இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 01

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

(பூனித பூமியாம் பாலஸ்தீனம் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த ஜீன் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1967ல் இஸ்ரேல் தனது அண்டை நாடுகள் அனைத்தின் மீதும் போர் தொடுத்து பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்தது. நான்கு இலட்சம் பாலஸ்தீனியர்கள் தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த தாய்பூமியை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். இதனை கொண்டாடும் வகையில் தானோ இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இஸ்ரேல் செல்கிறார். இந்தியாவை ஆட்சி செய்யும் மனுவாதி சங்பரிவாருக்கும் இஸ்ரேலை ஆட்சி செய்யும் பாசிச சியோனிசத்திற்கும் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது. அதனை இத்தொடரில் அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ் - பொறுப்பாசிரியர்)


இந்துத்துவவாதிகளின் அணுகல்முறையை நண்பர் பாரதி கிருஷ்ணகுமார் ஒரு கூட்டத்தில் இப்படி நகைச்சுவையாகச் சொன்னார்: "ஒருத்தன் காந்தியைச் சுட்டது சரிதாம்பான். இன்னொருத்தன் அப்டி நாங்க சொல்லலியேம்பான். மூணாவது ஆள் அப்படிச் சொன்னாதான் என்னம்பான்" உண்மை. அவர்களின் தந்திரோபாயங்களில் ஒன்று இது. மாட்டுக்கறி விஷயத்திலும் அவர்கள் இப்படிச் சொல்வதைக் கவனிக்கலாம். மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்பார்கள். இன்னொரு பக்கம் சாப்பிடலாம் ஆனால் மாடுகளை வெட்டக் கூடாது என்பார்கள். வெட்டாமல் எப்படிச் சாப்பிடுவது என்றால் புன்னகைப்பார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் மாட்டுக்கறி வைத்திருந்தார் எனச் சொல்லி இரண்டு பேர்களைக் கொல்வார்கள்.


இவைதான் அவர்களின் நடைமுறைகளாக உள்ளன. ஆனால் தத்துவார்த்தப் பிரச்சினைகளில் இவர்கள் ஓரளவு யோக்கியமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் சமீப காலத்தில் ரொம்பவே யோக்கியமாக இருக்கிறார்கள். கொஞ்ச நாள் முன்னர் வரை அதிலும் கூட அவர்களின் மேற்படி தந்திரோபாயத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ்சைத் தொடங்கியவர்களில் ஒருவரான மூஞ்சே பாசிஸ்ட் முசோலினியை நேரடியாகப் போய்ச் சந்தித்து, 'உங்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுகிறோம்.." எனச் சொல்லி வழிந்து வந்தார் என்பதை நாம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினால், "ஏன் உங்கள் காந்தி கூடத்தான் முசோலினியைச் சந்தித்தார்" என மகா புத்திசாலித்தனமாகப் பதில் சொல்வார்கள். இரண்டும் ஒன்றா? தொடர்ந்து பாசிஸ்டுகளுடன் என்ன மாதிரி உறவை மூஞ்சேயும் காந்தியும் வைத்திருந்தனர்? முசோலினியின் பாசிச அறிக்கையை இந்தியில் மொழியாக்கி வெளியிட்டது நீங்களா இல்லை காந்தியா? முசோலினியின் 'பலில்லா' வடிவில் இராணுவப் பள்ளிகளை இங்கே உருவாக்கிச் செயல்படுத்தியது நீங்களா? இல்லை காந்தியா?- என்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்கள்.


சரி. இப்போது அவர்கள் இந்த அம்சத்தில் என்ன யோக்கியமாக ஆகிவிட்டார்கள் என்கிறீர்களா?. அவர்கள் இப்போது தங்களின் கருத்தியல் பாசிசம்தான் என்றோ சியோனிசம்தான் என்றோ சொல்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான பாசிசத்துடனும் யூதர்களின் சியோனிசத்துடனும் அப்பட்டமாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆமாம் சியோனிச அரசியல்தான் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் பொருத்தமானது. சியோனிஸ்டுகளுடன் நாம் கருத்தியல் அடிப்படையில் ஒன்று படுவது மட்டுமல்ல அவர்களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்கின்றனர். அமெரிக்காவில் வாழும் உயர்சாதி இந்தியர்கள் அப்பட்டமாக சியோனிஸ்டுகளுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர்.


இது குறித்த விவரங்களை நாம் இந்தத் தொடரில் காண்போம். இந்துத்துவத்தை வெறித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ள உயர்சாதி மத்தியதர வர்க்கத்தினர் இணையம் மற்றும் நவீன தொடர்புச் சாதனங்களை மிகத் தீவிரமாகவும், வெற்றிகரமாகவும் தமது கருத்தியப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவது குறித்து நான் எனது 'உலகமயமும் இந்துத்துவமும்' கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன் (பார்க்க: www. amarx.in) ஸ்வராஜ் மேக் எனும் இணையத் தளம் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளேன். அந்த இணைய இதழ் இப்போது (ஜூன் 5, 2017) ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்ல உள்ளார். "இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்’’ என இதைக் கொண்டாடித் தான் அந்தச் சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. இதில் சியோனிசத்தையும், இந்துத்துவத் தையும் இணைத்தும், இஸ்ரேலைக் கொண்டாடியும் மிக விரிவான 11 கட்டுரைகள் உள்ளன.


"இந்துத்துவாவும் சியோனிசமும்: கொடிகள்தான் வேறு வேறு; கொள்கைகள் ஒன்றுதான்’’


"இஸ்ரேலையும் மத்திய கிழக்கையும் உருவாக்கிய ஆறு நாட்கள்’’


"1923-77: இஸ்ரேலில் வலதுசாரிகளின் எழுச்சி குறித்த ஒரு சுருக்கமான வரலாறு’’


"கிப்புட்சிம்மிலிருந்து முதலாளியத்தை நோக்கி: சோஷலிசத்திலிருந்து : தொழில்வளர்ச்சி நாடாக இஸ்ரேலின் பயணம்’’


"நேருவிலிருந்து மோடிவரை : இந்திய-இஸ்ரேல் உறவின் நான்கு அத்தியாயங்கள்’’


"இஸ்ரேலின் விவசாயப் பண்ணைகளி லிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்’’


"தொண்டு நிறுவனகளை வீழ்த்த ஏன் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட வேண்டும்?’’


"புதுமைமிகு கலாச்சாரத்தைக் கட்டமைக்க இஸ்ரேல் இந்தியாவுக்கு எதையெல்லாம் கற்பிக்க முடியும்?’’


"இஸ்ரேலின் திருத்தல்வாத வரலாறு எவ்வாறு தலைகீழாக்கப்பட்டது’’ என்பன இக்கட்டுரைத் தலைப்புகளில் சில.

 

இந்தத் தலைப்புகளிலிருந்தே அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை யூகிக்க இயலும். அவை:


1. இந்துத்துவம் சியோனிசத்தை அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டு நெறியாகக் கொள்ளவேண்டும்.


2.இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள வேண்டும்


3.இஸ்ரேலின் அரசியலையும், வளர்ச்சி அணுகல்முறைகளையும் இந்தியா அப்படியே பின்பற்ற வேண்டும்.


சியோனிசத்தையும் இந்துத்துவத்தையும் ஒப்பிட்டு இவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை மட்டும் சுருக்கமாக இனி பார்ப்போம்.


(தொடரும்)