நீதிபதிக்கே நீதி இல்லை

தலையங்கம்

சாதாரணக் குடிமகனுக்கு சட்ட நீதி, சமூக நீதி ஆகிய நீதிகளைப் பாரபட்சமில்லாமல் கிடைக்கச் செய்வதுதான் ஜனநாயக வழியிலான சட்டத்தின் ஆட்சிக்குச் சான்றாக இருக்க முடியும். இத்தலையங்கத்தை நாம் திருவாரூரில் இருந்து எழுதுகிறோம். மாட்டின் கன்றுக்காக தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் பெருமையை புராணங்கள் போற்றுகின்ற தலம் இது. அந்த மனுநீதிச் சோழனுக்கும், முதல் இந்திய நீதிபதி என்ற பெருமைக்குரிய நீதிபதி முத்துசாமி அய்யருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இருவருமே திருவாரூர்காரர்கள் என்பதால் நீதித்துறையையும் அது அடைந்துள்ள நிலைகளையும் எண்ணும்போது இவர்களின் நினைவு வந்தது.மாட்டுக்கு நீதிதந்த புராணம் உள்ள நாட்டில் மனிதனுக்கு நீதி கிடைக்கிறதா?

சாதாரண மனிதனுக்கும் நீதித்துறை மீது நெஞ்சார்ந்த நம்பிக்கை இருக்க வேண்டிய ஜனநாயகத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிக்கே நீதி கிடைக்கிறதா? ஆகிய கேள்விகள் எழுகின்றன.மனுநீதிச் சோழன் கதை புராணக்கதை என்பதால் அதைப் பகுத்தறிவு உரைகல்லில் உரசிப் பார்க்கத் தேவையில்லை. கதையின் நோக்கம், சொந்த மகனாக இருந்தாலும், தவறு செய்தால், ஆட்சியாளர்கள் புத்திர பாசத்தைப் புறந்தள்ளிவிட்டு நீதி பரிபாலனத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.

வர்ணாசிரமங்கள் கூறும் மனுநீதியை வாழவைக்க, எந்த சிரமங்களையும் எதிர்கொள்ள, வெட்க மானமற்ற வேங்கையென நிற்கின்ற மோடி தர்மரிடம்(?) "உன் தளபதி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, சட்டத்தை நைசா ஏமாற்றி 16 ஆயிரம் மடங்கு லாபம் கூட்டி கொள்ளையடித்துள்ளான்" என்றால் என்ன பதில் சொல்வார். "நான் செய்திருக்கிற, செய்துகொண்டிருக்கிற, செய்யவிருக்கிற, என முக்காலமும் தொடரும் மொள்ளமாறித் தனங்களுக்கு முன்னால், சிறுவன் ஜெய்ஷா செய்திருப்பது ஒரு சில்லறை விளையாட்டுதான்... இதைக் கண்டுகொள்ளாமல் விடு. இல்லையெனில், சிபிஐ ரெய்டும், ஐடி ரெய்டும் உன்னையும் குறிவைக்கும் என்பார்.


"கோன் எவ்வழி குடிஅவ்வழி. கூட்டாளியும் அதே வழி... முதல் இந்திய நீதிபதியான சர் முத்துசாமி அய்யர், தெருவிளக்கு ஒளியில் படித்து, நீதிபதியாக உயர்ந்தவர். பிரிட்டிஷ் ஆட்சியில், "தனது தோட்டத்தில் அத்துமீறியோ, தெரியாமலோ நுழைந்துவிட்ட இந்தியர் ஒருவரை, ஆங்கிலேய நீதிபதி ஒருவர் அடித்து விட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முத்துச்சாமி அய்யர், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், அந்த நீதிபதியையே கூண்டில் ஏற்றி, மூன்று ரூபாய் அபராதம் விதித்தாராம்...நாட்டில் இப்போது நடப்பது என்ன? கர்நாடக உயர்நீதிமன்றத் தகுதியில் மிகமூத்த நீதிபதி ஜெயந்த் பட்டேல் கடந்த வாரம் பதவி விலகியுள்ளார்.


குஜராத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆக இருந்த நீதிபதி ஜெயந்த் பட்டேல், மோடி அன்கோ முன்னின்று நடத்திய இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலைக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டவர். தமது கெட்ட திட்டத்தை நாட்டின் சட்டதிட்டத்தை மீறி நிறைவேற்றுவோரின் குட்டு உடைந்து விடும் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயந்த் பட்டேல்.பிறகு அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முழுத்தகுதி உடைய இவர், தேர்வுக் குழுவால் (கொலிஜியம்) புறக்கணிக்கப்பட்டது தற்செயலானது அல்ல. தவறான ஆட்சியாளர்களின் தகிடுதத்தங்களால் ஏற்பட்ட துர்ச்செயல் என்று நீதித்துறை வட்டாரத்தில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.அமித்ஷாவை கொலை வழக்குகளிலிருந்து விடுவித்த பிறகு உச்சநீதின்ற நீதிபதி, கேரளாவின் ஆளுநராக ஆனார். இதைத்தொடர்ந்து நீதிபதி பொறுப்பில் இருக்கும் சிலர் வெளியிடும் கருத்துகள் வேதனைக்குரியதாகி விட்டன.திப்பு சுல்தானுக்கு ஏன் விடுதலை இந்தியாவில் விழா? அவன் ஒரு குறுநில மன்னன் மட்டும்தானே... என்கிறார் ஒரு நீதிபதி.வந்தே மாதரத்தைப் பாடியே தீரவேண்டும்... என்கிறார் ஒரு நீதிபதி. திரையரங்கில் தேசிய கீதம் போடு... என்கிறார் ஒரு தேசபக்த நீதிபதி.மயில் ஒரு பிரம்மச்சாரி பறவை, ஆண் மயிலின் கண்ணீரைக் குடித்து பெண் மயில் கர்ப்பமாகிறது... என்கிறார் நமது செல்லூராருக்கு இணையான விஞ்ஞான அறிவுபெற்ற ஒரு நீதிபதி.


பாபரி மஸ்ஜிதை மூன்று பங்கு வைத்தது அலகாபாத் நீதிமன்றம். அய்யகோ இதென்ன கொடுமை என்று உச்சநீதிமன்றம் போனால், "இந்த வழக்கை நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடாதா? என்று மாரடைப்பு வைக்கின்றார் ஒரு மாண்பமை நீதிபதி. என்னங்க சார் உங்க சட்டம்? என்னங்க சார் உங்க திட்டம்? கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்களே கொட்டம்? என்று இவர்களைப் பார்த்து கேட்பவர்கள் ஜோக்கர் ஆகிவிடுவார்கள். மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தேவ் என்பவர், "நீதிபதி ஜெயந்த் பட்டேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைக் காப்பதற்காக முன்னின்று பணியாற்றிய உன்னதமான நீதிபதி. சட்டத்தை நிலைநாட்டும் அஞ்சாமையும், அறமும் கொண்ட முன்மாதிரி நீதிபதி. அவர் மத்திய அரசால் பழிவாங்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.


அவரைவிட பணிமுதிர்ச்சி குறைந்த, நான்கரை ஆண்டு இளையவர்கள் கூட தலைமை நீதிபதி பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய தகுதியும் உயர்ந்த நெறிகளும் கொண்ட ஜெயந்த் பட்டேல் ஏன் புறந்தள்ளப்பட்டார் என்ற கேள்வி எழுகிறது.மற்றொரு மூத்த வழக்குரைஞரான மோகன் கட்டர்க்கி, நீதிபதி ஜெயந்த் பட்டேலுக்கு உரிய பதவி உயர்வைத் தராமல் புறக்கணித்தது, நீதித்துறையில் ஆட்சியாளர்களின் தலையீட்டிற்கு அப்பட்டமான உதாரணம் என்று கூறியுள்ளார். பதவி உயர்வு நெறிமுறைகள்(?) நீதிபதிகளின் பணிச்சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் கூறியுள்ளார். நீதித் துறையின் மீது முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, சாந்திபூஷன் ஆகியோர் வைத்துள்ள கடும் குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.


குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்க (பார் அசோசியேஷன்) தலைவரான அசிம் பாண்டியா, "நீதிபதி ஜெயந்த் பட்டேலுக்கு மறுக்கப்பட்டுள்ள பதவி உயர்வு,சட்டத்தின் ஆட்சி மீது விழுந்துள்ள மரண அடி. நீதிபதிகள் தாங்கள் வழங்கிய நியாயமான தீர்ப்புகளுக்காக, ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவார்கள் என்றால்,குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ஏட்டில் மட்டுமே இருக்கும்" என்று கூறியிருப்பது மிகமுக்கியமான கருத்து. பாதகம் செய்வோரைக் கண்டு பயம் கொள்ளாமல் மோதி மிதிக்க வேண்டிய நீதி, பீதிமிகு மோதியிடம் மிதிபட்டு செத்துவிடக் கூடாது என்பதுதான் காந்திதேச குடிமக்களின் கவலைமிகு எதிர்பார்ப்பு...