கொசுவுக்கு ஒரு கோரிக்கை...

கவிதைகள்

கொசுவுக்கு  ஒரு கோரிக்கை (கவிதை) ஆக்கம்: ஆரூர் புதியவன்

மொத்த உலகையும்
வென்ற
மாமன்னன் அலெக்சாண்டரை
பாபிலோனில்
மூக்கில் கடித்து
மூச்சை முடித்த
விசக்கொசுவே...
உனக்கு
பழனிச்சாமிகளெல்லாம்
எம்மாத்திரம்...

ஏற்கனவே
தீக்கனவால்
தூக்கமின்றித் தவிக்கும்
இவர்களுக்குச்
சோதனையாக
நீ வேறா?

முதலில்
புழுவாக இருந்து
பிறகு
தக்க சமயம் வந்ததும்
பறக்கத் தொடங்கும்
பாதகக் கொசுவே...

இவர்களும்
உன்னைப் போன்றவர்கள் தானே

இதை எண்ணியாவது
இரக்கங் காட்ட மாட்டாயா?

‘அரசியல் ஒரு சாக்கடை’
என்பதால்
நீயே புகுந்துவிட்டாயா
நேரடியாக?

தோல்வி ஜுரம்
கண்டவர்கள்
ஜுரத்தை
அடக்குவதிலும்
தோல்வியடையட்டும்
என்று
வேள்வி செய்கிறாயா?


நீ டெல்லியிலிருந்தே
குளிர்சாதனப் பேருந்தில் ஏறி
டிக்கெட் வாங்காமல்
இங்கே வந்ததாக
ஒரு கர்ம வீர
அமைச்சர் சொல்கிறார்...

டெல்லியிலிருந்து
தமிழகத்திற்கு
வருவதெல்லாம்
சோதனைதானா?

நீ கடிக்க வேண்டிய
ஆசாமிகள் பலரும்
அங்கே இருக்க
டெங்கே..
ஏன் வந்தாய்
இங்கே...

உன்னை ஒழிப்பதாகச் சொல்லி
ஓட்டு வாங்கியோரை
விட்டு விட்டு
ஓட்டுப் போட்டவரை
மட்டுமேன்
கடிக்கிறாய்...
ரத்தம் என்ற தேன்
குடிக்கிறாய்...

அவர்கள்
நோட்டு வாங்கி
ஓட்டு போட்டதால்
காட்டமா?

அல்லது
சிறுமைகள் பொறுத்து
வாழ்கிறார்களே
என்ற
சீற்றமா?


இல்லை
இந்தப்
பாடாவதி அரசுகளிடம்
சிக்கிப்
பாடாய்ப்படாமல்
பாடையில் போகட்டும்
என்ற
நாட்டமா?
ஏராளமான
எளிய மக்களுக்கு
சங்கு ஊதிவிட்ட
அடங்காத
டெங்குவே...

மண்ணில் புழுவாய்
நசியும் இந்த
எளிய மக்களை
இரக்கப்பட்டு விட்டுவிடு....

உன்னைப் போலவே
இங்கே
ஒரு பேர்வழி...
அவர்
எப்போதும்
பறந்தபடியே
இருப்பார்...
உன்னைப் போலவே
அவரும்
ரத்தப்பிரியர்தான்...

அப்பாவி மக்களுக்கு
அவர் தரும்
அன்றாடத் தொல்லை
தாங்க முடியவில்லை...

கொஞ்சம்
அவரையும்
கடியேன்...
கொடுமையை
முடியேன்...!

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.