விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32

விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்

மவ்லானா ஹபிபுர் ரஹ்மான்

மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் லுத்யானவி பஞ்சாபில் புகழ்பெற்ற தேசியவாதியாகவும் சோஷலிஸவாதியாகவும் திகழ்ந்தவர். 1892ஆம் ஆண்டில் லூதியானாவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள்.

மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் இஸ்லாமிய வழக்கப்படி, லூதியானாவில் ஒரு மதரசாவில் தொடக்கக் கல்வி பயின்றார். அதன்பின் உயர்கல்வி கற்பதற்காக அவரை அவருடைய தந்தை மவ்லானா முகம்மது ஜக்கரியா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரசுக்கு அனுப்பினார். இறுதியில் தேவ்பந்த் சென்று அவர் கல்வி பயின்றார்.

கட்சி தொடக்கம்

மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் 1929ஆம் ஆண்டு அஹ்ரர் என்னும் கட்சியைத் தொடங்கினார். வடமேற்கு மாகாணம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீஹார், வங்காளம் ஆகிய பகுதிகளில் இக்கட்சி மிகவும் பிரபலமடைந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக காஷ்மீர், கபூர்தலா, பஹவல்பூர் முதலிய இடங்களில் அவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அந்த காலகட்டத்தில், இந்தியாவில் அந்தக் கட்சி மிகவும் பலம் பொருந்திய தேசிய முஸ்லிம் கட்சியாகத் திகழ்ந்தது. அது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துப் பணியாற்றியது. காங்கிரஸ் கட்சி நடத்திய எல்லா இயக்கங்களிலும் மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் பங்குகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட அவர் பத்தரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் தேசிய இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டதன் காரணமாக மவ்லானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், ஹ§ஸைன் அஹமத் மதானி, முப்தி கியாபத்துல்லா, மவ்லானா ஹிவ்ஜுர் ரஹ்மான் போன்ற தலைவர்களின் நெருக்கமான நட்புக்குரியவரானார். இவர்களுடன் சேர்ந்து பல முறை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர் ஹபீபுர் ரஹ்மான்.


பகத் சிங் குடும்பத்தினருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்க தவறிய போது, பகத் சிங்கின் தாயார், சகோதரர் மற்றும் சகோதரிக்கு தனது வீட்டில் ஒரு மாதக் காலம் அடைக்கலம் கொடுத்தவர் மவ்லானா ஹபீபுர் ரஹ்மான். இதே போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் ஒரு மாதக் காலம் அடைக்கலம் அளித்தவர் மவ்லான ஹபீபுர் ரஹ்மான்.


1931ல் முதன்முறையாக ராவி ஆற்றங்கரையில் பண்டித் ஜவஹர்லால் நேரு முதன்முறையாக மூவண்ண இந்திய கொடியை ஏற்றிய போது, லுதியானாவில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மவ்லானா ஹபீபுர் ரஹ்மான் மூவண்ண கொடியை ஏற்றி இதன் காரணமாக அவர் கைதுச் செய்யப்பட்டார்.


இந்தியா எல்லா மதத்தவருக்கும் சொந்தம்


ஆழ்ந்த மதப்பற்று கொண்ட மவ்லானா ஹபிபுர் ரஹ்மான், ஆரோக்கியமான வழிமுறையில் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். மக்களின் துன்பத்தை சோஷலிஸ சித்தாந்தங்களின்படி தான் நீக்க முடியும் என்று அவர் நம்பினார். இந்தியா இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமல்ல; அதன் விடுதலைக்காகப் போராடிய எல்லா மதத்தினருக்கும் சொந்தமாகும். ஜனநாயக ஆட்சி முறையில் ஒருவரை ஒருவர் அடக்கியாளும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் முழக்கினார். இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து (தன்னாட்சி) முறையை அவர் ஏற்கவில்லை; பரிபூரண சுயராஜ்யமே தேவை என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். சுதந்திர இந்தியா ஒற்றுமையுடன் திகழும் என்று கூறிய அவர், தேசப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார்.1937ஆம் ஆண்டு மாகாணச் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியினர் கட்டுப்பாடுகளையும் ஒழுங்கு முறைகளையும் மீறி நடந்து கொண்டனர். இது மவ்லானா ஹபிபுர் ரஹ்மானுக்குப் பெரும் வேதனையளித்தது. "உண்மையான கட்சி ஊழியர்களுக்குக் காங்கிரசில் இடமில்லாமல் போய்விட்டதே" என்று வருத்தத்துடன் அவர் கூறினார். உண்மையான கட்சி ஊழியர்கள் எவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டாலும் கட்சியை விட்டு அவர்கள் விலகிவிடக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சோஷலிஸ வழிமுறையின் மூலமே நாட்டில் காணப்படும் தீமைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று அவர் கூறினார்.


1924ஆம் ஆண்டில் ‘அனேயஸ்’ (கிழிகிணிஷி) என்னும் பெயரில் உருது வாரப் பத்திரிகையை அவர் தொடங்கினார். லூதியா னாவிலிருந்து வெளியிடப் பட்ட இந்தப் பத்திரிகையில் அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக அந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டதால், தொடங்கிய சிறிது காலத்திற்குள்ளேயே அது நிறுத்தப்பட்டது. மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவராக இருந்த அதே சமயத்தில், தலைசிறந்த சோஷலிஸவாதியாகவும் திகழ்ந்தார். 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அவர் காலமானார்.


குறிப்புகள்

Chaudhry Khaliquzzaman, Pathway to Pakistan, Karachi, 1961.
Speech at the Azad Muslim Conference, Delhi, 29 April 1940.
The Indian Year Book, 1938-39, Vol.XXV (The Times of India, Bombay)
Exchange of letters with Jawaharlal Nehru in 1936-37.
The Indian Annual Register, Vol.I, 1939 and 1940.
H. Hadivala, Studies in History of Indian Muslims, Delhi, 1992.
Jain, N.K., Muslim in India, Delhi, 1983.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.