நெஞ்சில் எரியும் நெருப்பு

கவிதைகள்

23.10.2017 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டிக் கொடுமையால் காசிதர்மம் என்ற ஊரைச்சேர்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி மற்றும் குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணியா தீக்குளித்தல் குறித்த கவிதை.

அந்தக்
குழந்தைகளின்
உடலில் தீ
கொழுந்துவிட்டு எரிந்த
கொடுமையை அறிந்த
கணத்தில்...
சமையலறையில்
அடுப்பருகே
நின்று கொண்டிருந்த
என் குழந்தைகளை
வாரி அணைத்தேன்...

ஏன் அணைக்கிறேன்
என்று என்
குழந்தைகளுக்குத் தெரியவில்லை
ஏன் எரிகிறோம் என்று
‘இசக்கிமுத்து’வின்
குழந்தைகளுக்குத்
தெரியாதது போலவே...

மாட்டுக்கு
நீதி தந்த நாட்டில்
மனிதர்க்கு நீதி இல்லையா?
அல்லது
மாட்டுக்கு மட்டும்தான் நீதியா?

மனுநீதி நாளில்
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
மறுதலிக்கப்பட்ட நீதியால்
மனித உயிர்கள்
தீக்கிரையாகின...

ஆட்சியின்
அலட்சியத்தை,
அராஜகத்தை,
அடித்தட்டு மக்களை
அலைக்கழிக்கும்
கயமைத்தனத்தை,
ஆதிக்கச் சக்திகளை
அடிவருடி
பாதிக்கப்பட்டோரை
பாடை ஏற்றும்
அரச பயங்கர வாதத்தை...,
பதவிக்காக
எதையும் செய்யும்
ஈனத்தனத்தை,

எரிக்க முடியாமல்தான்
அவர்கள்
தங்களையே
எரித்துக் கொண்டார்கள்...

முத்துலட்சுமியிடம்
கந்துவட்டிக் கடன்வாங்கிய
இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி
குழந்தைகளோடு எரிந்தாள்...

சேர்த்துக் கொண்ட
லட்சுமிகள் போதாதென்று
குளிரூட்டிய அறையில்
குமைந்து புழுங்குகிறார்கள்
கறுப்பாடாய் மாறிவிட்ட
வெள்ளாடை ரட்சகர்கள்(?)

'காசி தர்மம்' என்று
ஊர்ப்பெயர் உள்ளது...
காசுதர்மம் ஏனடா
இல்லாமல் போனது?

வாங்கிய கடனுக்கு
இருமடங்காக
வட்டிக் கட்டியவன்
கட்டிய மனைவி,
பிள்ளைகளோடு
கரிக்கட்டையானான்...
அவனுக்கு
மானம் இருந்ததாலும்
ஆள்வோருக்கு
மானம் இல்லாததாலும்...

அவன்
விஜய் மல்லையாவாக
இருந்திருந்தால்
பல்லாயிரம் கோடி ரூபாயைப்
பட்டைநாமம் சாத்திவிட்டு...
வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம்...
அமித்ஷா மகன்
ஜெய்ஷாவாக இருந்திருந்தால்
பதினைந்தாயிரம் மடங்கு
லாபம் பார்த்து
லட்சுமிகடாட்சத்தோடு
லயித்திருக்கலாம்...

லலித் மோடியாக
இருந்திருந்தால்
இந்திய அரசே
அந்த(!) மகத்தான
மனிதாபிமானத்தோடு(?)
உதவியிருக்கும்...

ஏழை இசக்கிமுத்துவாய்
இந்தியாவில் பிறந்தவன்
குடும்பத்தோடு
கொளுத்திக் கொண்டானே
மனஅழுத்தம் தாளாமல்...

மனசெல்லாம் ஆட்சியைக்
காப்பாற்றும் வேட்கை கொண்டவர்கள்
மனசாட்சியைக் காப்பாற்றியா
வைத்திருப்பார்கள்..?

நெல்லையில்
பற்றிய நெருப்பு
மக்களின்
நெஞ்சில்
எரியட்டும்...

ஏழைகளை
எரியவைக்கும்
கந்துவட்டியை
அந்த நெருப்பே
எரிக்கட்டும்...