (பலில்லா) எல்லாம் பார்வையிட்டு, பணிந்து பாராட்டி வந்ததோடு அதே பாணியில் இங்கு வந்து இராணுவப் பள்ளிகளைத் தொடங்கியதையும், அப்படி வழிவந்தவற்றில் ஒன்றான 'போன்சாலா இராணுவப் பள்ளி' யை இன்றுவரை இவர்கள் செயல்படுத்தி வருவதையும், இதோடு தொடர்புடைய கும்பல் ஒன்று பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் காரணமாகிச் சில ஆண்டுகளுக்கு முன் அம்பலப்பட்டுக் கைதாகி இன்னும் சிறையிலுள்ளதையும் நாம் எளிதில் மறந்துவிட இயலாது. கோட்சே, சாவர்க்கர் ஆகிய இருவருக்கும் கொள்ளுப் பேத்தியான ஹிமானி சாவர்கர்தான் இப்போது இந்தப் பள்ளியை நடத்தி வந்தவர். முசோலினியின் "பாசிச அறிக்கையை" இவர்கள் இந்தியில் மொழியாக்கி வெளியிட்டனர். தொடர்ந்து அவர்களின் கொள்கைப் பிரச்சாரத்திற்காக 'லோகாண்டி மோர்ச்சா' என்றொரு பத்திரிகையையும் நடத்தினர். சுபாஷ் சந்திர போசை ஹிட்லரிடம் கொண்டு சேர்த்ததிலும் இவர்களின் பங்குண்டு.

பேசுவது சுதேசியம் பார்வையோ விதேசியம்

பேசுவதுதான் சுதேசியம், இவர்களின் பார்வைகளும் உறவுகளும் எப்போதும் விதேசியம்தான். அதுவும் வரலாற்றில் யாரெல்லாம் இனவாதத்தையும் மானுட வெறுப்பையும், அந்த அடிப்படையில் கொலை பாதகச் செயல்களையும் இயக்க அடிப்படையில் முன்னெடுத்தார்களோ அவர்களே இவர்களுக்கு வழிகாட்டிகள், குருநாதர்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் லண்டனில் செயல்பட்ட 'இந்தியா ஹவுஸ்' உட்பட எல்லாவற்றையும் நாம் இந்தக் கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். இவர்களுக்கு முற்றிலும் ஒரு மாற்றான ஒரு சுதேசியத்தை முன்வைத்ததுதான் மகாத்மா காந்தி மீது இவர்களுக்கு உள்ள ஆத்திரமெல்லாம்.

இந்தியா ஹவுசில் சாவர்க்கருக்கும் காந்திக்கும் அரசியல் காரணங்களுக்காக இன வெறுப்பு, வன்முறைகள், படுகொலைகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது குறித்து நடந்த ஒரு விவாதத்தை (1909) ஒட்டித்தான் காந்தியின் மிக முக்கிய நூலான "ஹிந்த் சுயராஜ்" எழுதப்பட்டது. இந்திய சுதந்திரம், சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியா ஆகியன குறித்த முற்றிலும், ஆம் இந்துத்துவவாதிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையை மகாத்மா காந்தி கொண்டிருந்ததுதான் அவரை இவர்கள் கொன்று தீர்த்ததன் அடிப்படை என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடலாகாது. இன்னொன்றையும் இங்கு சொல்லியாக வேண்டும். இந்துத்துவவாதிகள் காந்தியின் கருத்துக்களை எதிர்த்தார்கள் என்றால், காங்கிரஸ்காரர்கள் காந்தியை அப்படியே ஏற்றுப் பின்பற்றினார்கள் எனப் பொருள் அல்ல. எனினும் காங்கிரஸ் எந்நாளும் இவர்களின் வன்முறை மற்றும் பாசிசப் பார்வையை ஏற்றுக் கொண்டதில்லை. 1940 களில் பாசிசம் உலக அளவில் அம்பலப்பட்டது. காலனீய மற்றும் இனவெறி எதிர்ப்பு, நாடுகள் சுதந்திரமடைதல், மார்க்சியம் மேலுக்கு வந்து பல நாடுகள் சோஷலிசப் பாதையை நோக்கித் திரும்புதல், ஐ.நா அவை உருவாகி உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்படுதல், உலக அளவில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று நேரு, நாசர், டிட்டோ முதலானோரின் தலைமையில் உருவாதல் எல்லாம் நடந்தன. எல்லாத் துறைகளிலும் ஒரு தாராளவாதம் (றீவீதீமீக்ஷீணீறீவீsனீ) கோலோச்சுகிற காலகட்டமாக அது இருந்தது. உலகளாவிய அளவில் பாசிசம் அம்பலப்பட்டு ஒடுங்கிக் கிடந்த காலம் அது. ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. ஒடுங்கிக் கிடந்தாலும் அவர்கள் முற்றாக அழிந்துபடவில்லை. நீறு பூத்த நெருப்பாக இனவெறுப்பு கனிந்து கொண்டுதான் இருந்தது (பார்க்க : எனது "சாவித்ரி தேவி" பற்றிய கட்டுரை).

பாஜக உருவான பின்னணி

இந்தியாவிலும் இதுதான் நிகழ்ந்தது. காந்தி கொலையை ஒட்டித் தனிமைப்பட நேர்ந்த இந்துத்துவ பாசிசம் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் அவர்கள் அமைப்பு ரீதியாக யாரையும் விட மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். காந்தி கொலையை ஒட்டி அதுகாறும் காங்கிரசிலிருந்த இந்துத்துவவாதிகள் விலகி இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான 'பாரதீய ஜனசங்' கட்சியைத் தொடங்கிச் செயல்பட்டு வந்தனர். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு இந்திய அளவில் உருவான எதிர்ப்பின் ஊடாக மேலுக்கு வந்தனர். இந்திராவின் ஜனநாயக விரோதப் போக்குகளை எதிர்த்து காங்கிரசிலிருந்து பிரிந்த 'பழைய காங்கிரஸ்' உடன் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கிப் புதிய அரிதாரத்தைப் பூசிக் கொண்டு பொது வெளியில் தலை காட்டினர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்கள் தனியே பிரிந்து இன்றைய 'பா.ஜ.கவை உருவாக்கி வளர்ந்த வரலாறை நாம் அறிவோம். இதே காலகட்டத்தில் உலக அளவில் இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த நாடுகள், சோஷலிசப் பரிசோதனையில் ஈடுபட்ட நாடுகள் என எவையும் மக்களின் விருப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யாததால் ஆங்காங்கு எதிர்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கிளர்ந்தன. உலக அரசியலிலும் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ நாடுகள் ஒருபக்கமாகவும், இன்னொரு பக்கம் சோவியத் ரஷ்யா தலைமையிலான ஒரு அணி (The Council for Mutual Economic Assistance -COMECON) எனவும் பிரிந்து "பனிப்போர்க் காலம்" (cold war) உருவானது.

தொடர்ந்த வரலாற்றை விரிவாக விளக்க இங்கு இடமில்லை. எனினும் சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின் முடிவை ஒட்டி இங்கு உருவான நன்நம்பிக்கைகள் பொய்த்துப் போனதன் ஊடாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கு இதுகாறும் பதுங்கிக் கிடந்த இனவெறுப்பு, பாசிசம், இந்துத்துவம் முதலான கருத்தாக்கங்கள் மேலுக்கு வந்தன. அத்தோடு உருவாகி வளர்ந்த இன்னொரு மிக ஆபத்தான கருத்தியல்தான் "சியோனிசம்". சுமார் 1800 ஆண்டு காலம் நாடற்றவர்களாகத் துரத்தப்பட்டு பல நாடுகளிலும் தஞ்சமடைந்திருந்தவர்களும். பாசிச இனவெறுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் கொடுமைகளுக்கு ஆட்பட்டவர்களுமான யூதர்களின் 'தாயகம்' எனும் கோரிக்கைக்கு இரண்டாம் உலகப் போரை ஒட்டி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கத் தொடங்கின. பலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் பெரிய அளவில் அங்கு வாழ்ந்திருந்த பலஸ்தீனியர்கள் விரட்டப்பட்டு அழிக்கப்பட்டதும் அழிக்கப்படுவதும் மேற்குலகின் ஆசியோடு தொடங்கின. 1800 ஆண்டுகளாகவும் அதற்கு முன்பாகவும் அங்கு வாழ்ந்திருந்த பலஸ்தீனியர்களை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதிகள், நெறிமுறைகள், சட்டங்கள், மனித உரிமைகள் என எல்லாவற்றிற்கும் எதிரான எல்லாவிதமான கொடிய வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களை அழித்தொழித்து பலஸ்தீனத்தை யூதர்களின் இஸ்ரேலாக வடிவமைப்பது என்பதற்கான தத்துவமாக உருவாக்கப்பட்டதுதான் சியோனிசம். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட "யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரேல்" எனும் கருத்தாக்கம்தான் சியோனிசம் தனக்கு ஆதரவாக முன்வைக்கும் ஒரே ஆதாரம்.

(தொடரும்)