தலை வாங்கும் தறுதலைகள்

தலையங்கம்

பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் கும்பலாட்சி தனது கோர முகத்தை மீண்டும் காட்டியுள்ளது. வெறித்தனங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் நேரத்தில், மதவாத பாஜக அரசின் மௌனம், ஊர் கொளுத்தும் கொடியவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 1990க்குப் பிந்தைய திரைப்படங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாதக் கருத்துகள் வேகமாக இடம் பெறத் தொடங்கின. இதன் பின்னணியில் சங்கபரிவாரம் இருந்தது.


பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன் அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இது சங்பரிவாரங்கள் முன் வைத்த பயங்கரவாத அரசியலுக்கு ஊட்டமளிக்கும் வகையில் சாதாரண மக்களிடம் ராமாயண பக்தியை வலிந்து திணித்தது. மாவீரன் திப்பு சுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்ற முன்னறிவிப்புடன் ஒளிபரப்பிய தூர்தர்ஷன் ராமாயணத்தை உண்மைக் கதை போல ஒளிபரப்பி உணர்வூட்டியது.


திரைப்படங்களில் வரும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் முஸ்லிம்களாக இருந்தனர். தேசத் துரோகிகளாக திரைப்பட உலகம் அவர்களை காட்டி, பொதுமக்கள் இடையே முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை விதைத்தது. இது சங்பரிவாரத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் அடியுரமாக உதவியது. ஆரம்பத்தில் அமைதிகாத்த முஸ்லிம் சமுதாயம், பின்னர் விழித்துக் கொண்டது. தமிழகத்தில் தமுமுகவின் எழுச்சிக்குப்பிறகு திரைப்படங்களில் நடக்கும் திரிபுவாதத்திற்கு ஜனநாயக வழியில் சட்டப்படியான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக துப்பாக்கி,விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் சிலகாட்சிகள் நீக்கப்பட்டன. சில வசனங்கள் மாற்றப்பட்டன.


சில வசனங்கள் மௌனமாக்கப்பட்டன. அப்போதெல்லாம் கருத்துச் சுதந்திரத்தைக் தூக்கவே அவதரித்தது போல ஊடகங்களில் பேசி வந்த காவி ராஜாக்கள் படத்தைப் படமாக பார்க்காமல், ஏன் எதிர்க்கிறார்கள் என்று ஏகடியம் பேசினர்.


அண்மையில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மோடி அரசின் ஜி.எஸ்.டி கொடுமை, செல்லா நோட்டு அரசியல் மருத்துமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பாஜக அரசு குழந்தைகளைக் கொன்ற கொடுமை ஆகியவை குறித்து சில வசனங்கள் பேசியதும் கொதித்தார்கள்.


நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று முழுப்பெயர் சொல்லி பாசமாக (?) அழைத்தார் பாஜக தேசியத் செயலாளர் எச்.ராஜா. இப்போது ‘பத்மாவதி’ பட விவகாரத்தால் வட இந்தியா பற்றி எரிகிறது. பிரச்சினையின் பின்னணி இதுதான் ‘மாலிக் முகமது ஜெய்சி’என்ற சூஃபி கவிஞர் ‘சுவதி’ மொழியில் அலாவுதீன் கில்ஜி, ராஜபுத்ர ராணி பத்மாவதியை மணக்க விரும்பினார். பத்மாவதியும், மேலும் சில ராஜபுத்ர பெண்களும் அலாவுதீக் கில்ஜியிடமிருந்து தப்பிப்பதற்காக தீக்குளித்து மாண்டனர் என்று ஒரு கதையும், அலாவுதீன் கில்ஜியை,ராணி பத்மாவதி நேசித்ததாக ஒரு கதையும் உலவுகிறது. ராணி பத்மாவதி என்பது ஒரு கற்பனைப் பாத்திரம்தான். அப்படி எந்த ராணியும் இல்லை என்று கூறும் வரலாற்றாசிரியர்களும் உள்ளனர்.


மணிரத்னம் எடுத்த ராவணன் படத்தில் ராவணனை சீதை காதலித்தாக கூறப்படும் ஒரு ராமாயணப் பாத்திரத்தின் கதைக் கூறு பின்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே போல பாலிவுட் இயக்குநர் சஞ்சல் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் என்ற நடிகையை வைத்து பத்மாவதி என்ற படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.


இந்தப்படம் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கூடப் பெறவில்லை கதையும் முழுமையாகத் தெரியவில்லை.இந்நிலையில் ஆரிய சனாதவாதிகளின் அக்கிரமம், நாட்டை பதற்றமாக்கி வருகிறது. உ.பி. அரசாங்கமே,இப்படத்தை எதிர்க்கிறது. படத்தின் இயக்குநர் மற்றும் நடிகையின் தலைக்கு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து, இப்படத்தின் கதைக்கூறு,விஷமத் தனமாக இருப்பதை முறையிட்டதற்கே, உலகமகாப் பயங்கரவாதிகளாக முஸ்லிம் தலைவர்களை சித்தரித்த போலி நடுநிலையாளர்களும் சமூக ஆர்வலர்களும்(?) இப்போது காத்து வருமா கள்ள மௌனம் கவனிக்கத் தக்கது.
தலைக்கு விலை வைப்பவர்களை மோடி அரசாங்கம் கண்டிக்கவுமில்லை தண்டிக்கவுமில்லை. ஒட்டு மொத்த கலையுலகத்திற்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை இது. குர்மீட் ராம் ரஹிம் என்ற பாலியல் சாமியாரின் படத்தை,தணிக்கைக் குழு சான்றிதழ் தராமல் தடுத்தாலும், மோடி அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு படத்தை வெளிவரச் செய்கிறது.
ஒரு வரலாற்றுப்படம், உண்மைகளைச் சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தலைக்கு விலை வைக்கும் தறுதலைகளை ஊக்கப்படுத்துகிறது. தனக்கு தலையாட்டதவர்களுக்கு தலையே இருக்கக் கூடாது என்பது தான் இந்த ஃபாசிசக் கும்பலின் எதிர்பார்ப்பு இதற்கு ஓரணியாக திரண்டு மக்கள் வெளிப்படுத்த வேண்டியது மாபெரும் எதிர்ப்பு.