டிசம்பர் 6 ஏன்? பயங்கரவாத எதிர்ப்பு நாள்...?

தலையங்கம்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயங்கரவாதச் செயலான பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ இந்த ஆண்டு ‘பயங்கரவாத எதிர்ப்பு நாள்’ ஆக அறிவித்து, மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக அழைப்பு விடுத்துள்ளது. இதில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், சமுதாய இயக்கங்களின் பிரதிநிதிகளும், மனித உரிமைப் போராளிகளும் பங்கேற்க உள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரமான தேசப்பிதா காந்தியின் படுகொலையும், இரண்டாவது பயங்கரவாதமான பாபரி மஸ்ஜித் இடிப்பும் ஒரே பின்னணி கொண்ட கொடிய கும்பலால் அரங்கேற்றப்பட்டவை ஆகும்.இன்று ஆட்சி அதிகாரத்தை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றி உள்ள இந்த சக்திகள், இந்திய அரசியல் சாசனம் மக்களுக்குத் தந்துள்ள ஒவ்வொரு உரிமையையும் ஒழிக்க களமிறங்கி விட்டனர்.


தான்தோன்றித்தனமாகத் தறிகெட்டு செயல்பட்டுவரும் இவர்களது ஆட்சியின் அலங்கோலங்களை நாட்டின் பொருளாதாரச் சரிவுகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும். அதை மறைப்பதற்கு மதவாத அரசியலைத் தூண்டி, மக்களைக் கூறுபோட்டு, மோதவிட்டு திசைதிருப்பும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


தங்களது பயங்கரவாத செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 450 ஆண்டுகால பாபரி மஸ்ஜிதை, பல்லாயிரம் பேர் முன்னிலையில் பட்டப்பகலில் இடித்துத் தகர்த்தனர். அந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கால்நூற்றாண்டாக போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ஏராளமான அறிவுஜீவிகளையும், மனித உரிமைப் போராளிகளையும் காவித்துவ பயங்கரவாதம் காவு வாங்கிவிட்டது.பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம், "கொடூரச் செயல்களை பகிரங்கமாக அரங்கேற்றி மக்களிடையே பீதியை உருவாக்குவதும், பயங்கரவாதிகள் மீதான ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.
காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை சங்பரிவாரத்தால் சாகடிக்கப்பட்ட அறிவுஜீவிகள் படுகொலைகளைப் பார்த்து நியாய உணர்வோடு செயல்படும் கருத்தாளர்கள் நெஞ்சம் கலங்க வேண்டும், அறத்திற்காகப் போராடுபவர்கள் அச்சத்தில் உறைய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் எதிர்பார்ப்பு.கொள்கைப் போராளிகளைக் கொல்லலாம் ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது என உணர்த்தும் வகையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களின் எழுச்சி அமைந்துள்ளது.


இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை எழுப்புவதற்காகப் போராடும் அதேநேரத்தில் சிதைக்கப்பட்டு வரும் தேசத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான மாபெரும் மக்கள் எழுச்சியையும் நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது.


செல்லாத நோட்டரசியல், கல்வியில் நீட்டரசியல், உணவில் மாட்டரசியல் என கொடுமையாளர்களின் கூடாரம், கூடாத கூட்டரசியல் செய்து கொக்கரித்து வரும் வேளையில், மாற்றரசியல் பேசும் மனிதநேய சக்திகள் ஓரணியில் திரண்டு, பாசிசத்திற்கு சாவுமணி அடித்து சமாதி கட்டும் வேலையைச் செய்தாக வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


சமூகத்தின் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் கூறுபோட்டு, கொலைத்தாண்டவமாடி, குருதிப் புனலால் குளத்தை நிரப்பி, வெற்றித் தாமரைகளை அதில் மலரச் செய்ய வேண்டுமென்பது சங்கிகளின் எதிர்பார்ப்பு.இதை முறியடிக்க, மனிதநேயத்தின் பெயரால் மக்களை அணிதிரட்டி, மதவாதத்தை முறியடிக்க களமிறங்கி விட்டது தமுமுக.


ஓரணி சேர்ந்து பேரணியாக தாரணி போற்ற தடங்களை அமைத்து மதவாதக் காரணியான கோரக்கும்பலை முறியடிக்கும் படை முன்னேறி செல்லட்டும். இதயங்களை இணைக்கும் இலட்சியம் வெல்லட்டும்.