விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 34

விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்

அல்லாபக்ஷ் சும்ரோ

முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்து, பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று ஜின்னா கூறியதை ஏற்க மறுத்தவர் அல்லாபக்ஷ் சும்ரோ. பிரிவினை செய்யப்படாத இந்தியாவில் சிந்து மாகாணப் பிரதமராகப் பதவி வகித்த அவர், டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் பாகிஸ்தான் பிரிவினையை வன்மையாக கண்டித்துப் பேசினார். சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்த அவரைப் பிரதமர் பதவியிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


அல்லாபக்ஷ் சும்ரோ 1900ஆவது ஆண்டில் ஷிகார்புரில் பிறந்தவர். மேலைச் சிந்து மாகாணத்தில் உள்ள இந்த ஊரில் அல்லாபக்ஷின் முன்னோர்கள் அரசாங்க ஒப்பந்ததாரர்களாகவும், பெருநிலக் கிழார்களாகவும் திகழ்ந்தவர்கள்.


ஷிகார்புர், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகவும், அமைதியான வாழ்க்கை வாழும் மக்களின் உறைவிடமாகவும் திகழ்ந்த ஊர் ஆகும். சுக்குர் மாவட்டத்தின் இன்னொரு பகுதியில் உள்ள சுக்குர் ஷிகார்புருக்கு நேர்மாறான ஊர். அங்கு வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொடக்கக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை அல்லாபக்ஷ் சும்ரோ ஷிகார்புரில் படித்தார். 1918ஆம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லை. தனது தந்தையின் வியாபாரத்தை கவனித்துக் கொண்டார்.


அல்லாபக்ஷின் இளைய சகோதரரான ஹாஜி மவ்லா பக்ஷ் பின்னர் ஒருசமயம் சிந்து மாகாணத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அல்லாபக்ஷ் சும்ரோ தம்பதிக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். ஜகோபாபாத் நகரசபைக் குழு உறுப்பினராகவும், சுக்குர் மாவட்ட உள்ளாட்சிக் குழு உறுப்பினராகவும் தனது 23வது வயதில் அல்லாபக்ஷ் சும்ரோ உறுப்பினரானார். அதன்பின் 1928ஆம் ஆண்டில் சுக்குர் உள்ளாட்சிக் குழுவின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931ஆம் ஆண்டில் மாவட்ட உள்ளாட்சிக்குழுத் தலைவர்கள் மாநாட்டை அவர் நடத்தினார். அதில் ஜகோபாபாத் உள்ளாட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்ளாட்சிக் குழுத் தலைவர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்; வளர்ச்சிப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


சுக்குர் அணைத் திட்டத்தை நிறைவேற்றியவர்

1926 முதல் 1936 வரை மும்பை கவுன்சிலில் சிந்து மாகாண உறுப்பினராக அல்லாபக்ஷ் சும்ரோ பணியாற்றினார். அப்போது பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும், பொது கணக்கு குழு தலைவராகவும் அவர் பணியாற்றினார். பல்வேறு எம்.எல்.ஏ.க்களின் ஒத்துழைப்புடன் சுக்குர் அணைத் திட்டத்தை அவர் நிறைவேற்றினார். பற்றாக்குறை பகுதியாக இருந்த சிந்து மாகாணம் இதன்பின் உபரி மாகாணமாகத் திகழ்ந்தது.
1935ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தியச் சட்டம், மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரம் கொடுத்தது. பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப் பட்டிருந்த சிந்து மாகாணம் அதன்பின் தனியாகப் பிரிக்கப்பட்டு, சட்டசபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சர் ஷாநவாஸ் புட்டோ, சர் அப்துல்லா ஹாரூன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இத்திகாத் (ஐக்கிய) கட்சியை அல்லாபக்ஷ் சும்ரோ தொடங்கினார். சிந்து மாகாண சட்டசபையின் மொத்த இடங்கள் 60. அதில் முஸ்லிம்களுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களில் அல்லாபக்ஷின் இத்திகாத் கட்சி வேட்பாளர்கள் 35 இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த நிலையில் சர் குலாம் ஹ§ஸைனை அரசு அமைக்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். அதன்படி அவர் ஆட்சி அமைத்தார். ஆனால், அந்த ஆட்சி ஓர் ஆண்டு வரை தான் நீடித்தது.


1938ஆம் ஆண்டு அந்த ஆட்சி கவிழ்ந்தபின், புதிய ஆட்சி அமைக்கும்படி அல்லாபக்ஷ§க்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று தனது 38வது வயதில் அல்லாபக்ஷ் சும்ரோ, சிந்து மாகாணப் பிரதமராகப் பதவியேற்றார். அவரது தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அவருடைய அமைச்சரவையில் பதவி வகித்த மந்திரிகளுக்கு மிகவும் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. அந்த அமைச்சரவை இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது. அதன் பிறகு முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த கான் பகதூர் எம்.ஏ. குஹ்ரோ, அமைச்சரவை அமைக்க அழைக்கப்பட்டார். ஆனால், ஒரு வருடத்திற்குள் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அல்லாபக்ஷ§க்கு கிடைத்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பிரதமராகப் பதவி வகித்தார். அவருடைய அந்தக் கால ஆட்சியைப் ‘பொற்கால ஆட்சி’ என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த சமயம் அல்லாப¬க்ஷ எப்படியாவது முஸ்லிம் லீக் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று அந்தக் கட்சி பல்வேறு உபாயங்களைக் கடைப்பிடித்தது.


கராச்சியிலிருந்து பஜ்லுல் ஹக் உள்ளிட்ட பல பெரிய தலைவர்களைச் சிந்து மாகாணத்திற்கு அக்கட்சி அனுப்பி வைத்தது. அவர்கள் அல்லாபக்ஷ§டன் பலமுறை பேசி அவர் மனதை மாற்ற முயன்றார்கள். ஆனால், வகுப்புவாத சக்திகளுக்குத் துணைபோக முடியாது என்று கூறி அவர்களுடைய கோரிக்கையை ஏற்க அல்லாபக்ஷ் சும்ரோ மறுத்துவிட்டார்.


தேசிய முஸ்லிம்கள் மாநாட்டில் உரை


தேசிய முஸ்லிம்கள் மாநாடு 1940ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்து அல்லாபக்ஷ் சும்ரோ பேசியபோது, பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை வன்மையாகக் கண்டித்தார். அதனால் அவருடைய பெயர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. அவர் சிறந்த தேசியவாதியாகப் போற்றப்பட்டார். கதராடையையே அவர் அணிந்தார். அத்துடன் கதர்த் துணியைத் தோளில் சுமந்து சென்று தெருத்தெருவாக விற்றார்.அல்லாபக்ஷ் சும்ரோ பிரதமர் பதவி வகித்தபோது அவரைப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக வைஸ்ராய் நியமித்தார். ஆனால், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உச்சகட்டத்தில் இருந்த 1942ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்தப் பதவியை ராஜினாமா செய்த அல்லாபக்ஷ் சும்ரோ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தமக்கு அளித்திருந்த பட்டங்களையும் விருது களையும் துறந்தார்.


இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது கட்ட விழ்த்து விடப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே பட்டங்களையும் விருது களையும் துறந்ததாக கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் அல்லாபக்ஷ் சும்ரோ தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கடிதம் மறைமுகமாக தம்மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவிப்பதாகக் கூறி, அல்லாப¬க்ஷ பிரதமர் பதவியிலிருந்து கவர்னர் டிஸ்மிஸ் செய்தார். பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அல்லாபக்ஷ் சும்ரோ, 1943ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியன்று சதிகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட செய்தி அறிந்து சிந்து மாகாணம் துயரத்தில் ஆழ்ந்தது.


மக்கள் தங்களின் ஆற்றொணாத் துயரைக் கண்ணீர் வடித்ததன் மூலம் தெரிவித்துக் கொண்டனர். அது முழுக்க முழுக்க அரசியல் கொலை. அல்லாபக்ஷ் சும்ரோ கொலை செய்யப்பட்டதன் மூலம் சிந்து மாகாணம் சிறந்த தேசியவாதியை இழந்து விட்டது.


குறிப்புகள்


K.L.Gauba, Famous and Historic Trials, Lahore, 1946.
N.N.Mitra (Ed.), The Indian Annual Register, 1930-42.
Ram Gopal, Indian Muslims, Bombay, 1959.
R.Coupland, Indian Politics, 1936-42, Part II, Madras, 1944.
Dr. Khalid Bin Sayeed, Pakistan: The Formative Phase, Karachi, 1960.