நெருக்கடி ஹாதியாவிற்கா? தேசத்திற்கா...?

தலையங்கம்

நீதியின் தடுமாற்றத்தையும், தடம் மாற்றத்தையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது ஹாதியா வழக்கில் அது மேற்கொண்டு வரும் வேடிக்கை வினோத அணுகுமுறைகள்.

அகிலா என்ற 24 வயதுடைய மருத்துவ கல்வி மாணவர் இஸ்லாம் மார்க்கம் குறித்த நூல்கள் பலவற்றைப் படித்து, அம்மார்க்கத்தால் கவரப்பட்டு, முஸ்லிம் ஆகிறார். தனது பெயரை ஹாதியா என்று மாற்றிக் கொள்கிறார். திருமணத் தேடலுக்கான இணையதளத்தின் மூலம் ஷபின் ஜஹான் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து, இருவரும் மனமொத்த நிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஹாதியாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவரது தந்தை அசோகன், ஜனவரி 2016ல் கேரள உயர்நீதின்றத்தில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்கிறார். நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா, தன்னை யாரும் வற்புறுத்தி மதம் மாற்றவில்லை என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்தைத் தழுவியதோடு, ஷபீனைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுகிறார்.

இதை ஏற்றுக் கொண்டு கேரள உயர்நீதிமன்றம் அவரது தந்தையின் வழக்கைத் தள்ளுபடி செய்து விடுகிறது.18 வயதான ஒரு பெண், தான் விரும்பும் மதத்தைத் தேர்ந்தெடுக்க, தான் விரும்பும் கணவரைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசியல் சாசனம் உரிமை அளிக்கிறது. இதில் எவருமே தலையிட முடியாது. எனவே கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவின் தந்தை தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது.

ஆகஸ்ட் 2016ல் ஹாதியாவின் தந்தை அசோகன், ‘தனது மகளை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து சிரியாவுக்குக் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார்.

இந்த முறையும் நீதிமன்றத்தில் நேர்நின்ற ஹாதியா, ‘இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமான அவதூறு என்றும், தன்னிடம் கடவுச் சீட்டே (பாஸ்போர்ட்) கிடையாது. எப்படி வெளிநாடு செல்ல முடியும்?’ என்றும் வாதிட்டார். ஆனால் கேரள உயர்நீதின்றம், அதிர்ச்சிகரமான தீர்ப்பொன்றை அறிவிக்கிறது.

ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்து, அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்கிறது.இந்த ஆபத்தான, அபத்தமான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் து.அரிபரந்தாமன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், அவதூறாக ஒரு பெண் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டை சுமத்தினால், அவருக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் இல்லாமல் போய்விடும் என்பதைத் தவிர இந்தத் தீர்ப்பு வேறென்ன கூறுகிறது.தான் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தையும், தான் தேர்ந்தெடுத்த கணவனையும் பிரியக்கூடாது என்பதில் மலையளவு மனஉறுதி கொண்ட ஹாதியா, இதற்கெல்லாம் இம்மியளவும் அஞ்சவில்லை. உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. 2017 நவ.27 அன்று உயர் அடுக்கு பாதுகாப்போடு உச்சநீதிமன்றத்தில் ஹாதியா ஆஜரானார்.

"தன்னைத் தனது கணவரோடு வாழ அனுமதிக்க வேண்டும்...""கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்..." என்பதுதான் ஹாதியாவின் முக்கிய கோரிக்கைகள்.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஷாபானு வழக்கு புகழ்(?) நீதிபதி சந்திரசூட்டின் மகன் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

அவரது முதல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. "அரசு செலவில் ஹோமியோபதி மருத்துவக் கல்வியைத் தொடர்கிறீர்களா?" என்கிறார் நீதிபதி சந்திரசூட். "அரசின் உதவி எனக்குத் தேவையில்லை. எனது கணவர் எனது கல்விச் செலவைப் பார்த்துக் கொள்வார். அவரோடு வாழ என்னை அனுமதியுங்கள்" என்ற ஹாதியாவின் கேவலுக்கு, நீதிமன்றத்தில் காவல் இல்லை.

சேலம் மருத்துவக் கல்லூரியில், பாதுகாப்போடு ஹாதியா மருத்துவக் கல்வியைத் தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள் அவரது கணவர் செல்ல முடியுமா? என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.

16 வயதுக்குட்பட்ட ஒரு முஸ்லிம் மைனர் பெண்ணை ஒரு இந்து வாலிபர் மனதை மயக்கித் திருமணம் செய்து கொள்கிறார். இந்தத் திருமணம் செல்லும் என்றும், அந்த மைனர் பெண் கணவனோடு வாழ உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஹாதியா வழக்கில் தலைகீழாகப் பேசுகிறது.

'நான் எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் இஸ்லாத்தை தழுவினேன். மனமுவந்தே ஷபீனை மணமுடித்தேன். எனக்கு தேவை சுதந்திரம்' என்று சொன்ன ஹாதியாவிற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 25 மற்றும் 21 வழங்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஏன்... ஏன்... ஏன்...? இந்தியக் குடிமகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், அவர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் பறிக்கப்படுமா?

இது ஹாதியாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனத்துக்கே ஏற்பட்ட நெருக்கடி. இதை எதிர்கொள்வதற்கு தேசம் தயாராக வேண்டும்.