விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 31

விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்

இந்தியா பிளவுபடக் கூடாது; முஸ்லிம் லீகும் காங்கிரசும் இணைந்து செயல்பட வேண்டு; அஹிம்சை நெறியிலேயே சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தவர் அதாவுல்லா ஷா புகாரி. காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான அவர், காந்திஜியின் தூதர் என்றே பரவலாக அறியப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.


அதாவுல்லா ஷா புகாரி, 1891ஆம் ஆண்டில் பாட்னாவில் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் ஜியா உத் தின் அகமது. தாயின் பெயர் சியாடா பாத்திமா இந்த்ரோபி. அதாவுல்லா ஷா புகாரியின் சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். ஆகவே அவர் தாய்வழிப் பாட்டனார் வீட்டிலேயே வளர்ந்தார். ஆங்கில வழி கல்வி பயில்வதை அவருடைய பாட்டனார் ஏற்றுக்கொள்ளவில்லை.


ஆகவே தன் பாட்டியிடம் அரபி மற்றும் பெர்சிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தன் தாத்தாவிடம் உருது மொழி கற்றார். தாத்தா பாட்டியின் மறைவுக்குப் பிறகு அமிர்தசரஸ் சென்று மவ்லானா நூர் அகமத், மவ்லானா குலாம் முஜாஜி குவாசிம் மற்றும் ஹசரத் முப்தி முகம்மது ஹ¨சைன் ஆகியோரிடம் மார்க்கக் கல்வி பயின்றார். ஷா அஜிம் அபாடியிடம் உருதுமொழி கவிதை இலக்கணம் பற்றிக் கற்றறிந்தார். மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, மவ்லானா அபுல்கலாம் ஆசாத், டாக்டம் எம்.ஏ.அன்சாரி, மவ்லானா ஷவ்கத் அலி ஆகியோருடன் அவர் நெருங்கிப் பழகினார்.


புதிய கட்சி தொடக்கம்


அதாவுல்லா ஷா புகாரி அமிர்தசரசில் ஒரு மஸ்ஜிதில் குர்ஆன் போதிக்கும் ஆசிரியராகப் பணியாற்றிய பின் 1921ஆம் ஆண்டு தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் அவர் தீவிரமாகப் பங்குகொண்டார். பஞ்சாப் கிலாஃபத் குழு சட்டவிரோதமானது என்று மவ்லானா ஷவ்கத் அலி அறிவித்ததால், மவ்லானா அபுல்கலாம் ஆசாத் உதவியுடன் அதாவுல்லா ஷா புகாரி, ‘மஜ்லிஸ் ஐ அஹ்ரர் இஸ்லாம் ஹிந்த்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதன் தலைவரானார். ஷெட்கஞ்ச் குருத்வாரா வழக்கில் அவருக்கு 1927ஆம் ஆண்டு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்ட அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வங்காளத்தில் தினாஜ்பூர் சிறையில் அவர் தண்டனைக் காலத்தைக் கழித்தார்.


ஆறு மாத சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலையான அவர், காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து விடுதலையான அவர், ஆட்சேபகரமாகச் சொற்பொழிவு நிகழ்த்தியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.


இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்தியர்கள் சேரக்கூடாது என்று அதாவுல்லா ஷா புகாரி பஞ்சாபில் பிரச்சாரம் செய்தார். அதற்காக பஞ்சாப் அரசு 1939ஆம் ஆண்டு அவரைக் கைது செய்தது. அதுசம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அங்கு குடியேறினார். அவர் தனது 76வது வயதில் அங்கு காலமானார்.


அதாவுல்லா ஷா புகாரி, சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். விதவைத் திருமணத்தை ஆதரித்தும், முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் அவர் பிரச்சாரம் செய்தார். அஹரர் கட்சித் தலைவர் என்ற முறையில் மார்க்கக் கல்வி போதிக்கும் பள்ளிகளை நிறுவினார். நாடெங்கும் பயணம் செய்து காந்திஜியின் அஹிம்சை நெறியைப் பரப்பினார். அதனால் காந்திஜியின் தூதர் என்றே மக்கள் அவரை அழைத்தனர்.


குறிப்புகள்

Nagoosh, Personality Number, Lahore, 1956, Edited by Muhammad Tufail.
Nagoosh, Autobographical Number, Lahore, 1964, Edited by Muhammad Tufail.
Chaudhuri Khaliquzzaman, Pathway to Pakistan, Lahore, 1962.
Raman, V.V., 100 Great Names from India's Past, Bombay, 1989.
Aiyar, R., Biographical Vistas, Bombay, 1966.
Sorabji Jehangir, Representative Men of India, W.H.Allen & Co., London, 1889.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.