விழவெடுத்தலும் இழவெடுத்தலும் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கவிதை)

கவிதைகள்
அவர்
மீனவர்களுக்காகத்
துடித்தார்...
மீனவ நண்பனாகவும்
படகோட்டியாகவும்
படத்தில் நடித்தார்...
 
ஒக்கிப் புயலால்
மீனவர்கள்
துக்கித்து 
துடிதுடிக்கையில்
அவரது தோன்றல்கள்
நூற்றாண்டுவிழா எடுக்கின்றனர்...
 
அவர்
விவசாயிகளைத் துதித்தார்...
விவசாயத்தை மதித்தார்...
கடவுளின் தொழிலாளி
விவசாயி என்று
படத்தில் பாடினார்...
 
நூற்றுக்கணக்கான விவசாயிகளின்
தற்கொலையோடு
களைகட்டுகிறது
அவரின் நூற்றாண்டு விழா...
 
தன்னை
‘ஊருக்கு உழைப்பவனாய்’
முன்னிறுத்திய அவர்
‘உரிமைக் குரலை’
முழங்கினார்...
 
உரிமையை டெல்லியிடமும்,
குரலைக் காவிகளிடமும்,
அடகுவைத்து விட்டவர்கள்
தோற்றாண்ட படி
நடத்துகின்றனர்
நூற்றாண்டு விழாவை...
 
‘திருடாதே பாப்பா திருடாதே’
என்று திரையில் பாடினார்...
இவர்களோ
அது பாப்பாக்களுக்கு
மட்டுமே பொருந்தும் என்கிறார்கள்...
 
அவர்,
‘ஏன் என்ற கேள்வி
கேட்காமல் வாழ்க்கையில்லை’
என்று பாடினார் ...
 
‘ஏன் என்று டெல்லியைக்
கேட்டால்
எங்களுக்கு வாழ்க்கை இல்லை’
என்கிறார்கள் இவர்கள்...
 
அவர்
‘அச்சம் என்பது மடமையடா’
என்று பாடினார்...
அவரின் தோன்றல்களோ
‘அச்சம் எங்களின் உடமையடா’
என்று வாழ்கின்றனர்...
 
மானம் பெரிதென்பதை
அவர் படங்களில் முழக்கமாக்கினார்
இவர்களோ
வருமானம் பெரிதென்பதை
பதவிகளில் வழக்கமாக்கினர்...
 
அவர்
‘ஆளும் வளரனும்
அறிவும் வளரனும்’
என்று பாடினார்
இவர்களோ
‘சொத்தே வளரனும்’
என்ற தத்துவம் கண்டனர்...
 
அவர்
தந்தைபெரியாரின்
பகுத்தறிவுப் பாதையில்
நடந்தார்...
அவரது
தோன்றல்களோ
மடமையைத்
தமது
பொதுஉடமை
ஆக்கிக்கொண்டனர்...
 
தெர்மகோல்
விஞ்ஞானிகளின் வசம்
செங்கோல் இருக்கையில்
கன்னக்கோல்கள்
களியாட்டம் போடுகின்றன...
 
எழுதுகோல்கள்
அதிர்ச்சியில் உறைகின்றன...
 
‘நல்லவன் வாழ்வான்’
என்று 
அவர் படமெடுத்தார்...
“நயவஞ்சகனே வாழ்வான்”
என்று
இவர்கள் பாடமெடுக்கின்றனர்...
 
அவர்
ஒரு படத்தில் கூட
சாமி கும்பிட்டதில்லை...
அன்னாரின்
தோன்றல்களோ...
டெல்லி ஆசாமிகளையும்
சாமிகளாய்க் கும்பிட்டு
சரணம் பாடுகின்றனர்...
 
அவர் வளர்த்த
இரட்டை இலை
ஏராள கிளைகளைத்
தாங்கி நின்றது...
 
இதுவோ
இலை சுருட்டுப் புழுக்களின்
எழுச்சி காலம்...
 
ஏறுபோல் இருந்தவருக்கு
மாறுசெய்த தோன்றல்கள்
அந்த
மதுரை வீரனுக்கு
மாவட்டம் தோறும்
மாறுகால் மாறுகை
வாங்குகின்றனர்...
நூற்றாண்டு விழாவின்
பெயரால்...
 
அந்த
அலிபாபா மறைந்தபிறகு
ஆட்சியோ
திருடர்கள் கையில்...
 
‘எத்தனைக் காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’
என்று
மலைக்கள்ளனில்
பாடியவருக்கு,
இந்த
மலை முழுங்கிகள்
மக்கள் பணத்தில்
மாவட்டம் தோறும்
விழவு எடுக்கிறார்கள்...
 
மக்கள் என்ன
செய்வார்கள்...? பாவம்
வயக்காட்டிலும்,
கடலோரத்திலும்,
இழவு எடுக்கிறார்கள்...
Sign up via our free email subscription service to receive notifications when new information is available.