இஸ்லாத்தின் பார்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பாகம்: 4

இஸ்லாத்தின் பார்வையில் ISIS

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உண்மையான கிலாபா அல்ல. அவர்களிடம் கடந்த காலத்தில் வாழ்ந்த வழிகெட்ட கவாரிஜ்களின் பண்புகள் பளிச்செனத் தெரிகின்றன என்று சென்ற இதழில் குறிப்பிட்டோம். அவற்றில் மேலும் சிலவற்றை நோக்குவோம்.

கவாரிஜ்களின் தோற்றம் பற்றிய ஹதீஸ்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார்கள்:

"அலீ(ரழி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(சல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(சல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன் ழலீ அல்முஜாஷிஈ(ரழி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரழி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரழி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரழி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டு விடுகிறார்களே” என்று கூறினார்கள்.(இதையறிந்த) நபி (சல்) அவர்கள், (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈரப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்” என்றார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சொன்னான். அதற்கு நபி (சல்) அவர்கள், நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைக் குரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அவனைக் கொன்று விட அனுமதி கேட்டார் - அவர் காலித் இப்னு வலீத்(ரழி) என்றே கருதுகிறேன். ஆனால், நபி(சல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அந்த மனிதன் திரும்பிச் சென்ற போது நபி(சல்) அவர்கள், இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவார். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.


முஸ்லிம்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்” என்றார்கள்.” (புஹாரி: 7432)


இந்த நபிமொழி மூலம் கவாரிஜ்களின் மற்றும் சில பண்புகளையும் நாம் இனங்காண முடியும். தலைமைத்துவத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள்: தீமையைத் தடுத்தல் என்ற பெயரில் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள். அல்லாஹ்வின் தூதரைப் பார்த்தே நேர்மையாகப் பங்கு வையுங்கள் என்று கூறியுள்ளான் மூத்த கவாரிஜ். தலைமையை எதிர்த்தல் என்ற பண்பு இவர்களுக்குண்டு.
நபித்துவத்தை மதிக்காமை:


இவர்கள் ஹதீஸ்களை விட தமது தலைமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பர். ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் ஒருவர் நபி(சல்) அவர்கள் இன்றிருந்தால் அவர்கள் எங்களுடன்தான் இருப்பார் என்று உரையாற்றுகின்றார். நபி இன்றிருந்தால் நாம் நபியுடன் இருப்போம் என்று கூற அவர்களுக்கு மனம் வரவில்லை.


முஸ்லிம்களைக் கொல்லுவார்கள்


இன்றைய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரும் பைஅத்தை முறித்தவர்கள், ஏற்காதவர்கள்... என முஸ்லிம்களைத்தான் கொல்கின்றார்கள். ஐஎஸ்ஐஎஸ் உருவாகி கிலாபத் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்கோ, இஸ்ரேலுக்கோ எதிராகச் செயற்பட்டதை விட முஸ்லிம் நாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டதே அதிகமாகும்.


(தொடரும்)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.