இஸ்லாத்தின் பார்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பாகம்:5

இஸ்லாத்தின் பார்வையில் ISIS

ஐஎஸ்ஐஎஸ்  நவீன கவாரிஜிகளே (வழிக்கெட்ட கூட்டமே)

அலீ(ரழி) அறிவித்தார்கள்: ‘‘இறைத்தூதர் (ஸல்)அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால்,(உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி(ஸல்) அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்).


இறைத்தூதர்(ஸல்) அவர் கள்,‘‘இறுதிக்காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்.அவர்கள் சிறு வயது இளைஞர்களாக இருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாக இருப் பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறை நம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.” (புஹாரி: 3611)


இந்த நபிமொழி கவாரிஜ்களின் சில அடையாளங்களைக் கூறு கின்றது.

சிறு வயதினர் ஆரம்ப கால கவாரிஜ்களின் கொள்கையால் கவரப்பட்ட இளைஞர்கள் பலரும் வழிகெட்டனர். உலமாக்கள் இவர் களின் வலையில் விழவில்லை. இதே பண்பு இவர்களிலும் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப் பினரில் அதிகமானவர்கள் இள வயதினர் ஆவர். கவாரிஜ்கள் பின்னால் சென்றவர்களும் இத்தகையவர்களே!


அறிவீனர்கள்

இவர்களை அதிகமாக அறிவீனர்களே பின்பற்றுகின்றனர். மார்க்க அறிஞர்கள் இவர்களுக்குப் பின்னால் செல்லமாட்டார்கள்.


நல்ல வார்த்தை

கவாரிஜ்கள் சிறப்பாக வணக்கம் புரிவார்கள். குர்ஆனை ஓதுவர் சொல்லும் வார்த்தை நல்லதாகத்தான் இருக்கும். ஆனால், ஈமான் அவர்களின் தொண்டையை அடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். கிலாபா, குர்ஆன், சுன்னா என்ற நல்ல வார்த்தைகளைத்தான் சொல்கின்றனர். ஆனால், அவர்களின் செயல்கள் அதற்கு முரணானதாகும்.


குர்ஆன் ஓதுவார்கள்

குர்ஆனை ஓதுவார்கள். அது தமக்கு சாதகமாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால், அது அவர்களுக்குப் பாதகமானதாகும்.” (முஸ்லிம்)


இன்றைய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரும் குர்ஆன் வசனங்களை எடுத்துதப்புத்தப்பாக அர்த்தம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு கவாரிஜ்கள் பற்றிச் சொல்லப்பட்ட பண்புகள் இன்றைய ஐஎஸ்ஐஎஸ் காரர்களிடம் நிறையவே காணப்படுகின்றன.


ஒரு உதாரணம்:இலங்கை காத்தான்குடியில் 3.2.2017 அன்று தீவிரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பில் வந்துள்ள ஒரு பலவீனமான ஹதீஸை நாம் சுட்டிக் காட்டினோம். ‘‘நீங்கள் கறுப்புக் கொடிகளைக் கண்டால் பூமியிலேயே நிலைத் திருங்கள். உங்களின் கைகளையும், கால்களையும் அசைக்காதீர்கள். (அவர்களிடம் சொல்லாதீர்கள். அவர்களுக்கு உதவாதீர்கள்) பின்னர் பலவீனமான கூட்டம் வெளியாகும். அவர்களுக்கு எந்த அந்தஸ்தும் இருக்காது. அவர்களது உள்ளம் இரும்பைப் போன்று (கடுமையாக) இருக்கும். அவர்கள் ‘அத்தவ்லா’ உடையவர்களாவார்கள். வாக்குறுதி களையும் உடன்படிக்கைகளையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்கள் சத்தியத்தின் பக்கம் அழைப்பார்கள். ஆனால், அவர்கள் அதற்குரிய வர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் குன்னியத்தாக (அபூ அபூ) என்றிருக்கும். அவர்கள் தம்மை ஊருடன் இணைத்து அழைத்துக் கொள்வார்கள். (பாக்தாதி, ஸர்காவி) அவர்களின் முடி பெண்களின் முடி போன்றிருக்கும்.” (நூல்: நுஅய்ம்)


இந்த ஹதீஸ் பலவீனமானது என்று பலவிடுத்தம் கூறியே மக்கள் மத்தியில் நான் சொன்னேன்.  இதை வைத்து அபூ என்று பெயர் உள்ளவர்கள் (அபூபக்கர் சித்தீக்) மதனி ஊருடன் இணைத்தவர்கள் (கோவை அய்யூப்) தலைமுடி வைத்தவர்கள் எல்லோரும் கவாரிஜ்களா? என்று இலங்கை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


காகம் கறுப்பு என்றால் கறுப்பு எல்லாம் காகம் என்று புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் கவாரிஜ் குஞ்சுகளின் அறிவு உள்ளது. இவர்களில் ஒருவர் கருத்துப் பதிவு செய்யும் போது இப்படிப் பதிந்துள்ளார்: ‘‘இன்ஷா அல்லாஹ் இவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். தனது சுகபோக வாழ்வைத் தக்க வைப்பதற்காக பலவீனமான ஹதீதுகளை மக்கள் மத்தியில் கூறி மக்களை ஏமாற்றி அல்லாஹ்வின் லஹ்னத் (சாபத்)தையும் பெறும் கூட்டமே இவர்கள். இன்ஷா அல்லாஹ் இவர்கள் கதல் (கொலை) செய்வதற்கு சான்று கூறப்பட்டோர்.” பலவீனமான ஹதீஸை அது ழயீப் என்று கூறி மக்கள் மத்தியில் கூறினால் அது எப்படி ஏமாற்று வாதமாகும்? இதைச் சொல்வதில் என்ன சுகபோகம் உள்ளது? இதே உரையில் பல குர்ஆன் வசனங்கள், ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் கூறப்பட்டனவே. இவை இவர் களுக்குப் புரியவில்லையா?  அல்லாஹ்வின் லஹ்னத்தைப் பெற்ற கூட்டம் என்று இவர் எப்படி அல்லாஹ்வின் விசயத்தில் முடிவெடுப்பார்? எனது சுக போகத்தைப் பாதுகாக்கத்தான் நான் பேசினேன் என்று என் உள்ளத்தை இவர் எப்படி அறிந்தார்? என்னைக் கதல் (கொலை) செய்ய வேண்டும் என்று இவர் கூறுகின்றாரே இதற்கான ஆதாரம் என்ன? அவர்களது போலி கிலாபாவுக்கு எதிராகப் பேசியதற்காக என்னைக் கொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர் என்றால் உண்மையான இஸ்லாத்தை விட அவர்களுக்குப் போலி கிலாபாதான் முக்கியமானது என்பது புரிகின்றதல்லவா?


காபிர்களை விட்டுவிட்டு முஸ்லிம்களைக் கொல்வார்கள் என்ற கவாரிஜ்களின் பண்பு இந்த ஐஎஸ்ஐஎஸ் எனும் நவீன கவாரிஜ்களை ஆதரிப்போரிடம் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றதல்லவா? எனவே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கவாரிஜ் அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.


இவர்களுக்கும் இஸ்லாமிய கிலாபாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கடுகளவேனும் இல்லை. இதைத் தெளிவாக உணர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் விசயத்தில் விழிப்பாக இருக்குமாறு வினயத்துடன் வேண்டிக் கொள்கின்றோம்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.