இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 02

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

இந்துத்துவத்தை வெறித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ள உயர்சாதி மத்தியதர வர்க்கத்தினர் மதம், இனம் அல்லது ஒரே இரத்தம் என்கிற அடிப்படையில் ஒரு தேசியச் சமூகத்தைக் கட்டமைக்கும் வகையில் சியோனிசமும் இந்துத்துவமும் ஒன்றுதான் எனச் சொல்லுகின்றனர். பொது எதிரியான முஸ்லிம்களைக் கையாள்வது என்கிற வகையில் இந்தியர்களுக்கு இஸ்ரேலியர்கள் மீது ஒரு இயல்பான நெருக்கம் உள்ளது என்றாலும், இந்த இரண்டு தேசியங்களுக்கும் இடையில் உள்ள இதர மூன்று ஆழமான ஒற்றுமைகள் கவனத்துக்குரியவை என்கின்றனர்.

அவை:

1.சியோனிசம், இந்துத்துவம் என்கிற இரண்டு தேசியங்களும் ஒருவகையில் பலவீனமானவை. இரண்டுமே தமக்குரிய மண்ணின் மீது நீண்ட காலமாக உரிமையை இழந்து நின்றவை என்கிற அடிப்படையில் இப்படிச் சொல்கிறோம். யூதர்கள் கிமு 135 லேயே தம் மண்ணிலிருந்து விரட்டப்பட்டனர், 18 நூற்றாண்டுகளாக அவர்கள் நாடற்றவர்களாக உள்ளனர். ரோமானியர்கள், பைசான்டியர்கள், அரேபியர்கள், ஆட்டோமான்கள், ஐரோப்பியர்கள் என அவர்களின் நிலம் மற்றவர்களால் ஆளப்பட்டது. 1828ல் தம் சொந்த மண்ணில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை வெறும் 20,000 தான். இந்துக்களைப் பொருத்தமட்டில் இப்படி அவர்கள் விரட்டப்படவில்லை என்றாலும் சொந்த மண்ணில் வாழ்ந்துவிட்டால் மட்டும் போதுமா? முதல் முஸ்லிம் படை எடுப்பு நிகழ்ந்த 400 ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் முழுமையாக அரசுரிமைகளை இழந்து அடிமைகள் ஆயினர். டெல்லியிலிருந்து மதுரை வரை அதுதான் நிலை. அரசு ஆதரவற்ற சமூகமாகவே இந்துக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மொழி, பண்பாடு, கோவில்கள் எல்லாம் ஆதரவற்று ஒடுங்கின.


2.மதச்சார்பின்மை, புதிய ஜனநாயக அரசு மற்றும் சிந்தனை முறை ஆகியன இந்து மற்றும் யூதச் சமூகம் ஆகிய இரண்டையும் ஒரே மாதிரியாகப் பாதித்தன. அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை இழந்து ஒடுங்கிக் கிடந்தனர். இந்த நிலைக்கு எதிராக கலாச்சார அடிப்படையிலான தேசியங்கள் கட்டமைக்கப்படக் கூடிய தேவை இரண்டு சமூகங்களிலும் உருவாகியது. இது சியோனிசத்திற்கும் இந்துத்துவத்திற்குமான இரண்டாவது ஒற்றுமை.


கலாச்சாரத்திற்குப் பதிலாக மதச்சர்பின்மை, ஜனநாயக அரசு முறை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் விளைவாகவே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மக்களைத் திரட்டுவதில் மதம் ஒரு முக்கிய அடையாளமாகப் பாவிக்கப்படவில்லை. "சுய நிர்ணயம், சுதந்திரம், சமத்துவம், நல்லாட்சி" முதலான மேற்கத்திய சொல்லாடல்களே இங்கு கோலோச்சின. இனம், ரத்தம் முதலான அடையாளங்களின் அடிப்படையிலான முரண்கள் முதன்மைப் படுத்தப்படாமல், எல்லோருக்கும் சமமான மதிப்பீடுகள், சமமான குடியுரிமை போன்ற கருத்தாக்கங்களால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே யூதச் சமூகமும் இருந்தது. ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அவர்கள் தம் இன, ரத்த அடையாளங்களை உறுதிப் படுத்தி இயங்கத் தொடங்கிய பின்னரே ஐரோபிய யூதர்கள் பல துறைகளிலும் சாதனைக்குரியவர்களாக ஆயினர். மதசார்பின்மை, தாராளவாதம் ஆகியவற்றால் வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தம் மத, இன, மொழி அடையாளங்களை உறுதிப்படுத்திய போதே மேலெழலாயினர். இந்தியாவிலும் அப்படித்தான், நவீன கல்வி, அறிவொளிக்கால மதிப்பீடுகள் ஆகியன இந்தியர்களை மேக்காலேயின் பிள்ளைகளாக மட்டுமே ஆக்கின. மதச் சார்பின்மை என்கிற பெயரில் இங்கு மதமாற்றங்கள் இந்து மதத்தை அழித்தன. நவீன மதிப்பீடுகள், விஞ்ஞானப் பார்வை, எல்லையற்ற பன்மைத்துவம் முதலியன இந்தியர்களையும் யூதர்களையும் அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் சாதனைகளையும் கீழ்மைப்படுத்தின. இறுக்கமான இன, மத அடிப்படையிலான ஒற்றைக் கலாச்சார அடையாளத்தின் மூலம் பெறும் வலிமையையும் உந்து சக்தியையும் இந்த இரண்டு சமூகங்களும் இழந்தன. இந்த இழப்புகளை இந்தச் சமூகங்கள் உணரத் தொடங்கியதன் விளைவாக கலாச்சார தேசியம் எனும் கருத்தாக்கம் இரண்டு சமூகங்களிலும் வலுவாக உருப்பெற்றன. யூதர்கள் மத்தியில் அது சியோனிசமாக வெளிப்போந்தது. இந்தியாவில் அது வீர சாவர்க்கர், பக்கிம் சந்திர சட்டர்ஜி, விவேகாநந்தர், அரவிந்தர், தயானந்த சரஸ்வதி, திலகர் முதலானோரின் ஊடாக இந்துத்துவமாக உருப்பெற்றது.


3. இந்துத்துவம் சியோனிசம் இரண்டுமே கலாசார தேசியத்தை வலியுறுத்தினாலும் அவை இந்தக் கலாச்சார அடையாளத்தை வலியுறுத்திய அதே நேரத்தில் அந்தக் கலாச்சார அடையாளத்திற்குள் அவை பன்மைத்துவத்தையும், வெளிப்படைத் தன்மையையும் அப்படி ஒன்றும் முற்றாக மறுத்துவிடவில்லை. சியோனிசத்திற்கும் இந்துத்துவத்திற்குமான மூன்றாவது ஒற்றுமை இது.


எப்படி ஃப்ரான்ஸ் கத்தோலிக்கத்தையும், இங்கிலாந்து புராட்டஸ்டான்ட் மதத்தையும் ஏற்றுக்கொண்ட நாடுகளாகக உள்ளனவோ அதேபோல இஸ்ரேலும் யூதேயத்தின் அடிப்படையில் இயங்கினாலும் அந்தப் பெரும்பான்மை யூதக் கலாச்சாரக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் பிற அடையாளங்களும் அங்கு அனுமதிக்கப்படும். சாவர்க்கரின் இந்துத்துவமும் இத்தகையதே. இந்து தேசத்தின் அடையாளங்களாக அவர் மாத்ருபூமி (தாய்நாடு), ஜாதி (அதாவது இனம்), சான்ஸ்கிருதி (கலாச்சாரம்), புண்ணியபூமி (அதாவது அவர்களின் புண்ணிய பூமியாகவும் அது இருக்க வேண்டும்) ஆகிய நான்கையும் முன்வைத்தார். இதன் மூலம் அவர் இந்து மதத்திற்குள் உள்ள எல்லா சாதிகளையும் உள்ளடக்கியதோடு இந்தியாவில் தோன்றிய சமணம், பவுத்தம், சீக்கியம் ஆகிய மதங்களையும் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. இப்படியான ஒரு பார்வையை இந்துத்துவத்தின் குறைபாடாகச் சிலர் சொன்னபோதும், இந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத அம்பேத்கர் போன்ற சில தலைவர்களும் கூட பாகிஸ்தான் பிரிவினை குறித்த நூலில் இதே போன்ற கருத்தை (அதாவது முஸ்லிம்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என) முன்வைப்பது குறிப்பிடத் தக்கது. சாவர்கரின் இந்துத்துவத்தில் இந்திய கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடமில்லை என்பது உண்மைதான். ஆனால் இதன் பொருள் இந்தியா பலரும் வாழ்கிற ஒரு பன்மைத் தேசமாக இருக்க முடியாது என்பதல்ல. பிற சமூகங்கள் இந்துப் பெரும்பான்மைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவர்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனுமதிக்கப்படும்.


இதுவரை தொகுத்துக் கூறப்பட்டவை சியோனிசமும் இந்துத்துவமும் ஒன்று எனவும், வரலாற்று ரீதியாகவும், தற்போதுள்ள அரசியல் அணுகல்முறைகளின் அடிப்படையிலும் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடுகளும் இல்லை எனவும் வாதிடும் இந்துத்துவவாதிகளின் கருத்துக்கள் (ஜெய்தீப் ஏ பிரபு, 'இந்துத்துவாவும் சியோனிசமும்: கொடிகள்தான் வேறு வேறு: கொள்கைகள் ஒன்றுதான்', ஸ்வராஜ்யா, ஜூன் 5, 2017).


இவற்றை. நான் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. இந்துத்துவாவும் சியோனிசமும் ஒன்றுதான் எனச் சொல்லும் இவர்கள் இன்னொன்றையும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார்கள். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதுதான் அது. பிற நாடுகளில் புண்ணிய தலங்களைக் கொண்டுள்ள யாரும் இந்த தேசத்தில் உரிமை கோர இயலாது. பசுவின் புனிதம், சூரிய வணக்கம் மற்றும் பிற இந்து அடையாளங்களுடன் கூடிய அரசு ஆகியவற்றை ஏற்கும் வரை மட்டுமே இங்கு அவர்களுக்கு அரசியல் உரிமைகள் உண்டு.


இந்தக் கட்டுரையில் அவர்கள் ஒரு தேசத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகச் சொல்பவை கவனத்துக்குரியவை. மதச்சார்பின்மை (secularism), பன்மைத்துவம் (pluralism), தாராளவாதம் (liberalism),
குடிமைத் தேசியம் (civic nationalism), சம உரிமைகள் (equal rights), விஞ்ஞானப் பார்வை (scientific outlook) முதலியவற்றால்தான் இந்த தேசம் தாழ்ந்து கிடக்கிறதாம். இவர்கள் கள்ள மௌனம் காக்கும் சில கருத்தாக்கங்களில் ஜனநாயகம், சமத்துவம், தீண்டாமை மற்றும் பெண்ணடிமை ஒழிப்பு முதலானவை அடங்குகின்றன.


இவர்கள் முன்வைக்கும் தலைவர்கள் சாவர்க்கர், தயானந்த சரஸ்வதி, பக்கிம் சந்திரர், விவேகாநந்தர், அரவிந்தர், திலகர் ஆகியோர். கோட்சேயை ஏன் விட்டுவிட்டார்கள் எனத் தெரியவில்லை. இவர்கள் புறக்கணித்துள்ள தலைவர்களில் காந்தி, நேரு, அம்பேத்கர் (இவரை ஒரே ஒரு இடத்தில் மேற்கோளாகப் பயன்படுத்துவது எதிர்மறையாக), தாகூர் முதலானோர். ராஜாராம் மோகன் ராயைக்கூட இவர்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


(தொடரும்)