கல்விக் கடன் பெற அரசின் இணையதளம்

திசைவழி

கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேடுவது எளிதான செயலாக மாற்றம் பெற்று வருகிறது. நாளிதழ்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கல்வி கண்காட்சிகள் என கல்விக்கான தேடலுக்கு விடை காணக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாய்ப்புகள் அதிகரித்தாலும், தங்களின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, பல மாணவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாய் இருப்பது கல்விக்கடன்கள்தான். கல்விக்கடனின் துணையுடன், மாணவர்கள் தங்கள் கல்விக்கான கனவை நிறைவேற்றி வருகின்றனர்.
கல்விக்கடனை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள அதே நேரத்தில், அதனை பெறுவதற்கான தடைக் கற்களும் மாணவர்கள் முன்னால் அதிகமாக இருப்பது போன்று தோன்றுகிறது. தற்போதைய நிலையில் கல்விக்கடனை எளிதாக பெற முடியாத நிலையில், மாணவர்கள் உள்ளனர்.பணப்பற்றாக்குறையை கல்விக் கடனை மட்டுமே வைத்து ஈடு செய்வதற்கு எண்ணாமல், உதவித்தொகைகள் மூலமும் கடனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.


நீங்கள் கல்விக்கடன் பெறுவதற்கு தகுதியான நபர்தானா? என்ற கேள்வியை எந்த வங்கிக்கு சென்றாலும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். கல்விக்கடன் பெறுவதற்கான தகுதிகள், தகுதிகளுக்கு ஏற்ப பெறக்கூடிய தொகையின் அளவு குறித்து பெரும்பாலான வங்கிகள் தங்கள் இணையதளத்தில் தகவல்களை அளித்திருப்பார்கள். அதனை தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னேற்பாடுடன் வங்கிகளுக்கு செல்லுங்கள். நீங்கள் படிக்கப்போகும் கல்லூரி ஏதேனும் வங்கிகளுடனோ அல்லது நிதி உதவிக்கான ஆலோசனைகளை வழங்குகிறதா என்பதனை கல்லூரியிடமிருந்து தகவல்களைப் பெற்று அறிந்துகொள்ளுங்கள்.
படித்து முடித்தவுடன் வேலை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை, நீங்கள் படிக்கப்போகும் கல்லூரி செய்து தருகிறதா? என்பது குறித்து விசாரியுங்கள். வேலையை உடனடியாக பெற்றால் தான், படித்து முடித்தவுடன் கடனை அடைப்பதும் எளிதானதாக இருக்கும். கல்விக்கடனை வழங்கும் வங்கி படிப்பதற்கு மட்டும் கடன் தருகிறதா அல்லது புத்தகங்கள், தங்குமிடச் செலவுகளையும் உள்ளடக்கியதாக தருகிறதா என்பதில் தெளிவு பெறுங்கள்.


ஒரு சில வங்கிகள் கடன் தருவதற்கு பெற்றோரின் கையெழுத்து மட்டும் போதுமா அல்லது வங்கிகள் வேறு அதிக வருமானம் பெறக்கூடிய நபர் அல்லது அரசு ஊழியர் அல்லது அடமானமாக சொத்துக்களை ஏதேனும் கேட்கிறதா என்பன போன்ற தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.


வட்டியில்லாமல் கடன் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். கடனை திரும்ப செலுத்துவதற்காக கொடுக்கப்படும் காலம், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால் விரைவாக கடனை அடைப்பதற்கு உதவி அளிக்கிறதா, தரக்கூடிய வசதிகள் போன்றவை குறித்தும் அறிந்துகொண்டு கடன் பெறுவதற்கு முடிவு செய்யுங்கள்.


கல்விக்கடன் பெறுவதற்கு செல்லும் முன்னதாக எந்த ஆவணங்கள் எல்லாம் முக்கியம் என அறிந்து ஆவணங்களை மிகச்சரியாக தயாரித்து வையுங்கள். கடைசி நேரத்தில் ஆவணங்களை தயார் செய்வதற்கு அலைய வேண்டாம். உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, அதையெல்லாம் கேட்க தயங்காதீர்கள், தயக்கங்கள் குழப்பத்திற்குள்ளாக்கும் எனவே உங்கள் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறுங்கள். பணம் பெற்றுக்கொள்வது மட்டும் முக்கியமல்ல. பணம் திரும்ப செலுத்துவதும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும்.


கல்வி கடனுக்கான புதிய இணையதளம்


www.vidyalakshmi.co.in என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என இந்திய அரசின் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, மிஞிஙிமி வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளது.


மேலும் 13 வங்கிகள் இதில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. கல்விக் கடன் கிடைக்காத காரணத்தால் உயர்கல்வியை மாணவர்கள் கைவிடுவதை முற்றிலும் தடுப்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இணைய தளத்திலேயே மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.